விரக்தியை எப்படிக் கையாள்வது?

சமீபத்திய செய்தி ஒன்று.... ஒரு ரஷ்ய நாட்டவர், தனது (சுமார்) 2.5 கோடி ரூபாய் பெறுமானமுள்ள Benz காரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார் - காரணம், பல தடவை கார் தொழிற்சாலைக்குச் சென்றும் தனது காரை சரிவர பழுது பார்க்க முடியவில்லை. அதைச் சரிசெய்வதற்கு ஒரே வழி காரை தீயிட்டு சாம்பலாக்குவது மட்டுமே என்று தனது விரக்தியின் எல்லையில் முடிவெடுத்தார். அந்தச் செய்திக்கு வந்த ஒரு கருத்து, ‘எனது பழைய சைக்கிளைக் கூட என்னால் கொளுத்த முடியவில்லை!’

நம்மில் நிறையப்பேர் ‘டென்னிஸ்’ விளையாட்டை தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கிறோம். ஒரு point-க்கு நிறைய நேரம் விளையாடிய பிறகும் ஒருவர் தோற்று விடுகிறார். உடனே விரக்தியில் தனது மட்டையை (racquet) தரையில் அடித்து உடைக்கிறார். அப்போதுதான் அந்த விரக்தியின் பாதிப்பிலிருந்து அவரால் வெளியேற முடியும். அது ‘மட்டையின்’ தவறா - என்று அவர் யோசிப்பதில்லை. நாம் சமையல் செய்யும் போது, pressure cooker-ல் அழுத்தம் அதிகமான உடன் அது அதிகப்படியான அழுத்தத்தை வெளியேற்றி விடுகிறது. இல்லையேல், அது வெடிக்கக்கூடும். எப்படியோ, நமக்கு, ‘நம் மீது உள்ள கோபத்தை (விரக்தி)’ வெளியேற்றி விட வேண்டும்.

வகுப்பில், சேட்டை செய்யும் பையன் மீது, பல முறை எச்சரித்தும் கேட்காவிடில், ஆசிரியர் கரும்பலகையில் எழுத்தை அழிக்கும் duster-ஐத் தூக்கி வீசி எறிவதைப் பார்த்திருக்கிறோம். பேனா சரியாக எழுதாவிடில், அதன் கூர்மையை அழுத்தி, நசுக்கி இருக்கிறோம். அதில் ‘மை’ இல்லாதிருக்கலாம்; மை வரும் தன்மை மாறியிருக்கலாம். அது என்னவென்று பாராமல், அதை உடைத்து விடுகிறோம், விரக்தியில். நமக்குப் பிடிக்காத செய்தியோ அல்லது நமக்குப் பிடிக்காத நபரோ, அலைபேசியில் நம்மிடம் பேசும் போது, அதை உடைத்து விட ஆத்திரம் கொள்கிறோம். அலைபேசியின் விலையை யோசித்து, நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்கிறோம்!

ஒரு எரிமலை, அதற்கு உள்ளே உள்ள நெருப்புக் குழம்பின் அழுத்தம் அதிகமாகும் போது, தலையை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. இது இயற்கை. அப்படி வராமலிருந்தால் தான் அது அதிசயம். எனவே, விரக்தி என்ற உணர்வு நமக்கு அவ்வப்போது வருவது என்பது, நாம் மனிதர்கள் தான் என்பதை நிரூபிக்கிறது. நாம் எப்படி அந்த விரக்தியின் வெளிப்பாட்டை நேர்கொள்கிறோம் என்பதில் தான் நமது திறமை இருக்கிறது.

நான் சிலரைப் பார்த்து வியப்பதுண்டு. அவர்கள் கோபப்பட்டு தங்கள் உணர்வைக் கொட்டுவதால், அவர்களுக்கு ரத்தக் கொதிப்பு வருகிறதா; இல்லை, ரத்தக் கொதிப்பு இருப்பதால் தான், அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களா என்று! சிலர், என்ன நடந்தாலும், கோபமோ விரக்தியோ அடைவதில்லை. அதற்குக் காரணம் அவர்களது தொடர் பயிற்சி தான். யோகாசனப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி நமது கோபத்தையும் விரக்தியையும் கட்டுப்படுத்த உதவும். அதன் மூலம் நமக்கோ, மற்றவர்களுக்கோ எந்த வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம். பெருநகரங்களில், காலை நேரத்தில் வாகனம் ஓட்டிச் செல்பவருக்கும் அசாத்தியப் பொறுமை, காலப்போக்கில் வந்து விடும். சேலைக் கடையில் விற்பனைப் பிரிவில் வேலை செய்யும் நபருக்கும், இமாலயப் பொறுமை கூடிய சீக்கிரம் வந்து விடும் என்று என் நண்பர் ஒருவர் கூறுகிறார்!

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?