நான் ஏமாறுவதற்குத் தயாராக இருக்கிறேன்.....

நீங்கள் தினமும் செய்தித்தாள், மற்றும் உங்கள் கைபேசியில் செய்திகளைப் படிப்பவர்களா? அப்படியானால், தினசரி ஒரு செய்தியாவது, ‘இன்னார் இப்படி ஏமாற்றப்பட்டார்’ என்று இருப்பதைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ புதுமையான முறைகளில் தினந்தோறும் யாராவது சிலர் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்; அதாவது, ஏமாற்றப்பட்டவர் ஒத்துழைப்பு, முழுவதுமாக ஏமாற்றியவருக்கு இருந்திருக்கும். ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனாரின் தீர்க்கதரிசனமான வாக்கியத்தை நிரூபித்துக் கொண்டே இருக்கிறோம்.

சமீபத்திய செய்தி ஒன்று; 59 வயது ஆண், 45 வயது மதிக்கத்தக்க சுமார் 35 மகளிரை ஏமாற்றி இருக்கிறார். அவரது செயல்பாடு (modus operandi) இதுதான்; செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பார், “நான், விவாகரத்து ஆன ஒரு 59 வயது ஆண். குழந்தைகள் இல்லை. எனக்கு நிறைய வியாபாரம் இருக்கிறது. 45 - லிருந்து 50 வயது மதிக்கத்தக்க, கணவனை இழந்த, அல்லது விவாகரத்து ஆன பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் இந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்”. அவரைத் தொடர்பு கொள்ளும் பெண்ணிடம் போனில் பேசி, அந்தப் பெண்ணின் வசதி மற்றும் வெகுளித்தனத்தை எடை போடுவார். அப்படிப்பட்ட பெண்ணை பிறகு நேரில் சந்தித்துப் பேசுவார். திருமண ஏற்பாட்டைச் செய்வார். அவரது பணம் எல்லாம் வியாபாரத்தில் முடங்கி இருப்பதால், கல்யாணச் செலவுக்கு கொஞ்சம் பணமும், கொஞ்சம் நகையும் வேண்டும் என்பார். 45 வயதில் கல்யாணம் ஆகப் போகிற சந்தோஷத்தில், அந்தப் பெண் ஏமாந்து பணத்தையும், நகையையும் கொடுப்பார். அதன் பிறகு அந்த நபரைத் தொடர்பு கொள்ளவே முடியாது. இப்படியே சுமார் 35 பெண்களை ஏமாற்றியிருக்கிறார். சமீபத்தில் பிடிபட்டு, கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். முன்பு, இதே பாணியில் ஏமாற்றிய ஒரு நபரை மையமாக வைத்து ‘நான் அவனில்லை’ என்ற ஒரு திரைப்படம் வந்தது.

வாரச்சீட்டு, மாதச்சீட்டு என்று பணம் கட்டி ஏமாந்தோர் நம்மிலே நிறையப் பேர் உண்டு. Multi-level marketing (mlm) என்று சொல்லக்கூடிய அடுக்குத் தொடர் சந்தைப்படுத்துதல் என்று ஒரு திட்டம், அப்போதைக்கப்போது வெளியே தெரிய வரும் போது, பல தரப்பட்ட மக்கள் அதில் பணம் போட்டு ஏமாந்ததைப் பார்க்கலாம். இதற்கு ஒரு முடிவே கிடையாது. இந்தத் திட்டம் நடத்துபவர்களின் மூலதனமே, மக்களின் அறியாமையும், பேராசையும் தான். யாரும் யாரையும் பணம் கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியாது.

சில கணவன்மார் மனைவியை ஏமாற்றுவதும், சில மனைவிகள் கணவனை ஏமாற்றுவதும் ஆண்டாண்டு காலமாக நடைபெறும் ஒரு நிகழ்வாகிப் போனது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நீதிமன்றமே, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் தவறு இல்லை என்று தீர்ப்பு கூறுவது தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, இப்போது பரவலாக தென்படுகிறது.

மிகவும் வசதி படைத்த சிலர் மக்களையும், அரசாங்கத்தையும் ஏமாற்றி (பல வழிகளில்) பணம் சேர்த்துக் கொண்டே போவது எதற்காக? அவர்களிடம் இல்லாத பணமா! மேலும் மேலும் பணம் சேர்த்து என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கான விடை, எனக்கு...., இதுவரை கிடைக்கவில்லை.

இப்போது மிகவும் சாதாரணமாக நடப்பது கணினி மூலம் அரங்கேறும் நிதி மோசடி. நாம் எவ்வளவுதான் பதுகாப்பான கடவுச் சொல் (password) பயன்படுத்தினாலும், அதையும் ஊடுருவி நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடி விடுவார்கள். ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்தில் வரும் கடவுச் சொல்லான ‘அண்டாக்கா கசம், அபுல் கா ஹுக்கும், திறந்திடு சிசேம்’, அலிபாபாவால் அறியப்பட்டு குகைக்குள் செல்வார்! ஒருவேளை அதுதான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட கடவுச் சொல்லாக இருக்கலாம்!

கொஞ்ச காலம் முன்பு ஒரு திரைப்படம் வந்தது (தில்லு முல்லு). அதில் ஒருவர், மீசையை எடுத்தும், பிறகு ஒட்டியும் இரண்டு நபர்களாக நடித்து, அவரது முதலாளியை ஏமாற்றுவார். கடைசியில், அந்த முதலாளி, தனது முட்டாள்தனம் தான் கண்டிக்கப்பட வேண்டியது என்று ஒத்துக் கொள்வார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்....

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "I am vulnerable.... Please cheat me" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

  1. நாம் எல்லாருமே ஏதொ ஒரு நேரம் ஏமாளியாக இருக்கிரோம்

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை. அநேகமாக நாம் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், யாரோ ஒருவரிடம் ஏமாந்திருப்போம். அதுவே நல்ல பாடமாக அமைந்திருக்கும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?