எதிரிகளும், போட்டியாளர்களுமே, நமது பலம்...!
நம்மில் பலருக்குப் பரிச்சயமான ‘கார்டூன்’ நண்பர்கள், ‘Tom & Jerry'. வயது வித்தியாசமில்லாமல் எல்லா வயதினருக்கும் பிடித்த ‘இருவர்’. ‘டாம்’ இல்லையேல், ‘ஜெர்ரி’ இல்லை; அது போல ‘ஜெர்ரி’ இல்லையேல் ‘டாம்’ இல்லை. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல! எவ்வளவுதான் ‘டாம்’, ‘ஜெர்ரி’க்குத் தொந்தரவு கொடுத்தாலும், அதை முறியடிக்க ‘ஜெர்ரி’யிடம் சரியான உத்தி உண்டு. ‘டாம்’ தனது எதிர்ப்பின் வலுவைக் கூட்டக் கூட்ட, ‘ஜெர்ரி’யும் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய தந்திரங்களைக் கையாண்டு வெற்றி பெறுவார். இதுவே வாழ்வின் நிதர்சனம்.
நம் ஒவ்வொருவர் வாழ்விலும், பல சந்தர்ப்பங்களில், வெவ்வேறு எதிரிகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நமது எதிரிகளின் செயல்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க, நமது (அவைகளை எதிர்கொள்ளும்) திறமையும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் வெற்றி பெற முடியும். நமக்குத் தெரியாமல் நமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் திறமைகள் அப்போது வெளியே வரும். நாம் பலசாலிகளாக, திறமைசாலிகளாக உருவெடுப்போம். வேறு திறமையான எதிரிகளிடமிருந்து நமக்கு வரக்கூடிய, மேலும் அதிகப்படியான, வலுவான எதிர்ப்புகளைச் சந்திக்கும் நமது சக்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும். நம்மை மேலும் மேலும் வலுப்பெறச் செய்வதே எதிரிகளின் சக்திதான்.....
நமது சினிமாக்களில் கூட, ஒரு பெரிய கதாநாயகனை, மிகப் பெரிய சாதனையாளனாகக் காட்ட வேண்டுமென்றால், அதற்கு ஒரு சாதாரண எதிரி போதாது. எதிரியும், மிகப் பெரிய ஆளாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது கதாநாயகனின் மேன்மை வெளியே தெரியும்.
அதே போல, போட்டியாளர்களும் நமது முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம். ஒரே பொருளை சந்தைப்படுத்தும் வியாபார நிறுவனங்கள், ஒருவரை ஒருவர் எப்படி மிஞ்சுகிறார்கள். இவர் ஒரு புதிய யுக்தியில் பொருளை விளம்பரப்படுத்தினால், அவர், அதற்கு ஒரு படி மேலே போய், வித்தியாசமாக விளம்பரப்படுத்துகிறார். இது மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே போகிறது. இந்த யுக்தியில் உச்சம் தொடுகிறார்கள்! போட்டி இல்லையேல், இது சாத்தியமில்லை.
அது போலவே விளையாட்டுப் போட்டிகளிலும் சரி; சரியான போட்டியாளருடன் நாம் மோதும் போதுதான், நமது திறமை உச்சத்தைத் தொடும். இதை நாம் எல்லாப் போட்டிகளிலும் கண்கூடாகப் பார்க்கலாம்.
நமது சங்க இலக்கியத்தில் கூட, ஒரு பெண், முறத்தால் புலியை விரட்டிய கதை உண்டு. அவளுக்கு எங்கிருந்து அந்த தைரியம் வந்தது? தனது குழந்தையை புலி தாக்க வரும் போது, தனக்கு உள்ளிருந்த ஒரு உத்வேகம், புலியுடன் ஒரு சாதாரன முறத்தை ஆயுதமாக வைத்து போரிட வைத்தது. இது எல்லோருக்கும் சாத்தியமே. இப்போதும் சில காணொலிகளில் நாம் பார்க்கிறோம் - ஒரு தாய் பூனை, தனது குட்டிகளை நாய் தாக்க வரும் போது, ஆக்ரோஷத்துடன் போரிட்டு அந்த நாயை விரட்டுவதை.
எதிரிகள் இல்லாவிட்டால், நமக்குள் (ஓளிந்து) இருக்கும் பலம் நமக்கே தெரியாது. அது போல, சரியான போட்டியாளர்கள் இருக்கும் போது நமது அசாத்தியத் திறமை வெளிப்படும். எதிரிகளும், போட்டியாளர்களுமே, நமது பலம்....
Comments
Post a Comment