வாழ்க்கை முழுவதுமே...., தேவை - ’சமரச இணக்கம்’ (compromise).....

நமது வாழ்க்கை முழுவதுமே ’சமரச இணக்கம்’ (compromise) நிறைந்தது. அநேகமாக எல்லா விஷயங்களிலும், சமரசம் செய்தாலொழிய, வாழவே முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எதிலுமே பிடிவாதமாக இருக்கக் கூடாது. வளைந்து கொடுத்துத்தான் செல்ல வேண்டும். ஆனால், நமது குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். பிடிவாதத்திற்கும், உறுதிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

வேகமான காற்று வீசும் போது, முருங்கை மரம் ஒடிந்து விழலாம்; ஆனால், ‘நாணல்’ சாய்ந்து கொடுத்து, அந்தக் காற்றிலிருந்து தப்பித்து விடும். அது போலத்தான் நாமும் நமது வாழ்வில், வளைந்து கொடுக்க வேண்டிய நேரங்களில் வளைந்து, நெளிந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதுவே வாழ்க்கைத் தத்துவம்.

வாழ்க்கையில் நிறைய தருணங்களில், ஒன்றுக்கொன்று முரண்பாடான விஷயங்களில் நாம் முடிவு எடுக்க வேண்டியது வரும். 100 சதவீதம் சரியான முடிவு எடுப்பது என்பது கடினம். எனவே இருப்பதற்குள் நடைமுறை சாத்தியத்துடன் உள்ள முடிவை எடுக்க வேண்டும். ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தும் போது, பல விஷயங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மகளின் பள்ளி அங்கிருந்து வெகு தூரம் இருக்கலாம். நமது அலுவலகம் பக்கத்தில் இருக்கலாம். எது மிகவும் முக்கியம் என்று யோசித்து சரியான முடிவை எடுக்க வேண்டும். இதில் மூன்றாம் மனிதருடைய ஆலோசனையை கேட்க வேண்டியதில்லை.

வழக்கமாக நான் எனது உடைகளை ஒரு தையல் கலைஞரிடம் தைக்கக் கொடுப்பேன். நல்ல வேலைப்பாடு உண்டு, அவரது வேலையில். ஆனால், அவரிடம் உள்ள ஒரு பெரிய குறை, சொன்ன நேரத்தில் எந்த உடையையும் தைத்துக் கொடுக்க மாட்டார். நான் தான் முடிவு செய்ய வேண்டும், ‘எனக்கு தரமான உடை வேண்டுமா, நேரப்படி அது கிடைக்க வேண்டுமா’ என்று.

பெண் தேடும் படலம், இதற்கு சரியான உதாரணம்! இவனைப் பற்றி, அதாவது மணமகனின் குணாதிசயங்களைப் பற்றி, விவரிக்கவே முடியாது. ஆனால் அவன் எதிர்பார்க்கும் மணப் பெண்ணுக்கு அவன் வைக்கும் கோரிக்கைகள் - நினைத்தால் சிரிப்புத்தான் வரும். 1) பெண்ணின் நிறம் - சரும அழகினைக் கூட்டும் வியாபாரப் பொருட்களின் விளம்பரங்களில் இருக்கும் பெண்ணளவிற்கு, 2) மிகவும் ஒல்லியாக பார்க்க வெகு அழகாக - ஐஷ்வர்யா ராய் மாதிரி இருந்தால் போதும்! 3) பணம் படைத்தவளாக - உலகின் மிகப் பெரிய பணக்காரரான ‘பில் கேட்ஸ்’ அளவுக்கு! 4) நுண்ணறிவு எண் (intelligence quotient) - ’ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்’ அளவுக்கு இருந்தாலே போதும்! - இப்படி நினைத்துக் கொண்டிருந்தால், இவனுக்கு இந்த ஜென்மத்தில் இல்லை; எந்த ஜென்மத்தில் பெண் கிடைக்கும்? தன் வாழ்வுக்கு எது பொருந்துமோ, அதற்கு இசைவான பெண் கிடைத்தால் போதும்; வாழ்வு நிம்மதியாக இருக்கும். திருமணம் ஆன பிறகும், எவ்வளவோ விஷயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ‘சமரசம்’ செய்தாலொழிய, நிம்மதியாக வாழவே முடியாது.

எந்த விஷயத்தை எடுத்தாலும், நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். நமது அறிவுக்கு எட்டிய வரை ஆராய்ந்து, சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் நிம்மதியாக வாழ முடியும்.

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Life..... full of compromises" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?