எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்.....
”எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே....” - இந்தப் பாடல் இடம் பெற்ற தமிழ்ப்படம் ‘மலைக்கள்ளன்’. இந்தப் பாடல் வெளி வந்து சுமார் 67 ஆண்டுகள் கடந்தும், இன்றும் இதே நிலை தான் நீடிக்கிறது. சொல்லப் போனால், இன்னும் அதிகமாகவே ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. “ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்”.
சமீபத்தில் ஒரு செய்தி - ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என்று அழைக்கப்படும் இருவர், சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது; ஏன் சாத்தியமானது? ஏமாந்தவர்களில் சிலர், விவரம் அறியாதவர்களாக இருக்கலாம்; மற்றவர்கள் செய்வதைப் பார்த்து தாங்களும் ஏமாந்திருக்கலாம். ஆனால், ஏமாந்தவர்களில் மிகவும் அதிகமான நபர்கள், தங்களது ‘பேராசை’யினால் மட்டுமே, உள்ளதை இழந்து புலம்புகிறார்கள். என்னைப் பொருத்தவரை, ஏமாந்தவர்களைத்தான் அதிகமாகக் குறை கூறுவேன். இன்றைக்கு சாதாரணமாக எல்லா வங்கிகளும், வைப்புத் தொகைக்கு 5-லிருந்து 6% வட்டிதான் கொடுக்கிறார்கள். ஏமாற்றிய சகோதரர்கள் 24% வட்டி தருகிறோம் என்றால், கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா - இது சாத்தியமா, இல்லையா என்று. ஆசைப்படுவதில் தவறில்லை; ஆனால், பேராசைப்பட்டார்கள்; உள்ளதையும் இழந்து தவிக்கிறார்கள்.
சில வருஷங்களுக்கு முன், ‘பல நிலை சந்தைப்படுத்துதல்’ (multi-level marketing) என்ற ஒரு வழிமுறை மக்களிடையே மிகவும் பிரபலமாகி இருந்தது. மாற்றொரு வியாபார மோசடி, 'ponzi scheme' என்று அழைக்கப்பட்டது. இதன் மூலமும் ஏராளமான மக்கள் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்தார்கள். ஈமு கோழி வளர்ப்பு என்ற ஒரு மாய அலை வீசியது சில ஆண்டுகளுக்கு முன். இப்படி எத்தனையோ ஏமாற்று வழிமுறைகள்.... இன்றைக்கும், அவ்வப்போது மேலே கூறிய வழிமுறைகளில் ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்று மக்கள் மிகவும் முன்னேறி விட்டார்கள் - ஏமாற்றுவதில்! எத்தனை எத்தனை வழிமுறைகள்; அடேயப்பா...! ‘போலி டாக்டர்கள்’ தெருவுக்குத் தெரு மருத்துவமனை நிறுவி நடத்தி வருகிறார்கள். அரசாங்க அதிகாரியாக வேஷமிட்டு, எத்தனையோ எளிய, விவரம் அறியாத மக்களை தினமும் ஏமாற்றுகிறார்கள். பெரிய பெரிய பண முதலைகள், மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு, பேராசை பிடித்த வங்கி அதிகாரிகளின் துணையோடு, கோடிக்கணக்கான ரூபாயை ஏப்பமிடுகிறார்கள். அவர்கள் வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்று நாடற்ற அநாதைகளாக வாழ்கிறார்கள். பணம் மட்டும் இருந்தால் போதுமா...., மானம், மரியாதை இழந்து கேவலமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
கணவன், மனைவியை ஏமாற்றுவதும், மனைவி கணவனை ஏமாற்றுவதும், சர்வ சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன இன்று. அதனால் நிகழும் கொலைகள் ஏராளம். ’வேலியே பயிரை மேய்வது’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். வங்கி அதிகாரிகளே, சில தில்லுமுல்லு வேலைகள் செய்து வங்கியிலிருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். சமூக வலைத்தலங்களில், முகம் தெரியாத நபர்களுடன், அவர்களது ‘பொய்’யான முகத்தைப் பார்த்து ஏமாந்து லட்சக்கணக்கான பணத்தை ஏமாந்தவர்களைப் பற்றித் தினமும் அறிகிறோம். இதில்தான் எத்தனை எத்தனை வகைகளில் ஏமாற்றுகிறார்கள்!
நான் மேலே கூறியபடி, பேராசையினால் ஏமாறுபவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. அவர்கள் ஏமாறுவதற்குத் தகுதியானவர்கள் தான். ஆனால், அறியாமையினால் ஏமாறுபவர்களை என்ன செய்வது? விழிப்புணர்வு பெற வேண்டும். ’நேர்மை’ என்றால் என்ன என்று கேட்கும் காலம் வந்து விட்டது.
Comments
Post a Comment