நாம் அறிவாளிகளா..., ஞானம் உள்ளவர்களா....?

அறிவு என்பது, சில விஷயங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது; இது ஊடகங்களின் மூலமும் வரலாம்; கல்வியின் மூலமும் வரலாம்; அனுபவத்தின் மூலமும் வரலாம். ஆனால், ஞானம் என்பது, அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல், அதை உபயோகித்து, ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பதும் ஆகும். மேலும், ஞானம் உள்ளவர்கள், நடக்கப் போகிற விஷயங்களையும் முன்கூட்டியே கணிக்கவும் தெரிந்தவர்களாயிருப்பார்கள். அறிவுக்கும் ஞானத்திற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

உலகம் நிறையவே ஞானிகளைப் பார்த்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் ராஜா சாலமன் சபைக்கு ஒரு பிராது வந்தது. ஒரு குழந்தையை இரு தாய்மார்கள் சொந்தம் கொண்டாடினார்கள். இது எப்படி சாத்தியம்? (DNA test வசதி இல்லாத காலகட்டம்). மிக்க ஞானமுடைய சாலமன், பணியாளிடம் ஒரு கத்தியைக் கொண்டு வரச் சொன்னார். அந்தக் குழந்தையை இரு கூறாக வெட்டுமாறு பணித்தார். அந்தத் தாய்மார்களைக் கவனித்தார். ஒரு பெண் மிகவும் அமைதியாக நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அழ ஆரம்பித்து, ‘குழந்தை எனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; குழந்தையைக் கூறு போட வேண்டாம்’ என்று அலறினார். நமக்குப் புரிந்திருக்கும் குழந்தை யாருடையது என்று. ராஜா சாலமன் சரியான தீர்ப்பு வழங்கி, பொய்யான பெண்மணிக்குத் தண்டனை வழங்கினார்.

அக்பரின் அரச தர்பாரில் மந்திரியாக வேலை பார்த்த ‘பீர்பாலிடம்’ ஒரு பிரச்னை கொண்டு வரப்பட்டது. ஒரு பண முடிப்பை ஒரு எண்ணெய் வியாபாரியும், ஒரு கசாப்புக் கடைக்காரரும் சொந்தம் கொண்டாடினார்கள். சாட்சி ஒருவரும் இல்லை; அந்தப் பணப் பையைத் தவிர. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, பீர்பால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார். அந்தக் காசுகளை அந்தத் தண்ணீரில் கொட்டச் செய்தார். தண்ணீரின் மேல் எண்ணெய் மிதந்தது. பொய்யாகப் பணப் பைக்கு சொந்தம் கொண்டாடிய கசாப்புக்கடைக்காரருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஒரு வழிப்போக்கன் அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது, அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று அறிய பக்கத்திலிருந்த ஒரு வயதானவரை அணுகினான். ‘ஐயா, பக்கத்திலுள்ள கிராமத்திற்குச் (கிராமத்தின் பெயரைச் சொல்லி) செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?”. அந்தப் பெரியவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மறுபடியும் கேட்டான். அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒருவேளை அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்; அல்லது அவருக்கு காது கேட்கவில்லை என்று தீர்மானித்துக் கொண்டு, அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றான். அப்போது அந்தப் பெரியவர், “தம்பி, அங்கு செல்ல சுமார் ஒரு நாழிகை (24 நிமிடம்) ஆகும்” என்றார். ”நான் கேட்கும் போது ஏன் சொல்ல வில்லை” என்று வழிப்போக்கன் தனது சந்தேகத்தைத் தெளிவுபடுத்த, அவரிடம் கேட்டான். ”நீ எவ்வளவு வேகத்தில் நடப்பாய் என்று நீ நடப்பதைப் பார்த்து கணித்து பிறகு சொன்னேன்” என்றார். எந்த விஷயத்தையும் தீர ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டும்.

ஒரு கிராமத்தில் ஒரு சமயம் மிகவும் பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டது. விதைப்பதற்குக் கூட நெல்மணிகள் இல்லாத நிலை இருந்தது. விதைக்க வேண்டிய பருவமும் வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் அந்தக் கிராமத்தில் பல வருடங்கள் வாழ்ந்த ஒரு முதியவரை அணுகினார்கள். அவர், எல்லோரையும் அவர்களது நிலத்தை உழச் சொன்னார். அப்படியே செய்தார்கள். சரியான நேரத்தில் மழையும் வந்தது. சில நாட்கள் சென்று எல்லோரது நிலங்களிலும், நாற்று வர ஆரம்பித்திருந்தது. இது எப்படி சாத்தியம் என்று எல்லோரும் அந்தப் பெரியவரைக் கேட்டார்கள். ”சென்ற அறுவடையின் போது, நீங்கள் நெல்மணிகளை களத்திலிருந்து எடுத்து வரும் போது, எப்படியும் கொஞ்சம் நெல்மணிகள் நிலத்தில் விழுந்திருக்கும் அல்லவா? அவைகளே இப்போது முளை விட்டிருக்கின்றன” என்றார். இது, பல வருட அனுபவத்தில் வந்த ஞானம்.

ஒரு நகைச்சுவைத் துணுக்கு : ஒரு பேருந்தில் ஒரு இருக்கைக்கு இரண்டு பெண்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். நடத்துநர், இதைப் பார்த்துவிட்டு, ‘யார் உங்களில் அழகில் சற்று குறைவானவரோ, அவர் அந்த இருக்கையில் உட்காரலாம்’ என்றார். இரண்டு பெண்களுமே கடைசி வரை உட்காரவேயில்லை! நடத்துநரின் புத்திக் கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

ஞானம் பெறுவதற்கு, கல்வி, வயது, அனுபவம் மட்டும் போதாது. தீர்க்கமான சிந்தனை, எதையும் ஆராய்ந்து அறியும் திறன், அத்துடன் கொஞ்சம் அனுபவம் எல்லாம் இருக்க வேண்டும். எல்லா முதியவர்களுக்கும், அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் ஞானம் வந்து விடாது.

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Knowledgeable... or....wise....?" என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் (மேலே) பதிவேற்றம் செய்திருக்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.


Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?