ஏன், எனக்கு மட்டும் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வருது....?

நம்மில் சிலர் எப்போதும் இப்படிப் புலம்புவதைக் கேட்டிருப்போம் - ”எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டமா வந்துக்கிட்டிருக்கு...”? எப்போதெல்லாம் அவர்கள் ஏதாவது பிரச்னையைச் சந்திக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி, ‘ஏன் எனக்கு மட்டும் இந்தப் பிரச்னை’? தனக்கு மட்டுமே எல்லாப் பிரச்னைகளும் வருவதாகக் கற்பனை செய்து கொள்வார்கள்.

ஆர்தர் ஆஷ் என்று ஒரு பெரிய டென்னிஸ் (Tennis) வீரர் இருந்தார். அவர் உலகப் புகழ் பெற்ற ‘விம்பிள்டன் டென்னிஸ்’ போட்டியில் வென்றிருக்கிறார். சில காலம் கழித்து, அவருக்கு AIDS நோய் வந்து விட்டது. ஒரு பழுதுபட்ட ரத்தப் பரிமாற்றத்தின் போது அந்த நோய் அவரைத் தாக்கியது. எல்லோரும் அவரிடம் பரிதாபமாகக் கேட்டார்கள், ‘ஏன் உங்களுக்குப் போய் இந்த நோய் வர வேண்டும்’? அதற்கு அவர் கூறிய பதில், மிகவும் பிரசித்தமானது. ‘கோடான கோடி மக்களிடையே, சில லட்ச மக்களே நல்ல டென்னிஸ் வீரர்களாக உருவெடுக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்ட சிலரே உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக ஆகிறார்கள். அவர்களுள் முதன்மையான வீரனாக ‘விம்பிள்டன் போட்டியில்’ ஜெயித்திருக்கிறேன். இது கடவுளின் கருணையில்லையா? ஜெயித்த போது ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு முதன்மையான இ்டம்’ என்று கேட்கவில்லையே! அப்படியிருக்க, இந்த நோய் வந்ததும், அதற்காகக் கடவுளைக் குறை கூறலாமா”? (சில வருடம் கழித்து அவர் இறந்து விட்டார்).

நமக்கு நல்லது நடக்கும் போது, நாம் அதை நமக்கு வர வேண்டிய ஒரு விஷயமாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றிக் கேள்வியே கேட்பதில்லை. ஆனால், ஒரு சின்ன சறுக்கலைச் சந்தித்தால் போதும்; உடனே, ‘நான் தான் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக் கட்டையான ஆள்’ என்று புலம்பி விடுவோம். சறுக்கல்களும், எதிர்பாராத சவால்களும் நம்மை அணுகும் போது, நமக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக இவை நடக்கின்றன என்று நம்ப வேண்டும். இம்மாதிரிச் சூழ்நிலைகள் நம்முள்ளே ஒளிந்திருக்கும் பலத்தை வெளிப்படுத்தி பிரச்னைகளுக்கான வெகு நேர்த்தியான விடைகளைக் கொடுக்கும். நாம் முன்னை விட அதி நேர்த்தியான மனிதர்களாகத் திகழ, இவை நமக்கு நல்ல வாய்ப்பாக அமையும். இவைகளைப் பிரச்னைகளாகப் பார்க்காமல், வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்.

சிலருக்கு, அவர்களுடைய பிரச்னைகளைப் பேசுவதிலேயே ஒரு அலாதி சுகம் இருக்கும். அப்படிப் பழகி விடுகிறார்கள். பிரச்னைகள் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது....!

நாம் எப்போதும் நம்மை விடச் சிறந்த, உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மனம் வெதும்பிப் போகிறோம். அந்த நபர்களுக்கு உள்ள பிரச்னைகளைப் பற்றி நமக்குத் தெரியாது. அவை வேறு விதமான (நமக்குப் பரிச்சயமில்லாத) பிரச்னைகளாக இருக்கும். பிரச்னைகள் இல்லாத மனிதர்களே உலகில் கிடையாது. பிரச்னைகளின் தன்மையும், அளவும் மாறும்; அவ்வளவுதான்.

இதை விவரிக்க ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு ஊரில் ஒரு நாள் ஒரு அசரீரிக் குரல் கேட்டது; ’எல்லோரும் தங்கள் தங்கள் பிரச்னைகளை மூட்டையாகக் கட்டி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர வேண்டும்’ என்று. எல்லோரும் அதன்படியே செய்தார்கள். ஒவ்வொருவருடைய மூட்டையின் அளவும், கனமும் வேறு வேறாக இருந்தன. மீண்டும் அசரீரி சொன்னது, ‘இப்போது விளக்கு அணைக்கப்படும். யார் வேண்டுமானாலும் வேறு யாருடைய மூட்டையையாவது எடுத்துச் செல்லலாம்’. எல்லோரும் யோசிக்க ஆரம்பித்தார்கள். ‘நமது மூட்டையில் இருக்கும் பிரச்னைகள் நமக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை அடுத்தவர் மூட்டையில் நமது பிரச்னையை விடப் பெரிய பிரச்னையாக இருந்தால் என்ன செய்வது?’ எனவே, எல்லோரும் அவரவர் மூட்டையைத் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றார்கள்.

தங்கத்தைப் புடம் போடுவதும், வைரத்தைப் பட்டை தீட்டுவதும், அவைகளின் மேன்மையை வெளிப்படுத்தவே என்பதை உணர்வோம். எனவே பிரச்னைகளை, பிரச்னைகளாகப் பார்க்காமல், சவால்களாக ஏற்று, அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டு பிடித்து, முன்னேறிச் செல்வோம்...

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site) பதிவேற்றம் (upload) செய்திருந்த ’Are you having the most number of problems...? என்ற வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் பதிவேற்றம் செய்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.


Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?