பெண்களைக் கொண்டாட வேண்டுமா....?

பெண்களைக் கொண்டாட வேண்டுமா? உறுதியான, வலுவான, ஆணித்தரமான பதில்: ‘ஆமாம்’ என்பதே. பல காரணங்களை வைத்துத்தான் இப்படிச் சொல்கிறேன். வாழ்க்கை முழுவதும் சொல்ல முடியாத அளவுக்கு வலிகளையும் (இயற்கையான), வேதனைகளையும் (செயற்கையான) தாங்கி, அவற்றிலிருந்து மீண்டு வந்து, பல அரிய சாதனைகளைச் செய்கிறார்கள். பெண்கள் சாதிக்காத ஏதாவது ஒரு துறையைக் குறிப்பிட முடியுமா? நிச்சயமாக முடியாது. மிக வலிவான மனதுடைய எந்த ஆணையும் விட பல மடங்கு வலுவான மனமுடையவளே பெண்.

பண்டைய காலம் தொட்டு, இந்தக் காலம் வரை வாழ்வில் மிகப் பெரிய வெற்றிகளை, சர்வ சாதாரணமாக அடைந்த பல பென்களை உதாரணமாகக் காட்ட முடியும். கருணைக்கும், மனித நேயத்துக்கும் உலகத்துக்கே உதாரணமாக விளங்கிய ‘அன்னை தெரஸா’, மற்றும் எத்தனையோ பேர். ஒருவரைக் குறிப்பிட்டு, வேறு பலரை விட்டு விட விரும்பவில்லை. எல்லாமே உங்களுக்கும் தெரிந்திருக்கும். இதில் விசேஷம் என்னவென்றால், பல தடைகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எதுவுமே அவர்களுக்கு தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படவில்லை.

கணவனை இழந்த அல்லது கணவனிடமிருந்து பிரிந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளை மிக நல்ல முறையில் வளர்த்து, ஆளாக்கி, அவர்களது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார்கள். அதே இடத்தில் ஒரு ஆண் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமா என்றால்...., சந்தேகம் தான்.

நமது வாழ்வில் நாம் பழகிய நமது குடும்பத்துப் பெண்களையும், அவர்களோடு நமது தொடர்பையும் நினைத்துப் பாருங்கள். பாட்டி, அம்மா, சகோதரி, மனைவி, மகள், மருமகள், பேத்தி..... பாட்டியிடம் தனிப்பட்ட அன்பையும், அரவணைப்பையும் அனுபவிக்காத பேரன் உண்டா? என்ன இடர்ப்பாடு, எந்த வயதில் வந்தாலும், ஆண் முதலில் தேடுவது அம்மாவின் மடியைத்தானே! நமக்கு வரும் துன்பத்தில் பங்கு பெறுவது அநேகமாக நமது சகோதரியாகத்தான் இருக்கும் (சகோதரனை விட).

‘தாய்க்குப் பின் தாரம்’ என்பது வழக்கு மொழி. ஆணின் கடைசி காலம் வரை துணையாக இருப்பது மனைவி மட்டுமே. ஒரு ஆணுக்கு வாழ்க்கையின் பெரிய தண்டனை எதுவென்றால், மனைவி இறந்து தான் தனியே வாழ வேண்டிய நிலை ஏற்படுவது. மனைவி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு பொறுப்பைச் சுமக்கிறாள். கணவனுக்கு வேண்டியைவைகளைக் கவனிப்பது, பிள்ளைகளை நல்லபடியே வளர்ப்பது, வீட்டு நிர்வாகத்தை செவ்வனே கவனிப்பது, இப்படி எவ்வளவோ....! கணவனுடன் அதிக காலம் செலவழிப்பது மனைவி மட்டுமே. ஆண் ஒரு வயதுக்குப் பின், எல்லாவற்றிற்கும் (சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட) மனைவியையே எதிர்பார்க்கிறான். அவளின்றி அவனால் வாழவே முடியாது. உலகில் மிகவும் பாக்கியசாலி, நல்ல மனைவி அமையப் பெற்றவன் தான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

குடும்ப விஷயங்களை மனம் விட்டுப் பேச சரியான நபர், மகள் தான் (மகன் கிடையாது). மகளின், அப்பா மீதான பாசம் என்றுமே குறைவதில்லை (திருமணமான பிறகும்). மகள் ஸ்தானத்தில் பின்னர் மருமகள் அமருவார். பேத்திக்கும், தாத்தாவுக்கும் இடையே ஆன பாசத்தை விவரிக்க முடியுமா? ஈடே இல்லா ஒரு உறவு!

ஒரு ஆணின் கண்ணோட்டத்திலிருந்து இதை எழுதியிருக்கிறேன். இந்தக் கருத்துக்களிலிருந்து மாறுபடக் கூடியவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அவர்கள் ஒரு சிறிய விழுக்காடு (percentage) தான் இருப்பார்கள். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. என்னைப் பொருத்தவரை, பெண்கள் என்றென்றும் கொண்டாடப் பட வேண்டியவர்கள்; ‘உலக மாதர் தினத்தன்று மட்டுமல்ல’. சாலமன் பாப்பையாவின் பாணியில், ”பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களே” என்று தீர்ப்பு வழங்குகிறேன்.....

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Celebrate the women in your life" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?