மனிதனைப் பக்குவப்படுத்தும் இடம்....?
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு பகிர்வை வாசித்தேன். ஒரு வகுப்பறை. சுமார் 30 மாணவர்கள். அதில் ஒரு பணக்கார மாணவனுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை ஒரு மாணவன் திருடி விடுகிறான். கொஞ்ச நேரத்தில், கைக்கடிகாரம் காணாமல் போனது, அதன் உரிமயாளருக்குத் தெரிந்து விடுகிறது. யாரைச் சந்தேகிப்பது...? அவன், ஆசிரியரிடம் புகார் கொடுக்கிறான்.
ஆசிரியர் அதை எப்படிக் கையாண்டார்? மிகவும் சாமர்த்தியமாக, யார் மனமும் புண்படாமல், தவறு செய்த மாணவனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் வகையில்.....! எல்லா மாணவர்களையும் ஒரு வட்ட வடிவில் நிற்க வைத்தார். எல்லோரையும் அவரவர் கண்களை இறுக மூடச் சொன்னார். எல்லோரும் அதன்படிச் செய்தனர். ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் வரிசையாக சோதனை செய்தார். ஒரு மாணவனிடம் கைக்கடிகாரம் இருந்தது. ஆனாலும், அவர் மீதி இருந்த மாணவர்களையும் சோதனை செய்தார் (செய்ததாக நடித்தார்...!). எல்லோரையும் கண்களைத் திறக்கச் சொன்னார். உரிய மாணவனிடம் கைக்கடிகாரத்தைச் சேர்ப்பித்தார். வேறு எதையும் யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிகழ்ச்சி நடந்து பல ஆண்டுகள் கழித்து, கைக்கடிகாரத்தைத் திருடிய மாணவர், அந்த ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. தான் தற்போது ஒரு ஆசிரியராக இருப்பதாகவும், அதற்கு முக்கிய காரணம் அந்த ஆசிரியர் தான் என்றும் கூறினார். ‘அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியையும்’ நினைவு கூறினார். அதற்கு அந்த ஆசிரியர் கூறினார்,’அந்த மாணவன் நீ தான் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால், உங்கள் எல்லோரையும் சோதிக்கும் பொழுது, நானும் என் கண்களை மூடிக் கொண்டிருந்தேன்’. இதைக் கேட்ட மாணவர் அப்படியே ஸ்தம்பித்துப் போய் விட்டார். அந்த ஆசிரியருக்குத்தான் எவ்வளவு மேன்மையான குணம்...!
ஒரு பட்டிமன்றப் பேச்சாளர், ‘மாணவர்களிடையே ‘பாகுபாடு (discrimination)’ பார்க்கக் கூடாது. ஆனால், அவர்களுக்குள்ள ‘வேறுபாடு (difference in ability)' தெரிந்திருக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி, அவர்களுக்குள்ளிருக்கும் திறமையை வெளிக் கொணர்ந்து, அவர்களை முன்னேறச் செய்ய வேண்டும். இதுவே கல்வியின் வெற்றி’. என்று கூறினார். இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை எப்படி விளக்கினார் என்பது அவரது முழு உரையையும் கேட்டால் நன்றாக விளங்கும். ‘பள்ளியின் வெற்றி, அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வது; மாணவனின் வெற்றி, அவன் நல்ல மதிப்பெண் எடுப்பது; ஆசிரியரின் வெற்றி, அவரது மாணவர்கள் எல்லோரும் நல்ல மதிப்பெண் எடுப்பது.... இவை எல்லாவற்றையும் காட்டிலும், மாணவர்களை பக்குவப்படுத்தி, வெளி உலகுக்கு அறிமுகம் செய்வதே கல்வியின் வெற்றி’ என்று கூறினார்.
பெற்றோர்களுக்கு அடுத்து, நமது பிள்ளைகளைப் பக்குவப்படுத்தும் இடம், கல்விச்சாலையே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதுவே கல்வியின் அடிப்படைத் தத்துவம். இப்போது எப்படியிருந்தாலும், இனிமேலாவது இம்மாதிரி மாற வேண்டும் என்பதே நமது எல்லோரது விருப்பம், நம்பிக்கை....
Comments
Post a Comment