நான் சொல்வது சரியா..., தவறா....? ‘சரி’ என்பர் சிலர், ‘தவறு’ என்பர் வேறு சிலர்....!
குழப்பமாக இருக்கிறதா? இதில் குழப்பமடைவதற்கு ஒன்றுமே இல்லை! ஏனென்றால், எல்லா நாணயத்திற்கும் இரண்டு பக்கம் உண்டு. நான் சொல்வது சரி என்பவர்கள், நாணயத்தின் ஒரு பக்கத்தைப் பார்க்கிறவர்கள்; தவறு என்பவர்கள், மறு பக்கத்தைப் பார்க்கிறவர்கள்; அவ்வளவுதான்! இரண்டு பக்கத்தையும் முழுமையாகப் பார்க்கிறவர்களே மிகச் சரியான கருத்தைக் கூற முடியும்.
நாம் எல்லோரும் பட்டிமன்றப் பேச்சைக் கேட்டிருப்போம். ஒரு பக்கத்துப் பேச்சாளர் பேசும் போது, அவர் கூறுவதுதான் சரி என்று தோன்றும். உடனே, எதிர்த் தரப்புப் பேச்சாளர் பேச ஆரம்பித்தவுடன், நமது மனது அலைபாய ஆரம்பிக்கும். இப்படியே மாறி மாறி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நடுவர், இரண்டு பக்கக் கூற்றையும் ஆராய்ந்து தனது ‘தீர்ப்பைச்’ சொல்வார். சில சமயம், நடுவர், இரண்டு அணிக்கும் பொதுவான தீர்ப்பைச் சொல்வதும் உண்டு. அதே பேச்சாளர்களை அணி மாறிப் பேசச் சொன்னாலும், மிக அருமையாகப் பேசுவார்கள். ஏனென்றால், அவர்கள் இரண்டு பக்கத்தையுமே நன்கு அறிந்தவர்கள்.
நீதிமன்றத்தில், இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதத்தினை எடுத்துரைத்த பின், நீதிபதி, அதை நன்கு ஆராய்ந்து, தீர்ப்பு சொல்கிறார். ஆனால், 5 நீதிபதிகள் கொண்ட ஒரு அமைப்பில், 3 பேர் ஒரு முடிவையும், 2 பேர் எதிர்மறையான தீர்ப்பையும் எட்டுவது எப்படி? எந்தத் தீர்ப்புமே முழுமையாகச் சரி இல்லை என்றுதானே அர்த்தம்! கடைசியில் 3 நீதிபதிகள் கூறும் தீர்ப்பே ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் (நடைமுறை சாத்தியம்), நாம் அதை ‘சரி’ என்று முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால், மற்ற 2 நீதிபதிகளுமே கற்றறிந்த, தீர்க்கமான நுண்ணறிவு கொண்டவர்கள் தானே!
இது இன்று நேற்று நடப்பதல்ல. நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும், பல இடங்களில் இம்மாதிரி வாதப் பிரதிவாதங்களைக் காணலாம். ‘பொய்’ கூறுவது தவறு என்பது ஆன்றோர்கள் கூறிய வாக்கு. ஆனால், அதே பொய், அதைச் சொல்வதால், நன்மை பயக்குமெனில், அதைக் கூறுவதில் தவறில்லை என்றும் சொல்லப்படுகிறது (பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின் - திருக்குறள்).
நமது அரசியல்வாதிகள், மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே ஆட்சியைப் பிடிக்க முயல்வதாகக் கூறி நமது வாக்கைப் பெருகிறார்கள். அதில் சிலர் கூறுவது சரியாகவும், சிலர் கூறுவது தவறாகவும் இருக்கிறது. யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்று நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.
நான் மேலே கூறிய கருத்தில் சிலருக்கு உடன்பாடு இருக்கலாம்; சிலருக்கு மாற்றுக் கருத்தும் இருக்கலாம். எல்லோருமே ‘சரி’தான்! ஏனென்றால், ‘முற்றிலும் சரி’ (absolutely right) என்று எதுவுமே இந்த உலகத்தில் இல்லை. இதுவே ‘நிதர்சனம்’.
Comments
Post a Comment