ஒப்பீடு (எப்பொழுதுமே.....), மோசமானவை அல்ல....

சில மாதங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம். வங்கியில் (Bank), மேலாளருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, நான் அடிக்கடி எங்கள் பகுதியில் பார்த்த ஒரு நபர், மேலாளரைப் பார்த்துப் பேசி விட்டு, மற்றொரு அதிகாரியைப் பார்த்து தனது அலுவலை கவனிக்கச் சென்றார். மேலாளர் என்னிடம் கூறினார், ‘இவர் ஒரு வக்கீல்; உங்கள் பகுதியில் தான் வசிக்கிறார்’. ’எதனால் இதை எனக்குச் சொல்கிறீர்கள்’ என்று கேட்டேன். ’அவருக்கு வயது 85; இன்னும் வக்கீல் தொழில் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார். எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. எனது வயதுக்கு (என் வயது.... ரகசியமாக இருக்கட்டுமே...!) நான் நன்றாக நடமாடிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த இளைஞர் (!) 85 வயதில் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாரே என்று வாயடைத்துப் போனேன். அன்றிலிருந்து, இன்னும் நிறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். இந்த சந்தர்ப்பத்தில் எனது ஒப்பீடு, நல்லதிலேயே முடிந்தது.

’அடுத்த வீட்டுப் பையன் ஹரி எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறான், பார். நீயும் அதே பள்ளியில், அதே வகுப்பில் தானே படிக்கிறாய்! பின் ஏன் நீ இப்படி மார்க் வாங்கியிருக்கிறாய்?’ இந்த சம்பாஷணை நாம் அடிக்கடி எதிர்கொள்வது. ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அந்தத் திறமையைக் கண்டுபிடித்து, அதில் நம் பிள்ளையை முன்னேறச் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு, மற்ற பிள்ளைகளோடு நம் பிள்ளையை ஒப்பிட்டுச் சொல்லி அவர்களை, பின்னோக்கிச் செல்ல விடக் கூடாது. அது அவர்களுக்கும் அவர்களது திறமைக்கும் நாம் இழைக்கும் துரோகம். வரும் காலத்தில் நம் பிள்ளைகள் நாம் அவர்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறோம் என்று நம்மைப் பாராட்ட வேண்டும்.

சில சமயங்களில், ஒப்பீடு செய்யக் கூடாத (அவசியமில்லாத) விஷயங்களில் கவனம் செலுத்தி நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்கிறோம். ‘அவன் மனைவி அளவுக்கு என் மனைவி அவ்வளவு நிறமாக இல்லை; வசதியான வீட்டிலிருந்து வரவில்லை’ - இப்படியெல்லாம் ஒப்பீடு செய்யும் தவறை, தயவுசெய்து செய்யாதீர்கள். உங்கள் மனைவியே உங்களுக்கு ராணி.

கடவுள், ஒருவரின் முன் தோன்றி, வரம் கேட்கும்படி சொல்கிறார். அதே சமயம், கடவுள், ’உன் பக்கத்து வீட்டுக்காரருக்கு, உனக்குத் தருவது போல இரண்டு மடங்கு அதே வரத்தைத் தருவேன்’ என்கிறார். முதலில் இவன் கடவுளைச் சோதித்துப் பார்க்க விரும்பி, ‘எனக்கு ஒரு ‘கார்’ வேண்டும்’ என்கிறான். உடனே கார் அவன் முன் நிற்கிறது. பக்கத்து வீட்டைப் பார்க்கிறான். அங்கே இரண்டு கார்கள் நிற்கின்றன. நம்ம ஆள் யோசித்துப் பார்க்கிறான். கடவுளிடம், மற்றுமொரு வரம் வேண்டும்’ என்கிறான். ‘சரி’ என்கிறார் கடவுள். ‘எனக்கு ஒரு கண் குருடாகி விட வேண்டும்’. கேட்கவே வேண்டாம், அவனது பக்கத்து வீட்டுக்காரருக்கு என்ன நடந்திருக்கும் என்று!

ஒரு அறிஞரின் சொற்பொழிவில் கேட்டது: ‘உனது நற்பண்புகள் என்று வரும் போது, உன்னை விட உயர்ந்தவர்களின் நற்பண்புகளை ஒப்பீடு செய்ய வேண்டும். உனக்கிருக்கும் வசதியை ஒப்பீடு செய்ய நேர்ந்தால், உன்னை விட வசதியில் குறைந்தவர்களைப் பார். அப்போது தான் நீ நிம்மதியாக வாழ முடியும்'.

நம்மை விட செல்வத்திலோ, புகழிலோ உயர்ந்தவர்களுடன் ஒப்பீடு செய்தால், அதனால் நம் மனதில் பொறாமை தோன்றும். பின் அது பல அழிவுகளுக்குக் காரணமாக அமையும். ஆகவே ஒப்பீடு செய்வது தவறில்லை, அது நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுமானால்....’

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Comparisons are (not always)..... odious!" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

  1. சிந்தனையைத் தூண்டும் அருமையான கருத்து.
    ஒப்பீடை (comparison) ஒரு உத்வேக சக்தியாக நம் செயல்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் விதமாக அதை எடுத்துக் கொண்டால் நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும்.ஆனால் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் சில ஓப்பீடுகள் வேதனையைத் தந்து சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் அதனையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?