கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்....
சமீபத்தில் ஒரு whatsapp செய்தி பார்த்தேன். ஒரு உல்லாசப் படகு, ஒரு விபத்தின் காரணமாக மூழ்கும் தறுவாயில் இருந்தது. எல்லோரும் அந்நேரத்தில் காப்பாற்றப் பயன்படும் சிறிய படகில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு ஆளுக்கு அந்தப் படகில் இடம் இருந்தது. ஆனால், காப்பாற்றபட ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். நேரம் தாமதிக்க இயலாத சூழ்நிலை; உடனே முடிவெடுத்தாக வேண்டும், யார் அந்தப் படகில் செல்வதென்று. சட்டென்று அந்தக் கணவன் படகில் ஏறினான். சற்று நேரத்தில் அந்த உல்லாசப் படகு மூழ்கி விட்டது (அந்த மனைவியுடன்). நாம் உடனே நினைப்பது, ‘இப்படி சுயநலக்காரக் கணவனாக இருக்கிறானே’ என்று தான். உண்மை அதுவல்ல.
அந்தத் தம்பதிக்கு சிறு வயதில் ஒரு பென் குழந்தை இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அந்த மனைவி, குணப்படுத்த முடியாத நோயில் பாதிக்கப்பட்டிருப்பதும், கூடிய விரைவில் இறந்து விடுவார் என்றும் தெரிய வந்தது. இறக்கும் முன், கணவனுடன் ஒரு சிறிய உல்லாசப் பயணம் செல்ல முடிவெடுத்துத்தான் அந்தப் பயணம் மேற்கொண்டார்கள். கணவனுக்குப் பதிலாக மனைவி காப்பாற்றப்பட்டிருந்தால், கணவன் உல்லாசப் படகுடன் இறந்து போயிருப்பான். மனைவியும் சில நாட்களில் நோயால் இறந்து விடுவாள். அவர்களது சின்னக் குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்? அதனால் அந்த முடிவை அந்தத் தம்பதி அந்தக் கண நேரத்தில் எடுத்தார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில், நாம் எல்லா ஊடகங்கலிலும் நிமிடத்திற்கு நிமிடம் செய்திகளைப் பார்த்தும், கேட்டும் வருகிறோம். அதில் அநேகமாக 80% பொய்யான தகவல்களே இருக்கின்றன. உடனே ஒரு முடிவுக்கு வராமல், நன்றாக ஆராய்ந்து ‘எது சரி, எது தவறு’ என்று முடிவு செய்ய வேண்டும்.
மற்றுமொரு உதாரணம்: ஒரு பணக்காரத் தந்தையின் மகன் ஒரு விபத்தில் காயமுற்று, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவனை மருத்துவ மனையில் சேர்த்து விட்டு அறுவை சிகிச்சை செய்யும் பெரிய மருத்துவர் வருகைக்காகக் காத்திருந்தார்கள். கால தாமதம் ஆக ஆக, பணக்காரருக்குக் கோபம் வந்தது. சற்று நேரத்தில் மருத்துவரும் வந்தார்; உடனே அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்து விட்டார். ஒரு மணி நேரத்திற்குப் பின் வெளியே வந்து, ‘உங்கள் மகன் காப்பாற்றப்பட்டார்; கவலை வேண்டாம்’ என்று கூறி விட்டு, உடனே கிளம்பி விட்டார். ‘ஏன், அதை நின்று நிதானமாகச் சொல்லி விட்டுப் போகலாமில்லையா?’ என்று அந்த மருத்துவரைக் கடிந்து கொண்டார். மருத்துவர் பதில் ஏதும் கூறாமல் விரைந்து சென்று விட்டார். உதவி செய்த சக மருத்துவர், ‘அந்தப் பெரிய மருத்துவரின் மகன் ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவர் மகனின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார். உங்கள் மகனுக்கு அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், பாதியிலேயே வந்து விட்டார். இப்போது, அதைச் செய்து முடிக்கவே விரைவாகச் செல்கிறார்’ என்று கூறினார். நாம் ஒன்று நினைக்கிறோம்; உண்மை வேறு மாதிரி இருக்கிறது!
கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் பெரிய மனிதத் தோற்றத்தில் இருப்பவர், படகுக் காரில் பவனி வருவார்; உண்மையிலேயே பணக்காரர் (நேர்மையாக சம்பாதித்தவர்), சாதாரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்வார். இதுதான் உலகம். தோற்றத்தைப் பார்த்து எந்த முடிவுக்கும் வரக் கூடாது. ஒரு புத்தகத்தின் மேல் அட்டையைப் பார்த்துப் புத்தகத்தின் தன்மையை மதிப்பிட முடியாது. எதையும், பார்த்தும், கேட்டும் எந்த முடிவுக்கும் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது. தீர விசாரித்து, நமது புத்தியையும், பகுத்தறியும் தன்மையையும் பிரயோகித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
Comments
Post a Comment