நாம், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறோமா...?
ஒரு முனிவர் இருந்தார். அவர் இறக்கும் தறுவாயில் அவருக்கிருந்த ஒரு சாபம் நினைவுக்கு வந்தது. அவர் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறப்பார் என்பது தான் அந்த சாபம். அதற்கு அடுத்த பிறவியில் மீண்டும் மனிதனாகப் பிறப்பார் என்பதும் அந்த சாபத்தின் ஒரு பகுதி. மகனைக் கூப்பிட்டு, ‘மகனே! நான் பன்றியின் பிறவியை வாழ விரும்பவில்லை. நான் ஒரு வெள்ளை நிறப் பன்றியாகப் பிறக்கப் போகிறேன். எனவே அருகிலுள்ள பன்றிக் குடியிருப்பில், ஒரு வெள்ளைப் பன்றி பிறந்தவுடன், அதை நான் என்று அடையாளம் கண்டு கொண்டு, உடனே, அதைக் கொன்று விடு’ என்று கூறினார். சில நாட்களில் (முனிவர் இறந்தவுடன்) அந்தப் பன்றிக் குட்டியும் பிறந்தது. மகன் அதன் அருகில் சென்று அதைக் கொல்ல ஆயத்தமானான். உடனே அந்தப் பன்றிக்குட்டி பேசியது, ‘மகனே! நான் இந்தப் பன்றியின் வாழ்வையும் வாழ்ந்து விடுகிறேன். சீக்கிரமே சாக விரும்பவில்லை’. எந்தப் பிறவியும் சீக்கிரமே சாக விரும்புவதில்லை என்பதே இந்தக் கதையின் கருத்து.
இது மனிதர்களுக்கு மிக அதிகமாகவே பொருந்தும்! எவ்வளவு வயதானாலும், எந்த மனிதனும் சாவை ஏற்கத் தயாராயிருப்பதில்லை. (உடல் தளர்ந்தாலும், மூப்பு எய்தாலும், நோய்வாய்ப்பட்டாலும்). அரசாங்கமே ஒரு சட்டம் இயற்ற வேண்டும் ”ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் (சுமார் 80 என்று வைத்துக் கொள்வோம்) எல்லோரும் கொல்லப்படுவார்கள்” என்று. இதே கருத்தை ஒரு கதையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பேசியிருக்கிறார் (’சொர்க்கத் தீவு’ என்று ஞாபகம்). இது நடைமுறை சாத்தியமில்லை. ஒரு வேடிக்கைக்காகச் சொன்னேன். உண்மையிலேயே, யாருக்கும் அவரவர் உயிரை மாய்த்துக் கொள்ளவோ, மற்றவர் உயிரைப் பறிப்பதற்கோ, எந்த உரிமையும் கிடையாது. சில நாடுகளில், மருத்துவ காரணங்களுக்காக, ‘கருணைக் கொலை’ அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், இறப்பு நேரும் போது (மூப்பு, வியாதி, விபத்து), அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ’இறப்பைப் பற்றிய பயம்’, இறப்பை விட மோசமானது. நேற்றிருப்போர் இன்று இல்லை; இதுவே உலக நியதி. நேற்று வரை பாடிக் கொண்டிருந்த S. P. பாலசுப்ரமணியம் இன்று நம்முடன் இல்லை. இது கடவுளின் செயல் என்று ஏற்றுக் கொள்வோம். இறப்பு, நம் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பகுதி; வாழ்க்கை என்னும் வாக்கியத்தின் முற்றுப் புள்ளி. முற்றுப் புள்ளி இல்லையேல், ஒரு வாக்கியத்திற்கு அழகு கிடையாது; அர்த்தமும் கிடையாது. ஒரு ஓட்டப் பந்தயத்தில், இலக்கு இல்லாமல் ஓட முடியுமா? வாழ்க்கை என்னும் வாக்கியத்தின் ஒவ்வொரு சொல்லையும் அர்த்தமுள்ளதாக, அழகாக இயற்றுவது, நம் கையில் தான் இருக்கிறது. உலகில், எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும், ஒரு முடிவும் நிகழ்ந்தே தீரும். அந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை, கடைசி நாள் வரை இனிமையாக வாழக் கற்றுக் கொள்வோம்.
உலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் தங்களது குறுகிய கால வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்து, அவர்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். மகாகவி பாரதி - 39 வயது, விவேகானந்தர் - 39 வயது, ப்ரூஸ் லீ - 32 வயது, ஸ்டீவ் ஜாப்ஸ் - 56 வயது, ஷேக்ஸ்பியர் - 52 வயது -- இப்படி எத்தனையோ பேர் தங்களது வாழ்க்கையை அழகாகவும், மற்றவர்களுக்கு உபயோகமாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.
நமது வாழ்வை திட்டமிட்டு வாழப் பழகுவோம். நமது கடமைகளைத் தள்ளிப் போடாமல் செவ்வனே செய்து, உரிய நேரத்தில் முடிக்கப் பழகுவோம். மற்றதை கடவுளிடம் விட்டு விடுவோம். ‘உலகில் எனது கடமை முடியும் வரை என்னை நல்லபடியாக வாழ அனுமதி கொடு’ என்று கடவுளிடம் வேண்டுவோம்; அவருக்குத் தெரியும் நமக்கு எது நல்லதென்று. மகாத்மா காந்தி கூறுகிறார் : நாளையே நமது கடைசி நாளென்று நினைத்து வாழ்; என்றென்றும் வாழ்வோம் என்று நினைத்து, கற்றுக் கொண்டே இரு.
(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Live a meaningful life" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.
Comments
Post a Comment