சமூக சிந்தனை, உணர்வு, பொறுப்பு.... அப்படீன்னா....?!

ஒரு நாள் மதிய இளைப்பாறுதலுக்குப் பிறகு, கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தால், ‘நாம் வேறு இடத்திற்கு வந்து விட்டோமா’ என்ற சந்தேகம் வந்து விட்டது. Two-wheeler park மாதிரி காட்சி அளித்தது எங்கள் முற்றம்! அருகில் இருக்கும் வங்கிக்கு வரும் நபர்கள், மற்றும் வங்கி அதிகாரிகள் எங்கள் வீட்டை முழுவதுமாக மறைத்து, தங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். நாங்கள் அப்போது காரை வெளியே எடுத்து, வெளியூர் கிளம்ப வேண்டியிருந்தது. அங்கும் இங்கும் அலைந்து வாகன உரிமையாளர்களைக் கண்டு பிடித்து, அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதன் பேரில், சில, பல நிமிடங்கள் கழித்துத்தான் எங்களால் வெளியே கிளம்ப முடிந்தது. எங்கள் வீட்டு முற்றத்தில் மர நிழல் இருப்பதால், வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். அதில் தவறில்லை. ஆனால், எங்களுக்குத் தொந்தரவு தராத வகையில் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

நாம் பொதுச் சொத்தையும், மற்றவர்களின் சொத்தையும் நமது சொத்து போல நினைக்கிறோம்! மற்றவர்களுக்கு தொந்தரவோ, பாதிப்போ இல்லாத வகையில் நடந்து கொள்ள வேண்டாமா? எனக்கு சௌகர்யம் வேண்டும்; அவ்வளவுதான். ’யார் எப்படிப் போனால் எனக்கென்ன’ என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது.

நகராட்சி, தினசரி வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து எடுத்துச் செல்கிறார்கள். இருந்தும், சிலர், தெரு முனைகளில் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் சுகாதாரக் கேடு பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை. ஒரு வாளியிலோ, அட்டைப் பெட்டியிலோ அல்லது ஒரு பையிலோ போட்டு, அந்த இடத்தில் வைக்கலாமில்லையா? அம்மாதிரி இடங்களில், நகராட்சியும் பாதுகாப்பான முறையில் குப்பைத் தொட்டிகளை வைத்துப் பராமரிக்க வேண்டும்.

சிலர், கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவதைப் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் ஒப்பிடுவது, ’நம் நகரம் சிங்கப்பூர் போல இருக்க வேண்டும்’ என்று. எப்படி இது சாத்தியம்? வெளியே அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் நேரும் போது, பொதுக்கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நேரிடலாம். பூலோக நரகத்தை கண்கூடாகப் பார்க்கலாம், அங்கே! சரியாகப் பயன்படுத்தாதது ஒரு தவறு; சரியாகப் பராமரிக்காதது மற்றொரு தவறு.

மற்றொரு தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வு, ‘திடீர் சாலை மறியல்’. என்னதான் பிரச்னை என்றாலும், அதை முறைப்படி அணுகுவது தான் சிறந்தது. சாலை மறிக்கப்படும் போது, அதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. சிலர் வேலையை இழக்க நேரிடலாம்; சிலரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்படலாம். அதிகாரிகள் வந்து மறியலுக்கான பிரச்னையைப் பேசி தீர்த்து வைத்து விடுவார். ஆனால், அந்த மறியல் நேரத்தில் நடந்த சிலரது பாதிப்புகளுக்கு பதில் என்ன....?

நமது எண்ணங்களும், அணுகுமுறையும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சார்ந்திருக்கும் சமூகம் நல்லபடியாக இயங்க முடியும். நாம் எப்போதும் நமது ’உரிமை’ பற்றியே நினைக்கிறோம்; நமது ‘கடமை’ பற்றி சிந்திப்பதில்லை. அது மாற வேண்டும்.

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Civic Sense....! What....?" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?