நீங்கள் தாமரை இலைத் தண்ணீரா....?

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு - oxymoron - தமிழில் இதற்கு அர்த்தம் - ’முரண்பாடு உள்ளது போல் இருக்கும் சொல் அடுக்கு’. எதிர்மறையான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய இரண்டு வார்த்தைகள்; ஆனால், அவை ஒன்று சேர்ந்து மொத்தத்தில் வேறு அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியது.  உதாராணம் : Open secret (வெளிப்படையான ரகசியம்), small crowd (சிறிய கூட்டம்). மற்றொரு உதாரணமாக, ’Detached attachment’ - ’பிரிக்கப்பட்ட இணைப்பு”. அதாவது, இணைப்பானது, பிரிக்கப்பட்ட நிலையில் இருப்பது - தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்குமோ, அது மாதிரி.....!

நாம் எப்போதுமே, உலக விஷயங்களில் நம்மைக் கெட்டியாக இணைத்துக் கொள்கிறோம். அதிலிருந்து பிரிய நேர்ந்தால், நமது உயிரே போய் விடும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். உதாரணத்திற்கு, நமது '‘கைபேசி’. இன்று உள்ள இளைஞர்களுக்கு (சில பெரியவர்களுக்கும் கூட...!) தங்களது கைபேசியைப் பிரிந்து சில நிமிஷங்கள் கூட இருக்க முடிவதில்லை. வயதான பெரியவர்கள் எப்படி கைபேசி இல்லாமல் அந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள் என்று ஆச்சர்யமாய்க் கேட்கிறார்கள். தங்களது உடலின் ஒரு அங்கமாக கைபேசி ஆகிவிட்டது இன்று.

அதே போன்று சிலருக்கு தங்கள் வீடு, கார், விலை உயர்ந்த பேனா.... இத்யாதி, அவர்களது உயிர் போன்றவை. தங்களது வாழ்க்கைத் துணைவியை விட இவைகளை அதிகமாக நேசிப்பார்கள்.......

மனிதப் பிறவிதான் உலகிலேயே மிகவும் அதிசயமான பிறவி. தங்களுக்கு முடிவே கிடையாது என்பது போல (நினைத்துக் கொண்டு), உலகப் பந்தத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். பொருள் சுகம் (material comfort) ஓரளவுக்கு அவசியமே. ஆனால், நாம் அவைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கக் கூடாது. அவை கிடைக்கும் வேளையில் அவைகளை அனுபவிக்கலாம். ஒரு வேளை (ஏதோ காரணத்தினால்) கிடைக்கவில்லையா, அதற்காகக் கவலைப்படாமல், அவை இல்லாமல் சந்தோஷமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். எதுவுமேயில்லாமல் தனியாகத்தான் உலகத்தில் பிறந்தோம்; ஒன்றுமேயில்லாமல்தான் இந்த உலகத்தை விட்டுப் பிரியவும் போகிறோம் (எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி....). இதை நினைவில் கொண்டு, நமக்கு ஞாயமாகக் கிடைப்பதை அனுபவிப்போம்; நமக்குக் கிடைக்காததை, அவை நமக்கானவை அல்ல என்று நம்பி, சந்தோஷமாக வாழக் கற்றுக் கொள்வோம். வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதே எல்லாவற்றையும் விட முக்கியம்.

நமது உறவுகளிடமும், நட்பு கொண்டோருடனும் இவ்வாறே (தாமரை இலைத் தண்ணீர் போல) பழக வேண்டும். நாம் உயிராக மதிக்கும் சொந்தம் என்றாலும், உயிருக்கும் மேலாக மதிக்கும் நண்பர்கள் என்றாலும், இதே கோட்பாடுடன் தான் பழக வேண்டும். அப்போதுதான், ஏதோ ஒரு காரணத்தினால், சொந்தங்களும், நண்பர்களும் பிரிய நேரும் போது, நம்மால் அதை (பிரிவை) தாங்கிக் கொள்ள முடியும். இது எப்பேர்ப்பட்ட சொந்தங்களுக்கும் பொருந்தும்.

இந்தக் காலக் கட்டத்தில், பொதுவாக ஒரு குழந்தையோ அல்லது, இரு குழந்தைகளோதான் ஒவ்வொரு தம்பதியினரும் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே, அவர்கள் மீது தங்கள் உயிரையே வைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்களாகி, நண்பர்கள் சேர்கிறார்கள்; ஒரு கட்டத்தில், திருமணமும் நடக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் ஆனபின், அவர்களிடம் மாற்றம் தென்படும் போது (அதாவது நம் மீது குழந்தைகள் வைத்திருக்கும் அன்பும் பாசமும் குறையும் போது) பெற்றோர்களாகிய நாம் நொறுங்கி விடுகிறோம். எந்த உறவின் தன்மையும் நிரந்தரமானதல்ல; காலப் போக்கில் மாறக்கூடியவை. இதை உணர்ந்து, நம்மை நாமே, அந்த உறவுகளிடமிருந்து பிரிவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

நமது பிணைப்பு, எந்த நேரமும் (பிரிவு நேரும் சமயம்), தயாராக இருக்க வேண்டும் - பிரிந்து செல்வதற்கு. மனதளவில் நாம் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். நாம் உடைந்து நொறுங்கி விடக் கூடாது, எந்த சூழ்நிலையிலும்...

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Detached Attachment" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?