ஆசைக்குக் கடிவாளம் போடுவது....... எப்போது?
இது ஒரு 'மகாபாரதக் காலத்து’ நிகழ்ச்சி. துரியோதனாதிகளுக்கும், பாண்டவர்களுக்கும் முந்திய பரம்பரை ஒன்றில், ‘யயாதி’ என்றொரு மன்னன் இந்த நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மனைவி, மற்றும் ஒரு தோழி! மனைவி மூலம் இரு பிள்ளைகளும், தோழி மூலம் மூன்று பிள்ளைகளும் பெற்றான். அவன் முதுமை எய்த போதிலும், அவனுக்கு உலக இச்சைகளில் ஆசை அடங்கவில்லை. தொடர்ந்து இல்லற இன்பத்தை துய்க்க நினைத்தான். அவனது மகன்களைக் கூப்பிட்டனுப்பி பின்வருமாறு கூறினான்: ‘எனக்கு இன்னும் உலக இன்பத்தை அனுபவிக்கும் ஆசை அடங்கவில்லை. ஆதலால், உங்களில் யார் எனக்குத் தனது இளமையைத் தருகிறீர்களோ, அவனுக்கே பட்டம் சூட்டுவேன். எனக்கு இளமையைத் தருவதால் அவனுக்கு முதுமை வந்து சேரும். யார் இதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள்?’
யார்தான் தனது இளமையைத் தானம் செய்ய முன்வருவார்கள்? ஆனால், அவனது கடைசி மகனான ‘புரு’ அதற்குச் சம்மதித்தான். உடனே இருவரும் தங்களது இளமைத் தோற்றத்தையும், முதுமையையும் மாற்றிக் கொண்டார்கள். (இப்படி ஒரு வசதி இந்தக் காலத்தில் இருந்தால், சிலர் இதற்கும் ஆசைப்படுவார்கள்!). சில காலம், யயாதி உலக சுகத்தை, தொடர்ந்து அனுபவித்து வந்தான்.... ஒரு காலக்கட்டத்தில், எப்படியோ அவனுக்கு சுகம் அனுபவிப்பது, அலுப்புத் தட்டி விட்டது. ஆசையை, அனுபவிக்க அனுபவிக்க, அது அடங்கவே அடங்காது; மேலும் மேலும் ஆசை பெருகத்தான் செய்யும் என்பதைப் புரிந்து கொண்டான் மன்னன். எனவே, தன் மகன் புருவை அழைத்து, தனது முதுமையை மகனிடமிருந்து மீண்டும் பெற்றுக் கொண்டு, மகனுக்கு அந்த இளமையைத் திருப்பிக் கொடுத்தான். சொன்னபடியே, புருவிற்கு முடி சூட்டினான். அதன் பிறகு அவன் ‘வானப்ரஸ்தம்’ (வனத்தில் சென்று தனியாக வாழ்வது) சென்றான்.
இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் மிக அரிய பாடம் என்ன? உலகத்தில் எந்த ஆசையாயிருந்தாலும் சரி, அது துய்க்கத் துய்க்க, மேலும் மேலும் பெருகுமே அல்லாது, குறையவே குறையாது. எனவே ஆசையை நன்றாக அனுபவித்து விட்டு, விட்டு விடலாம் என்று எண்ணாமல், அந்த அந்த காலக்கட்டத்தில், விட்டு விட வேண்டிய ஆசைகளை விட்டு விலக வேண்டும்.
நமக்கு நல்ல சாப்பாட்டின் மேல் பிரியம் (ஆசை) இருப்பது சகஜம். அதை ஒரு நிலைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். ஒரு நிலையில், ருசிக்கு முக்கியத்துவம் தராமல், ஆரோக்கியத்திற்காக மட்டுமே உண்ண வேண்டும். சிலருக்கு உலக விஷயங்களில் (தங்களது வீடு, கார், நகை இத்யாதி...) மிகவும் பற்று இருக்கும். இவை எல்லாவற்றையும், தேவையான நேரத்தில் அனுபவித்து விட்டு, அவற்றின் மேல் உள்ள பற்றை, கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டு, வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைக்கு என்ன என்ன வேண்டுமோ, அவற்றை மட்டும் செய்து கொண்டு, நிம்மதியாக இருக்கப் பழக வேண்டும். ”போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து”.
Comments
Post a Comment