ஏன் சிலர் தவறான வழிகளில் பணம் குவிக்க ஆசைப்படுகிறார்கள்?
பணக்காரர்கள் சிலருக்கு, மேலும் மேலும் பணம் சேர்க்க ஆசை ஏற்படுகிறது. இந்த ஆசையில் எந்தத் தவறும் இல்லை. இருக்கும் பணத்தை உபயோகித்து, மேலும் பணம் சேர்ப்பதில் தவறில்லை, அவை சரியான வழிகளாக இருக்கும் பட்சத்தில். ஏனெனில், சரியான வழிகளில் சம்பாந்திக்கும் எவரும் பணத்தைப் பூட்டி வைப்பதில்லை. அந்தப் பணத்தை சந்தைக்குக் கொண்டு வந்து முதலீடு செய்து தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவார்கள். அதனால், பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.
ஆனால், சிலர் பணம் சேர்க்க தவறான வழிகளையே தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு காரணங்கள் பல உள்ளன. இப்படி தவறான வழிகளில் சேர்க்கும் பணம் அநேகமாக தவறான காரியங்களுக்காகவே செலவிடப்படும். மேலும், இந்தப் பணத்தை சுதந்திரமாக வெளியே கொண்டு வர முடியாதாகையால், பூட்டி வைக்கப்படும், யாருக்குமே பிரயோஜனமில்லாமல்! இல்லையென்றால், தனது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து, பணத்தை வாரி இறைத்து, அவர்கள் கெட்டுப்போக காரணமாயிருப்பார்கள். நாட்டிற்கும் பிரயோஜனமில்லாமல், அடுத்த தலைமுறையைக் கெடுக்கவுமே அந்தப் பணம் பயன்படும்.
சரி, ஏன் இவர்கள் தவறான வழிகளில் பணம் குவிப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள்? பொதுவான காரணங்கள் சில......
1) மக்களின் பேராசை - இதைப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட மக்களை, சில அதிகாரிகளின் துணையோடு ஏமாற்றி, பணம் சேர்ப்பது. (மக்களின் பேராசை ஒழிய வேண்டும்).
2) நமது ஜனநாயக அமைப்பு முறையிலும், சட்டங்களிலும் இருக்கும் பெரிய ஓட்டைகளை, இவர்கள் சாதகமாகப் பயன்படுத்தி, தவறான வழிமுறைகளைக் கையாண்டு, பணம் குவிக்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்டுவதற்கென்றே சில ‘அகோரப் பசி’ எடுத்த அதிகாரிகளும் உண்டு. (சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்).
3) இவர்களது குற்றங்கள் வெளிவந்தாலுமே, அதிகாரத்தில் உள்ள சில மோசமான அதிகாரிகளின் துணை கொண்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியம். (அதிகாரிகளின் பேராசை ஒழிந்தால் தான் இதற்கு விமோசனம்).
4) அப்படியே குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றங்களுக்குச் சென்றாலும், இவர்களது குற்றங்களின் மீது தீர்ப்பு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்ற தைரியம். அதுவரை, சாதாரணமாக எல்லோரையும் போல, வெளியே இருக்கலாம், ஜாமீனில் வந்து. குற்றம் நிரூபிக்கப்படும் வரையில், யாருமே குற்றவாளி இல்லை என்கிறது சட்டம்! (குற்றத்தின் மீதான தீர்ப்பு, இத்தனை ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் வர வேண்டும்).
பிறகு ஏன் நாட்டில் குற்றங்கள் பெருகாது?? சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றி, நடைமுறைப் படுத்த வேண்டும்.
இதெல்லாம் இந்தியாவில் நடக்குமா என்பது பெரிய கேள்விக்குறி.... இந்த நேரத்தில் எனக்கு ஒரு சினிமாப் பாடல் தான் ஞாபகம் வருகிறது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’. (நம் நாட்டுத் திருடர்கள் எப்போது திருந்தப் போகிறார்கள்!!)
Comments
Post a Comment