நாம் பொதுவாகவே சட்டத்தை மதிப்பதில்லையா....?
எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் நாம் சட்டத்தை மீறுவதற்குத் தயங்குவதில்லை என்பதே கசப்பான உண்மை. நம்மில் அநேகம் பேர் இப்படித்தான். இந்தப் பழக்கம் நமது பள்ளிப் பருவத்திலிருந்தே துவங்கி விடுகிறது. கல்லூரி நாட்களில் கேட்கவே வேண்டாம்! ‘இளமையின் வேகம்’, ‘நம்மை யார் என்ன செய்து விட முடியும்’ என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து, எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் சட்ட திட்டங்களை மதிக்காமல் இருக்கக் கற்றுக் கொள்கிறோம். அதனால் மற்றவர்களுக்கு, தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை.
இந்த ‘கொரோனா’ தீநுண்மி பரவ ஆரம்பித்த சமயத்தில், ஊரடங்கு அமுலில் இருக்கும் பொழுது, ஒரு ஊரில், ஒரு நபர், காவல் அதிகாரியிடம், ‘எங்கே அந்த virus; எனக்குக் காட்டுங்கள்; அப்பொழுதுதான் நான் நம்புவேன்’ என்று வீராவேசமாகப் பேசிய காணொலியை நம்மில் நிறையப் பேர் பார்த்திருக்கலாம். விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து இறங்குவோரிடம் சோதனை நடத்தச் செய்திருந்த ஏற்பாட்டை எத்தனையோ பேர் தவிர்த்து வெளியே வந்தார்கள். அதனால், அவர்களுடன் தொடர்பு கொள்வோருக்கு வரப் போகும் ஆபத்தைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
அரசாங்கம் எந்த ஒரு தேதி நிர்ணயித்து, அந்தத் தேதிக்குள் குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய வேண்டும் (உதாரணத்திற்கு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தல்) என்று சொன்னால், நாம் அந்தத் தேதியை அரசாங்கம் 2 அல்லது 3 முறையாவது நீடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். தேசிய நெடுஞ்சாலைகளில் ‘வரி’ செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் fastag முறைக்கான தேதி இதுவரை எத்தனையோ முறை நீட்டிக்கப்பட்டு விட்டது. பல லட்சங்கள் செலவில் கார் வாங்கும் நபர், ஒரு சின்ன ஏற்பாடு செய்ய முயற்சி செய்வதில்லை! பெரிய வாகனங்களுக்கான fastag sticker-ஐ வாங்காமல், காருக்குண்டான sticker-ஐ வாங்கி லாரியில் பொருத்துபவர்களும் உண்டு. எப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் என்று, நாம் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கும் திறமை வாய்ந்தவர்கள்!
இரு சக்கர வாகனங்களில் ‘தலைக் கவசம்’ அணிந்துதான் செல்ல வேண்டும் என்ற விதியை அநேகமாக 75% பேர் புறக்கணிக்கிறார்கள். Helmet, வாகனத்தின் petrol tank மீது (அதற்குப் பாதுகாப்பாக) அமர்ந்திருக்கும். வண்டியை ஓட்டும் நபர், தலைக் கவசம் அணியாத பட்சத்தில் வண்டி start ஆகாத மாதிரி, வண்டியை வடிவமைக்க வேண்டும். காவல் அதிகாரி இல்லாத இடத்தில், ‘சிவப்பு விளக்கு’ எரிந்தாலும், அதைத் தாண்டி வாகனத்தைச் செலுத்துபவர்களும் உண்டு. அவ்வளவு அவசரம் அவர்களுக்கு!
கண்ட கண்ட இடங்களில் குப்பையைக் கொட்டுவதும், சாலைகளில் எந்தப் பொருளானாலும் வீசி எறிவதும் நமக்குக் கைவந்த கலை. புகையிலை அதிகமாகப் பயன்படுத்தும் மக்கள் வாழும் சில ஊர்களில், சாலைகளிலும், சுவர்களிலும் ‘எச்சில்’ இல்லாத இடமே இருக்காது. நாம், நமது ஊர், சிங்கப்பூர் போல மாற வேண்டும் ஆசைப்படுவோம்....
வருமான வரி கட்ட வேண்டிய எத்தனையோ பேர், அதைப்பற்றிக் கண்டு கொள்வதேயில்லை. மாதச் சம்பளம் வாங்கும் நபர்களுக்கு சம்பளம் கொடுக்கும் இடங்களிலேயே வருமான வரி பிடிக்கப்படுகிறது. மற்றப்படி, வியாபார நிறுவனங்கள் எத்தனையோ, வரி கட்ட வேண்டியதிருந்தும், சரியாகக் கட்டுவதில்லை. அதே மாதிரி நிறைய ‘தொழிற்பண்பட்டவர்’ (professionals), சுய சம்பாத்தியமாக நிறைய வருமானம் இருந்தும், சரியாக வருமான வரி கட்டுவதில்லை.
யாரும் கவனிக்கிறார்களோ இல்லையோ, நாம், நமது மனச்சாட்சிப்படி சட்ட திட்டங்களை மதித்து நடக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இப்படி நினைத்தால், நாடும், உலகமும் மிக நன்றாக இருக்கும். மாற்றம் எப்போதுமே நம்மிடமிருந்தே ஆரம்பமாக வேண்டும்.
Comments
Post a Comment