சொல் ஒன்று, பொருள் பல்வேறு....
'சும்மா’ என்ற சொல்லுக்கு, பேசப்படும் இடத்தைப் பொருத்து, பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை சமீபத்தில் ஒரு பதிவில் கண்டேன். அதன் தாக்கமே, என்னுடைய கீழ்க்காணும் பதிவு....
இரண்டு பெண்கள் நடந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமான ஒரு நபர் எதிரே வருகிறார். அந்தப் பெண்மணிகளைப் பார்த்து, ‘உங்கள் இருவரையும் பார்த்தால், சகோதரிகள் மாதிரி தெரிகிறது’ என்கிறார். சொல்பவரின் உள்நோக்கம் இதுதான்: இருவரில் மூத்தவர் (மற்றொரு பெண்ணின் தாயார்) மிகவும் இளமையாக இருக்கிறார். இதைப் பாராட்டாக நினைத்துத்தான் சொல்கிறார். ஆனால், இதில் ஒரு சின்ன மறைமுகமான விஷயம் என்னவென்றால், மகள் இதைத் தவறாக நினைக்கக் கூடாது - ’தான், அம்மாவை ஒப்பிடும் போது அவ்வளவு இளமையாக இல்லையோ’ என்று. எனவே, இந்த நிலையை உத்தேசித்து, சொல்பவர் இப்படிக் கூறலாம், அம்மாவைப் பார்த்து - ‘நீங்கள் மிகவும் இளமையாகத் தோன்றுகிறீர்கள்’. இதில் மகளுக்கு எந்த வித மாற்று எண்ணமும் வருவதற்கு இடமேயில்லை. இது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும், தவிர்க்கலாமே..... (இனிய உளவாக இன்னாத கூறல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - திருக்குறள்)
ஒருவர், ஒரு காரியத்தைச் செய்து முடிக்கிறார். அதை நன்றாக கவனித்த மற்றொரு நபர், காரியத்தை முடித்தவரிடம் கூறுகிறார், ‘உங்களை மாதிரி யாராலும் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது’. இதற்கு இரண்டு விதமாக அர்த்தம் காணலாம். உண்மையிலேயே, மிகவும் நேர்த்தியாக அந்தச் செயலை செய்து முடித்திருக்கலாம். அப்படியானால், பாராட்டு நேர்மறையானது. காரியத்தை மிகவும் மோசமாக செய்திருந்தாலும், வஞ்சப் புகழ்ச்சியாகவும் இப்படிக் கூறியிருக்கலாம். அவர் கூறியதற்கு உண்மையான அர்த்தம் - இதை உன்னை விட யாராலும் இப்படி சொதப்ப முடியாது - இதில் சரியான அர்த்தத்தைக் காண்பது, காரியம் செய்தவரின் திறமையைப் பொருத்தது.
இந்திய ஆங்கில நாவலாசிரியர் ‘சேத்தன் பகத்’. அவரது ஒரு நாவலில் ஒரு காட்சி. ‘கை ரேகை ஜோசியம்’ பார்ப்பவர், ஒருவரின் கையைப் பார்த்துக் கூறுகிறார், ‘இதைப் போன்ற ரேகை அமைப்பை நான் வேறு யார் கையிலும் காணவில்லை. அவ்வளவு விசேஷமாக இருக்கிறது’. இதை அருகில் இருந்து கவனித்த மற்றொரு நபர், அவர் கையை ஜோசியரிடம் காண்பிக்கிறார். கையைப் பார்க்கிறார்; அவரிடமும் இதையே சொல்கிறார். கையைக் காண்பித்தவர், துருவித் துருவி, ஜோசியரிடம் கேட்ட பின், அவர் உண்மையை ஒப்புக் கொள்கிறார். அதாவது, யார் கையைப் பார்த்தாலும் இதையே தான் சொல்வாராம். இது ஒரு வியாபாரத் தந்திரம்! இந்த சூழ்நிலையில், அந்த வாக்கியத்திற்கு அர்த்தமே இல்லை!
”என்னை ஏன் என்று கேட்க யாருமேயில்லை” - இந்த வாக்கியத்தை ஒரு இளைஞர் கூறினால், அதன் அர்த்தம் ஒன்று (அகங்காரம்). இதையே, கவனிப்பாரற்று இருக்கும் ஒரு முதியவர் கூறினால், அதன் அர்த்தமே வேறு (பரிதாபம்). யார் பேசுகிறார்கள் என்பதைப் பொருத்து அர்த்தமே மாறுகிறது! “உன்னை கவனித்துக் கொள்கிறேன்” என்ற வாக்கியத்துக்கு, யார் எந்த சூழ்நிலையில் கூறுகிறார்கள் என்பதை வைத்து அர்த்தம் முழுவதும் மாறுபடும்.
மனைவி, கணவனிடம் (கோபத்தில்) கூறுகிறார், ‘ஒன்றும் இல்லை’.... அப்படியென்றால், நிறைய இருக்கிறது என்று அர்த்தம்....!
பெரிய இராஜதந்திரிகள் (diplomats), ’ஆமாம்’ என்று கூறினாலும், அதன் உண்மையான அர்த்தம், ‘இல்லை’ என்பதே. அப்படிப் பேசத் தெரிந்தவர்கள் அவர்கள்!
எப்போதுமே, யார் நம்மிடம் எதைக் கூறினாலும், அதன் உண்மை அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் நுண்ணறிவு நமக்கு இருக்க வேண்டும்.
Comments
Post a Comment