பகட்டான வாழ்வா... அல்லது, தேவைக்கேற்ற வாழ்வா....?

சமீபத்திய ஒரு செய்தி, மனதை என்னவோ செய்தது. ஒரு இந்தியப் பெரும் பணக்காரர், தன் மகளை இங்கிலாந்தில் படிக்க வைக்க ஏற்பாடு செய்தார். அவள் தங்குவதற்கு ஒரு மாளிகை வாங்கினார் (சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில்). அவளுக்கு தொண்டூழியம் பார்ப்பதர்கு 12 பேரை வேலைக்கு அமர்த்துகிறார். அவர்களது மொத்தச் சம்பளம் மாதம் 25 லட்சம். இது போக மகளின் போக்குவரத்துக்காக பல விலை உயர்ந்த கார்கள், அதற்கான ஓட்டுனர்கள், இத்யாதி....

மற்றொரு செய்தி (அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்). ஒருவர் தன் மகனை வேறொரு மாநிலத்திற்குச் சென்று ஒரு மாதம், தானே சம்பாதித்து வாழப் பழகச் சொல்கிறார். அவன் கையிருப்பு ரூபாய் 7,000. அதுவும் அதை அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன். மலயாள தேசத்தில் அந்த ஒரு மாதத்தை கழிக்க வேண்டும். பாஷை தெரியாது. ஒரு நபரையும் தெரியாது. தனது பின்புலத்தை உபயோகிக்கக் கூடாது. என்ன வேலை கிடைக்கும்?! ஒரு உணவகத்தில், மேஜை சுத்தம் செய்யும் வேலையில் சேர்கிறான். அவன் தோற்றத்திற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லை. எப்படியோ ஒரு மாதத்தை அக்னி பரீட்சையாகக் கழிக்கிறான். வாழ்க்கை என்றால் என்ன, ஒரு வேளை சாப்பாட்டிற்கு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக தெரிந்து கொள்கிறான். அவனது தந்தை, குஜராத் மாநிலத்தில், பல கோடிகளுக்கு அதிபதியான ஒரு வைர வியாபாரி. அவரது தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளும் பரிசுகளும் வழங்கக் கூடியவர். இந்தப் பையன் அவரது ஒரே வாரிசு. வாழ்க்கையில் எவ்வளவு வசதி வந்தாலும், சாமான்ய மக்கள் படும் இன்னல்களைத் தெரிந்து கொண்டால் தான் பணத்தில் அருமை தெரியும் என்ற வாழ்க்கைக் கல்வியை அவனுக்கு அந்த ஒரு மாதத்தில் கற்றுக் கொடுத்தார்.

இரண்டு செய்திகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். பணம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால், அதை படோடோபமாக, பகட்டான வாழ்க்கை முறையில் செலவிட வேண்டுமா? ‘என் பணம், நான் எப்படி வேண்டுமானாலும் செலவழிப்பேன்’ என்று அவர்கள் கூறலாம். உலகின் மிகப் பெரிய பணக்காரர்களான ‘வாரன் பஃபே’ (Warren Buffet), மார்க் ஸக்கர்பெர்க் (Mark Zuckerberg), அஸிம் ப்ரேம்ஜி (Azim Premji) போன்ற பலர் மிக எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். தங்களது வருவாயில் மிக அதிக பங்கை தான தர்மத்திற்கு செலவிடுகிறார்கள். எப்போதோ வாங்கிய வீடு, பழைய கார், சாதாரண மனிதர்கள் அணியும் உடைகள்....

வாழ்க்கையின் அணுகுமுறை (attitude), மற்ற பணக்காரர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. அவர்களிடம் கஞ்சத்தனமும் கிடையாது; ஊதாரித்தனமும் கிடையாது. பகட்டான செலவு செய்யும் பொழுது, அதன் பலனை சிலரே அனுபவிக்க முடியும். ஆனால், அதையே தான தர்மம் செய்யும் போது, தேவை அதிகமுள்ள பலர் பயன் பெறுவார்கள். நாம் பணக்காரர்களாக இல்லாவிட்டாலும், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, நம்மால் முடிந்த உதவியை, சமூகத்தில், பொருளாதாரத்தில் கீழ்த்தட்டில் இருக்கும் சிலருக்காவது உதவி செய்வோமாக....

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?