ஆரோக்யமாக வாழ்வோம்; மகிழ்ச்சியாக வாழ்வோம்....
’ஆரோக்யமே மிகப் பெரிய சொத்து’. ஆனால், நம்மில் பலர், சொத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஆரோக்யத்திற்குக் கொடுப்பதில்லை என்பது வேதனையான உண்மை. ஆரோக்யமாக இருக்கக் கூடாது என்று யாரும் நினைப்பதில்லை; ஆனால், அதற்கான முயற்சியில் ஈடுபட யாரும் தயாராயில்லை. ’நான் என் போக்கிலேயே இருப்பேன், ஆனால், நான் மிகவும் ஆரோக்யமாக இருக்க வேண்டும்’. அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டேன்! சின்னச் சின்ன தூரங்களுக்குக் கூட வாகனத்தைப் பயன்படுத்துவேன்; நினைத்த நேரம், நினைத்ததைச் சாப்பிடுவேன்; நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவேன்; உடம்பை அலட்டிக் கொள்ளவே மாட்டேன்....., இருந்தாலும், நான் எந்த நோயின் பாதிப்பும் இல்லாமல், 100 வயதுக்கு மேல் வாழ வேண்டும். இது எப்படி சாத்தியம்?
இதற்கு நிறைய இளைஞர்களின் பதில்: ’எனக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம். எனவே நீங்கள் கூறும் எதையும் என்னால் செய்ய இயலாது. நான் இப்படி உழைக்காவிட்டால், வாழ்க்கையில் முன்னேற முடியாது’. இளமைப் பருவத்தில் ஓடி ஓடி உழைத்து, முதுமையில் நோயுடன் வாழ்வதா? என்ன பிரயோஜனம்! உங்கள் உழைப்பு முக்கியம், சம்பாத்தியம் முக்கியம்; ஆனால், அதை விட உங்கள் ஆரோக்யம் மிகவும் முக்கியம்.
வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை விட ஒரு 30 நிமிஷம் முன்னால் எழுந்து, குறைந்தது 20 நிமிஷம் நடைப் பயிற்சி செய்யலாம். அலுவலகத்திலேயே, 30 நிமிஷங்களுக்கு ஒரு முறை, ஆசனத்திலிருந்து எழுந்து, காலாற 2 நிமிஷம் நடந்து வந்து உட்காரலாம். பக்கத்திலிருக்கும் இடத்திற்குச் செல்ல வாகனத்தைப் பயன்படுத்தாமல், நடந்தே செல்லலாம். முடிந்தால், நல்ல ‘யோகா’ பயிற்சி நிலையத்தில் சேர்ந்து, ‘யோகா’ பயிற்சி செய்யலாம். உணவகங்களில் கிடைக்கும் ‘குப்பை உணவை’ (junk food) தவிர்த்து, வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடலாம். எந்த உணவகமும் கொடுக்க முடியாத ’அன்பு’ என்ற மிகப் பெரிய, அரிய பொருளை உங்கள் வீட்டிலிருக்கும் அம்மாவினாலோ, மனைவியினாலோ மட்டுமே கொடுக்க முடியும். புகை பிடிப்பதைத் தவிர்த்து, மதுப்பழக்கத்தையும் கூடிய வரை தவிர்க்க வேண்டும்.
அந்தக் காலங்களில், வெளியே விளையாடும் நமது பிள்ளைகளை வீட்டுக்குள் இழுத்து வந்து பாடம் படிக்க வைக்க படாத பாடு பட வேண்டும். ஆனால், இன்று, கைபேசி, மற்றும் விளையாட்டு உபகரணங்களிலிருந்து அவர்களின் கவனத்தைத் திருப்பி வெளியே போய் விளையாட வைக்க அரும்பாடு பட வேண்டியிருக்கிறது. எனவே, இந்த உடற்பயிற்சி, உடல் உழைப்பு என்பதை சிறு பிராயத்திலிருந்தே பழக்க வேண்டும்.
நாம் ஆரோக்யமாக இருந்தால் தான், நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும்; நமது பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட பல மடங்கு முக்கியமானது, ஆரோக்யமாக இருப்பது.
Comments
Post a Comment