பிள்ளைகள் மீது கண்மூடித்தனமான பாசம் வைக்கலாமா...?

’ஐந்தாம் வேதம்’ என்று கருதப்படுகிற ‘மகாபாரதத்தில்’ நடந்த நிகழ்வு - ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரி, கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையே குருக்ஷேத்திரத்தில் போர் நிகழ்கிறது. இதற்கு மூல காரணம் என்ன? உண்மையான காரணம், திருதராஷ்டிர மன்னனின் மகனான துரியோதனனின் பொறாமையும், பேராசையும்தான். பாண்டவர்கள் மீது அவனுக்கிருந்த இனம் புரியாத வெறுப்புணர்ச்சி, அவனை நிம்மதியிழக்கச் செய்து, போர் புரிந்தாவது, பாண்டவர்களுக்குரிய உரிமையை மறுக்கும் வரை சென்றது. அதன் விளைவு - அந்தக் குலமே அழிந்து போயிற்று.

அவனுடைய பொறாமைக்கும், பேராசைக்கும் அவனது தந்தையான திருதராஷ்டிர மன்னன் ஏன் துணை போனான்? அவன் மகனான துரியோதனன் மீது அவனுக்கிருந்த கண்மூடித்தனமான பாசம் மட்டுமே! அவன் நல்லது, கெட்டது, மற்றும் தர்மம் தெரியாதவனா என்றால், அப்படிச் சொல்ல முடியாது. அவனது சகோதரனான விதுரர் அறிவுரைகளை மதிப்பவன் அவன். பீஷ்மர், துரோணாச்சாரியார், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முதலானோர் எவ்வளவோ அறிவுரை கூறியும், எல்லாவற்றையும் மீறி, ஏன் கடைசியாக துரியோதனன் சொன்னபடியெல்லாம் நடந்தான்? இது ‘தெய்வச் செயல்’ என்றாலும் கூட, திருதராஷ்டிரனுக்கு அவன் மகன் துரியோதனன் மீதிருந்த அளவிட முடியாத கண்மூடித்தனமான பாசம் தவிர வேறில்லை. என்னைப் பொருத்த வரை, துரியோதனனின் பாவத்தை விட, திருதராஷ்டிரனின் பாவம் தான் மிக அதிகம்.

இது மக்கள் எல்லோருக்கும் ஒரு பெரிய பாடம். அநேகமாக எல்லா வீடுகளிலும் இன்று பெற்றோர்கள் இந்தத் தவறைத்தான் செய்து வருகிறோம். ‘நமக்கிருப்பதோ ஒரே பிள்ளை; அவன் விரும்புவதைச் செய்து தருவதை விட நமக்கு வேறென்ன வேண்டும்?’ இதன் மோசமான விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. நான் ஏற்கனவே வேறு பதிவுகளில் (blogs) கூறியிருப்பது போல, பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து (நமக்கு பணம் ஒரு பொருட்டல்ல), அவர்களைக் கெடுத்து விடுகிறோம். வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்து கொள்ள வைக்க நாம் தவறி விடுகிறோம். நமது காலத்திற்குப் பிறகு, அவர்களுக்கு வாழ்க்கையில் சறுக்கல் ஏற்படும் போது, அதைச் சரி செய்ய முடியாமல் (தெரியாமல்), திணறுகிறார்கள். நாம் நமது கடமையைச் சரிவர செய்யத் தவறி விட்டோம் என்றுதானே அர்த்தம்?

பிள்ளைகள் மீது பாசம் வைக்க வேண்டும்; ஆனால், அது கண்மூடித்தனமான பாசமாக இருக்கக் கூடாது. வாழ்வில் தோல்வி ஏற்படுவது சகஜம் என்று சொல்லிக் கொடுப்போம். வெளி உலகத்தைச் சந்திக்க அனுமதிப்போம். கூட்டுப்புழுக்களாக வளர்க்காமல், வண்ணத்துப் பூச்சிகளாக மலர அனுமதிப்போம். அப்போதுதான் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். விரும்பிய பொருள் கிடைக்கவில்லையென்றால், பரவாயில்லை என்று புத்திமதி சொல்லுவோம். வாழ்க்கையில் எது நேர்ந்தாலும் தைரியத்தைக் கை விடக் கூடாது என்று சொல்லித் தருவோம். நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத் தருவோம். இதை வேறு யாரும் சொல்லித் தரப் போவதில்லை. இன்பமும், துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை என்ற சீரிய பாடத்தைக் கற்றுத் தருவோம். நமது காலத்திற்குப் பின்பும் அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் வாழப் பழக்கி விடுவோம். இதுவே பெற்றோர்களாகிய நமது சரியான கடமை.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?