தோல்வியே மிகப் பெரிய ஆசிரியர்

தோல்வி நம்மை உலுக்குகிறது. நாம் எதிர்பார்க்கவில்லை. அதுவும் மிக ஆவலோடு, வெற்றியை எதிர்பார்த்து இருக்கும் போது தோல்வியைச் சந்தித்தால்...., வாழ்க்கையே போய் விட்டதாக நினைக்கிறோம். இது கண நேர உணர்ச்சி மட்டுமே. ஆற அமர உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தால், நமது தோல்விக்கான காரணம் புரிய ஆரம்பிக்கும். துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தால், மிகத் தெளிவாக நமது தவறு என்ன, எங்கே நேர்ந்தது என்று புரிந்து விடும். அந்தத் தவறுகளைக் களைந்து, அடுத்த முயற்சியில் வென்று விடலாம். இதையும் மீறி, அடுத்த முயற்சியிலும் வேறு எதிர்பாராத தவறுகளையும் செய்ய நேரலாம். மனம் கலங்காமல், என்ன தவறு என்று தெரிந்து, தெளிந்து, மீண்டும் ஒரு முயற்சியில் வெற்றிக்கனியைப் பறித்து விடலாம்.

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் எத்தனை பெரிய அறிவாளிகள். எவ்வளவு பேர் சேர்ந்து, வெவ்வேறு குழுக்களாக செயல்பட்டு எல்லா நுணுக்கங்களையும் நன்றாக ஆராய்ந்து விண்வெளிக்கலம் உருவாக்குகிறார்கள். அவை கூட சில சமயம், எதிர்பாராத விதமாக, தோல்வி அடைந்து விடுகிறது. விடுவார்களா, விஞ்ஞானிகள்...? நடந்திருக்கக் கூடிய தவறைக் கண்டுபிடித்து, அவற்றை நிவர்த்தி செய்து, அடுத்த முயற்சியில் வெற்றி வாகை சூடுகிறார்கள். அவர்கள் அடைந்த தோல்வி, அவர்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும் என்பதே உண்மை.

இருசக்கர மிதிவண்டி (bicycle) ஓட்டத் தெரிந்தவர்களுக்கு, இந்தத் தத்துவம் மிகவும் நன்றாகவே புரியும். கீழே பலமுறை விழாமல், வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டவர்கள் யாராவது உண்டா...? ஒவ்வொரு முறை விழும் போதும், எதனால் விழுந்தோம் என்று யோசித்து, அதை நிவர்த்தி செய்கிறோம். அதே மாதிரிதான், நீச்சல் தெரிந்தவர்களும். தண்ணீரை, ‘மடக் மடக்’கென்று குடித்து, மூச்சுத் திணறித்தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்த பயிற்சியே நமது திறமைக்கு காரணமாகி விடுகிறது. தவறுகளைக் கண்டறிந்து அவைகளைக் களைய உதுவுகிறது.

பெரிய ‘டென்னிஸ்’ வீரர்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்திருப்போம் (காணொலியிலாவது). அவர்கள் பந்தை, இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் விரட்டுவது, சாதாரணமாகத் தெரியும், பார்ப்பவர்களுக்கு. ஆனால், அந்த வீரர்கள் அப்படி விளையாடும் திறமை பெறுவதற்கு முன், எத்தனை தவறுகள் செய்து, பல முறை விடாமுயற்சியோடு பயிற்சி மேற்கொண்டதால்தான், அந்தத் தவறுகளைக் களைந்து வெற்றி பெற முடிந்தது. அதே மாதிரிதான் மற்ற விளையாட்டு வீரர்களும்....

பெரிய தொழிலதிபர்கள் எந்தப் புதிய தொழிலிலும் முன்னேற முடிகிறது. இது எப்படி சாத்தியம்...? அவர்களும், சில தொழில்களில், தோல்வியைச் சந்தித்திருப்பார்கள். அதில் தாங்கள் செய்த தவறுகளைக் கண்டறிந்து, நிவர்த்தி செய்து, பின்னர் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் பல தவறுகளை, பல தொழில்களில் சந்தித்திருப்பதால், தவறுகளை அவர்களால் சுலபமாகக் கண்டறிய முடிகிறது; அதுவே அவர்களது வெற்றியின் ரகசியம்!

வெற்றி, நம்மை அகங்காரம் கொள்ளச் செய்யும். வெற்றிக்களிப்பில் மிதந்து விடுவோம். அடுத்த முயற்சியில், அதே அகங்காரம், நம் கண்ணை மறைத்து விடும். படுதோல்வியைச் சந்திக்க நேரும். ஆனால், தோல்வி நம்மை, பதப்படுத்தி, சமமான மனநிலையில் நம்மை வைத்திருந்து, அடுத்த முயற்சியில் வெற்றி கொள்ளச் செய்யும். வெற்றி பெற்றவனிடம் பாடம் படிப்பதை விட, தோல்வியைச் சந்தித்தவனிடம் கற்றுக் கொண்டால், நமது இலக்கை சீக்கிரமே அடையலாம். நாம் தோற்கவில்லை என்றால், முயற்சியே செய்யவில்லை என்றுதான் அர்த்தம்!

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?