யாரெல்லாம் நாவின் சுவைக்கு அடிமை...!
நாவின் சுவைக்கு அடிமையாகாதவர்கள் நம்மில் யாருளர்? நல்ல ‘அமைதியான தூக்கத்திற்கு’ அடுத்ததாக நாம் எல்லோரும் விரும்புவது நல்ல சுவையுள்ள உணவைத்தானே! நம்மில் பலருக்கு, அவரவர் ‘அம்மா’தான் உலகத்திலேயே சிறந்த சமையல் கலைஞர். ஏனெனில், பிறந்தது முதல் நாம் சாப்பிட்டுப் பழகியது அம்மாவின் சமையலைத்தான். (திருமணத்திற்கு அப்புறம், மனைவியின் சமையல் தான் பிடிக்கும் என்பது வேறு விஷயம்!)
நம்மில் பலர், நமக்குப் பழக்கப்பட்ட பாரம்பரிய உணவைத்தான் விரும்பி சாப்பிடுவோம். அவைதான் உலகிலேயே சிறந்த, சுவையான உணவு என்று எல்லோரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்வோம். வேறு பிரதேச அல்லது வேறு நாட்டு உணவை எப்போதாவது சாப்பிட்டாலும், (அதை ரசித்தாலும்), நமது உணவே மிகச் சிறந்தது என்ற உணர்வு எல்லோரிடமும் இருக்கும். நமது இடங்களை விட்டு வேறு எங்கு சென்றாலும், நாம் தேடுவது, இட்லி, தோசை, சட்னி, சாம்பார் இவைதான்.
ஒரு பெங்காலியிடம் கேட்டுப் பாருங்கள். ‘என்ன, மீன் இல்லாத உணவு ஒரு உணவா?’ கேரளாக்காரர் கேட்பார், ‘இதில் தேங்காய் இல்லையா?’ ஆந்திர தேசத்துப் பேர்வழி ஆச்சர்யப்படுவார், ‘என்ன இதில் காரமே இல்லை’ என்று! கர்நாடகாக்காரருக்கு, எதிலும் கொஞ்சம் இனிப்பு இருக்க வேண்டும். குஜராத்திக்காரருக்கு எந்த உணவு சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு ‘ஸ்வீட்’டாவது இருக்க வேண்டும். இப்படி நமது நாட்டில் எத்தனை விதமான உணவுப் பழக்கங்கள்! ஆனாலும், எல்லா இந்தியர்களுக்கும் பொதுவாகப் பிடித்தவை சில ‘சீன தேசத்து உணவு வகை’, ’இத்தாலி நாட்டு பிசா’, பெல்ஜிய நாட்டு waffle', அமெரிக்க நாட்டு fried chicken' முதலானவை.
கொரோனா காலத்திற்கு முன் பெங்களூரு சென்றிருந்த சமயம், ஒரு வணிக வளாகத்திற்குச் சென்றிருந்தோம். ஒரு கடையில், வெறும் ‘பன்’ வகைகள் மட்டும் விற்கிறார்கள். அடேயப்பா....! ‘பன்’ன்னில் இத்தனை வகையா என்று ஆச்சர்யப்படுமளவிற்கு இருந்தன. வெறும் ‘டோனட்’ (donut) மட்டும் விற்பனை செய்யும் கடைகளும் இருக்கின்றன. கொஞ்சம் ‘baking' திறமை இருந்தால், நாமே வீட்டில் செய்து கொள்ளலாம். ஒவ்வொன்றும் ‘யானை விலை’, ‘குதிரை விலை’ சொல்கிறார்கள். அதே போல, french fries, pizza, fried chicken, milk shakes இப்படி எல்லா உணவு வகைகளிலும் பலப் பல வகைகளில் விற்பனை செய்கிறார்கள். நமது ‘பணப்பை’ கனமாக இருந்தால், எல்லாவற்றையும் சுவைத்துப் பார்க்கலாம்; நமது உடல்நிலையும் ஒத்துழைத்தால்....
ஆனால், நமக்கு எப்போதும் பிரியமான உணவு என்றால், அது ‘பிரியாணி’ தான். இதில்தான் எத்தனை வகை - ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, லக்னோ பிரியாணி, காஷ்மீரி பிரியாணி, பாம்பே பிரியாணி, தலஸ்ஸேரி பிரியாணி, கொல்கட்டா பிரியாணி....
இன்றைய அதிவேக உலகில், இவையெல்லாம் சர்வ சாதாரணம். வரும் காலங்களில், உணவுத் தொழில் மேலும் செழித்து, கொழிக்கப் போகிறது. நமக்கு, சமையலில் திறமை இருந்து, புது முயற்சிகளில் ஆர்வமும் இருந்தால், நிறைய சாதிக்கலாம். இது கடல் போன்று மிகப் பெரியது. இதற்கு எல்லையே இல்லை.
Comments
Post a Comment