வாழ்க்கையின் சில ‘தர்மசங்கடமான’ வேலைகள்..., தருணங்கள்...

நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வேலைகளைச் செய்கிறோம் - பிரியப்பட்டோ, பிரியமில்லாமலோ...., தொழில்நிமித்தமாகவோ..., வேறு வழியே இல்லாமாலோ..., - இப்படி எத்தனையோ... அவ்வாறு செய்யும் போது சில தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சிலவற்றைப் பார்க்கலாம்....

ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருப்பது (அதுவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொறுப்பில் இருப்பது) மிகவும் தர்மசங்கடமான பொறுப்பு. அதுவும், கட்சித்தலைவர் சில சமயம் பொறுப்பின்றி ஏதாவது உளறி வைத்தால், அதை நியாப்படுத்தி பத்திரிகைகளுக்கும் மற்ற ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க வேண்டும். தலைவர் செய்த தவறை அவரிடம் சுட்டிக்காட்டவும் முடியாது (ஏனென்றால், அவர் கட்சியின் மிகப் பெரிய தலைவராக இருப்பார்).

‘மெகா சீரியல்’ எழுத்தாளர், மற்றும் இயக்குனர் வேலை மிகவும் கடினமானது. ‘கதை’ என்று ஒன்று இல்லாமலேயே சுமார் 2000 episodes (சுமார் 6 - லிருந்து 7 வருடம்) ஓட்ட வேண்டும். அதுவும், ஒவ்வொரு நாளும் (அதாவது சுமார் 20 நிமிடம் ஓடும் கதை(!)யை) episode முடியும் போது ஒரு suspense-ஓடு முடிக்க வேண்டும். அதாவது மறுநாள் ஒளிபரப்பாக இருக்கும் episode-ஐ மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமாம்!!! (மெகா சீரியல் பார்ப்பது மாதிரி ஒரு கொடுமை கிடையாது...)

பொதுமக்களுக்கு நன்மை செய்யக் கூடிய....., அதிகாரம் நிரம்பிய அலுவலகத்தில், ‘நேர்மையான பொறுப்பாளராக’ இருப்பது மிகவும் சிரமமான விஷயம் (கத்தி மேல் நடக்கும் வேலைக்குச் சமம்). அவரை லஞ்சம் வாங்க வைக்க மற்றவர்கள் பல வழிகளில் முயற்சி செய்வார்கள். அவரைக் கட்டாயப்படுத்தலாம்...., பயமுறுத்தலாம்...., அவருக்கு சலனத்தை (temptation) ஏற்படுத்த வழி செய்யலாம்.... இந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்து நேர்மையாக நடந்து கொள்வது அநேகமாக முடியாத காரியம் (nearly impossible).

ஒரு காலனியிலோ....., ஒரு பெரிய பங்களாவிலோ......, அல்லது ஒரு அலுவலகத்திலோ ‘இரவுக் காவலாளி’யாக வேலை செய்வது...., நிறையப் பேருக்கு சிரமமான காரியம். என்னதான் அவர் பகலில் தூங்கி எழுந்தாலும், இரவு சற்று நேரமாவது கண் அயராது இருக்க மாட்டார். உட்கார்ந்து கொண்டே தூங்குவார்! நின்று கொண்டே தூங்கும் காவலாளியும் உண்டு!! பொதுவாக ஒரு வசனம் சொல்வார்கள் - ‘நமது இடத்தில் தூங்குபவர் பெயர்தான் இரவுக் காவலாளி’.

ஒருவர், பணம் சேர்ப்பதிலோ, புகழ் அடைவதிலோ மிகுந்த உச்சத்தை அடைகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், தன்னிடம் சேர்ந்த (தேவைக்கு மிகவும் அதிகமான) பணத்தையும், புகழையும் தக்க வைத்துக் கொள்ள எந்தச் செயலிலும் ஈடுபடத் தயங்க மாட்டார். இதுதான் நிறைய பணக்காரர்களின் நிலை. அதீதமான பணத்தையும் புகழையும் சரியான வழியில் கையாள, உலகில் பலருக்குத் தெரிவதில்லை. நாம் நினைப்பது போல அது எளிதான காரியமும் அல்ல... புகழும், தேவைக்கு அதிகமாகச் சேர்ந்த பணமும் அவர்களது தலைக்கு ஏறி, அவர்களைக் கெடுத்து விடும். இது நிதர்சனமான உண்மை.

பாதிப்பு இல்லாத பழக்கமாகத் துவங்கும் ‘கெட்ட பழக்கம்’ (குடிப் பழக்கம், போதைக்கு அடிமை, சூதாட்டம்), நாளடைவில், பூதாகரமான அளவுக்கு வளர்ந்து விடும். அதன் பிறகு, அதைக் கட்டுப்படுத்தி, மனிதன் பழைய நிலைக்கு மாறுவது அநேகமாக 99% சாத்தியமில்லை. அதிலிருந்து மீள்வது என்பது ‘பகீரதப் பிரயத்னம்’ இருந்தாலொழிய சாத்தியமில்லை...

நம்மில் பலர், ‘புத்தாண்டு தீர்மானம்’ எடுக்கும் வழக்கத்தை உடையவர்கள். அதாவது, ‘நான் இந்த ஆண்டிலிருந்து, புகைப் பழக்கத்தைக் கை விட்டு விடுவேன். சிகரெட்டைக் கையில் கூடத் தொட மாட்டேன்’ - இப்படித் தீர்மானம் எடுத்த நிறையப் பேர் அன்று மாலையே சிகரெட் பிடிப்பதைக் காணலாம். அந்தத் தீர்மானத்தில் வெற்றி பெறுபவர் அநேகமாக 1% பேர் மட்டுமே....

ஒருவர், ஒரு குறிப்பிட்ட துறையில் படிப்படியாக புகழின் உச்சிக்கே சென்று விடுகிறார். (அதைத் தக்க வைத்துக் கொள்வதே கடினம்). அதே நபர், தனது இந்தத் துறையின் புகழைக் கொண்டு (அவருக்குக் கொஞ்சமும் பரிச்சயமில்லாத) வேறு துறையிலும் தன்னால் சாதிக்க முடியும் என்று ‘தலைக் கனம்’ கொள்கிறார். அந்தப் புதிய துறையில், ஏற்கனவே புகழின் உச்சியில் இருக்கும் நபர்கள் இவரைப் படுகுழியில் தள்ள என்ன என்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் செய்து, தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்வார்கள். நமது நபர், புதிய துறையில் தோல்வி கண்டு, அவமானப்பட்டுத் திரும்புவார். இது நாம் அன்றாடம் வாழ்க்கையில் காணும் காட்சி...


Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

The most-abused gadget...