நாம் பொதுவாகவே ‘பொய்யர்களா’....?

ஒரு சினிமா காட்சி - ஒரு பெண்ணின் தகப்பனார், மாப்பிள்ளை பார்க்கச் செல்கிறார். மாப்பிள்ளை சொல்கிறார், ‘ எனக்கு அரசாங்க உத்தியோகம்; நல்ல சம்பளம்; குடி, புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது.... ஆனால், ஒரே ஒரு கெட்ட பழக்கம், நான் நிறைய பொய் சொல்லுவேன்’. ஆகவே, அவர் ஏற்கனவே கூறிய அவ்வளவும் பொய் என்றாகி விடுகிறது. மாப்பிள்ளை பார்க்க வந்தவர் ஓடியே போய் விட்டார்!

மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவரும், எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால், உலக வாழ்க்கையில் எல்லோருக்கும் இது சாத்தியமாகிறதா என்றால், ‘இல்லை’ என்பதே உறுதியான பதில்.

’பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்’ - திருக்குறள்

பொருள் - குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால், உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

நாம் எந்நேரமும் உண்மையே பேச வேண்டும் என்றாலும் மேற்சொன்ன குறளின்படியான நேரங்களில் பொய் சொல்வதில் தவறில்லை. ஒரு மனிதன் சில போக்கிரிகளிடமிருந்து தப்பிக்க வேண்டி, ஒருவர் வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான். அந்தப் போக்கிரிகள் வந்து வீட்டுக்காரரிடம் கேட்கும் போது, அவர் யாரும் அங்கு வரவில்லை என்று ‘பொய்’ சொல்கிறார். இந்த இடத்தில் அவரது பொய் நன்மையே விளைவிப்பதனால், அது தவறில்லை.

வியாபாரத்தில், சில பொய்கள் வெகு சாதாரணமாக பேசப்படுகின்றன. அவை பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும் வரை அதில் தவறில்லை. ‘விளம்பர உலகத்தில்’ பொய்யே பிரதானமாக பயன்படுகிறது. இல்லாததை இருப்பதாகக் காண்பிப்பதும், மிதமாக உள்ளதை அதீதமாகக் காட்டுவதிலும் விளம்பரதாரர்கள் வல்லவர்கள். நாம் தான் அதன் உண்மைத் தன்மையை அறிந்து அதன்படி அந்தப் பொருட்களை உபயோகிக்க வேண்டும்.

இன்று எல்லா ஊடகங்களிலும், சுமார் 80% பொய்யான தகவல்களே வருவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஆகவே பார்க்கும் எல்லாவற்றையும், கேட்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம்.

உண்மையையும், பொய்யையும் சம அளவில் பார்க்கக் கூடிய மற்றொரு இடம், நமது நீதிமன்றம். ‘நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறு இல்லை’ என்று சத்தியப் பிரமாணம் செய்தும், குற்றவாளியின் தரப்பில் கூறப்படும் அநேக தகவல்கள் பொய்யானவையே. பெரும்பாலான வழக்குகள் சாட்சியங்களின் வலிமையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

பொய்யும் புரட்டும் அதிகமாகக் காணப்படும் மற்றுமொரு களம், அரசியல். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் யார்? நம்மைப் பொன்ற மக்கள் தான் என்பதை மறக்கக் கூடாது. நாம் மாறினால், அரசியலும் மாறும்.

ஒரு கற்பனைக் கதை - ஒரு போட்டி - யார் மிகப் பெரிய பொய் கூறுகிறார்களோ, அவர்களுக்குப் பரிசு. ஒருவன் கூறினான், ‘நான் 3 வயதாகும் போதே, இமய மலை சிகரத்தைத் தொட்டேன்’ என்று. மற்றொருவன் கூறினான், ‘நான் 100 மீட்டர் தூரத்தை 7.85 விநாடிகளில் ஓடினேன்’ என்று. கடைசியியாக வந்தவன் கூறினான், ‘நான் வாழ்நாளில் பொய்யே சொன்னது கிடையாது’ என்று. கடைசியில் வந்தவன் சொன்ன பொய்யே பெரிய பொய் என்று பரிசு அளிக்கப்பட்டது.

எனக்கு சமீபத்தில் whatsapp-ல் வந்த செய்தி ;
பொய் சொல்லுதல் - குழந்தைக்கு, அது பாவம்;
வயது வந்தோருக்கு, அது தவறு;
காதலனுக்கு, அது ஒரு கலை;
வக்கீலுக்கு, அது தொழில்;
அரசியல்வாதிக்கு, அது அவசியம்;
முதலாளிக்கு, அது நிர்வாகத் தந்திரம்;
பிரம்மச்சாரிக்கு, அது ஒரு ‘ஜெயம்’;
தொழிலாளிக்கு, அது ஒரு ‘சால்ஜாப்பு’;
திருமணமானவனுக்கு, அதுவே பிழைக்கும் வழி....

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site) பதிவேற்றம் (upload) செய்திருந்த ’Are we habitual liars...?' என்ற வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் பதிவேற்றம் செய்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?