நீங்கள், நீங்களாகவே இருங்கள்...., தனித் தன்மையுடன்
”எதிலும் மிகச் சிறந்தவராக இருப்பதை விட, தனித் தன்மையுடன் நீங்களாகவே இருப்பதே சிறந்தது. ஏனெனில், மிகச் சிறந்தவராக இருக்கும் போது, நீங்கள் முதன்மையான இடத்தில் இருப்பீர்கள்; இன்னும் நிறையப் பேர் உங்கள் பின்னால் போட்டி போட்டுக் கொண்டு நிற்பார்கள். ஆனால், தனித் தன்மையுடன் இருக்கும் போது, நீங்கள் ஒருவர் மட்டுமே அந்த நிலையில் இருப்பீர்கள். போட்டிக்கு வேறு யாருமே கிடையாது” -- இதைச் சொன்னவர் யாரோ ஒருவர்.
நீங்கள், நீங்களாகவே இருங்கள், தனித் தன்மையுடன். நாம் ஒவ்வொருவருமே அவரவருக்குண்டான தனித் தன்மையுடன், குணாதிசயங்களுடன் இருப்பதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம். எனவே யாரையும் பார்த்து நாம் பொறாமைப்பட வேண்டாம். மற்றவர்களிடம் நீங்கள் பாராட்டக் கூடிய அம்சங்கள் இருந்தால் அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், அதை அப்படியே நகல் எடுத்து நம்மில் ஒட்டிக் கொள்ள வேண்டாம். மற்றொருவருடைய நகலாக இருப்பது, நமது படைப்புத் தன்மையை மறக்கடிக்கச் செய்யும். நாம், நமது வழியில் சாதிக்கப் பிறந்தவர்கள்.
நமக்கென்று ஒரு தனிப் பாதையை அமைக்க முயற்சிப்போம். ’நம்மால் முடியும்’ என்று நம்புவோம். நமக்குள் ஒளிந்திருக்கும் தனித் தன்மையை அடையாளம் கண்டு கொள்வோம். அதை இடைவிடாத பயிற்சி மூலம் மெருகேற்றி, திறன்களாக மாற்றுவோம். திறன்களைக் கொண்டு, தீராத வேட்கையுடன் முன்னேறிச் செல்வோம். எந்த சிகரத்தையும் அடைந்து விடலாம்.
அதை விடுத்து, மற்றவரைப் பார்த்து, அவரின் அடையாளங்களை நமது அடையாளங்களாக அடைய நினைத்தால், அது பூனை, புலியைப் பார்த்து தன் உடம்பின் மீது கோடு போட்டுக் கொள்வது போலாகும். என்ன செய்தாலும் பூனை ஒரு போதும் புலியாக முடியாது. பூனையாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும். ஒரு பூனை செய்வதை புலியால் செய்ய முடியாது. முதலில், பூனை, பூனையாய் இருப்பதை ரசிக்க வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். நம்மை நாமே நேசிக்க வேண்டும்.
நம்மில் சிலர், அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகரைப் பார்த்து, அவரைப் போலவே உடை அணிவதும், அவரது நடையுடை பாவனைகளை அப்படியே பின்பற்ற முயற்சிக்கவும் செய்கிறார்கள். இதில் என்ன பெருமை இருக்க முடியும். நீங்கள் மதிக்கும் அந்த நடிகர், எவ்வளவோ பாடுபட்டு, அவரது தனித் தன்மையால் அந்த இடத்தை அடைந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவரைப் பார்த்து, உங்களுக்கு உத்வேகம் வந்தால், அதில் தப்பில்லை. உங்களது தனித் தன்மையை பிரயோகித்து, நீங்களும் உங்கள் துறையில் யாரும் அடைய முடியாத நிலையை அடையலாமே!
”யாரும் யாரையும் விட உயர்ந்தவரும் அல்ல; தாழ்ந்தவரும் அல்ல; சமமானவரும் அல்ல. ஒவ்வொருவரும் ஒப்பீடு செய்ய முடியாதபடி தனித் தன்மையுடன் இருப்பவர்கள். நீங்கள், நீங்கள் தான்; நான், நான் தான்” - ஓஷோ
நாம் எதில் சிறந்தவர்கள் என்று அறிந்து கொள்வதில், ஒரு மிகச் சிறந்த சக்தி இருக்கிறது. நாம் எதில் சிறந்தவர்கள் இல்லையோ, அதில் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவதைத் தவிர்ப்போம். நீங்கள், நீங்களாகவே இருங்கள், உங்களின் தனித் தன்மையுடன்....
(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Be you...., Be unique....." என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.
Comments
Post a Comment