இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து....

’மகாபாரதம்’ சொல்லும் ஒரு கதை... (சமீபத்தில் வலைத்தளத்தில் நான் பார்த்தது). பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்பி, அவர்களைக் கூண்டோடு முடிக்க சூழ்ச்சி செய்து, துரியோதனன் அதற்கான ஏற்பாட்டைச் செய்கிறான். அந்த சூழ்ச்சியில், பாண்டவர்கள் இறந்து விட்டதாக சில நிகழ்வுகளை வைத்து திருதராஷ்டிரனும் மற்றவர்களும் நம்புகிறார்கள். இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, துரியோதனனுக்கு அவசர அவசரமாக ‘முடிசூட்டு விழா’ நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விவரம் தெரிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தனது சகோதரன் பலராமரை அங்கு அனுப்புகிறார். ஒரு விஷயத்தைப் பற்றி விசாரிக்கச் சொல்லி அனுப்புகிறார். முடி சூட்டு விழா நடக்க ஒரு சில நொடிகள் இருக்கும் போது, அங்கு பலராமர் நுழைகிறார்...

அதற்கு முன், ஒரு flash-back.... வாரணாவதம் ‘அரக்கு மாளிகை’யிலிருந்து தப்பித்த பாண்டவர்கள், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்தார்கள். அந்த கிராமத்தின் நடைமுறைப்படி, அந்த வீட்டின் ஒரு நபர், அந்த கிராமத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு அரக்கனுக்கு உணவாக அனுப்பப்பட வேண்டிய முறை அன்று. பீமனை (அந்த வீட்டின் நபருக்குப் பதிலாக) அனுப்பி வைக்கிறாள் பாண்டவர்களின் தாயான குந்தி. ஆனால், பீமன் அந்த அரக்கனைக் கொன்று விடுகிறான்.

மீண்டும், திருதராஷ்டிரனின் அரண்மனைக்குள் நுழைவோம்... பலராமர், துரியோதனனுக்கு ‘கதை யுத்தப் பயிற்சி’ கற்பித்த ஆச்சாரியர் என்பதால், உடனே அவர் அரச சபைக்குள் வரவேற்கப்படுகிறார். 

பலராமர் : துரியோதனா! காட்டில், ‘பகாசூரன்’ (பீமனால் கொல்லப்பட்ட அந்த அரக்கன்) கொல்லப்பட்டான், தெரியுமா?

துரியோதனன் : தெரியாது ஆச்சாரியரே!

பலராமர் : பகாசூரனைக் கொல்லக் கூடியவர்கள், இவ்வுலகில் 3 பேர்... 1) நான், 2) பீமன், 3) நீ..... நான் கொல்லவில்லை. பீமன் உயிரோடு இல்லை (எல்லோராலும் நம்பப்படுவது); எனவே நீ தான் அவனைக் கொன்றிருக்க வேண்டும். இது உண்மையா?

துரியோதனன் : ஆச்சாரியரே! நான் ஒரு வருட காலமாக அரண்மனையை விட்டு வெளியே செல்லவில்லை. இது எப்படி சாத்தியம்....?

இதன் பிறகு, எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வருகிறது... 'பாண்டவர்கள் இன்னும் இறக்கவில்லையோ' என்று. பாண்டவர்கள் உயிரோடு இருக்கும் போது, மூத்தவனான தருமனுக்கே முடிசூட வேண்டும். எனவே, முடிசூட்டு விழா நிறுத்தப்பட்டது.

துரியோதனனின் முடிசூட்டு விழாவை கிருஷ்ணர் சென்றிருந்தால் கூட நிறுத்தியிருக்க முடியாது. யாரை அனுப்பினால், தான் நினைத்த காரியத்தை முடிக்க முடியும் என்று அறிந்த பகவான், அவரது அண்ணன் பலராமரை அனுப்பி, நினைத்ததை நடத்திக் காட்டினார்.

இராமாயணத்திலிருந்து ஒரு காட்சி.... சீதாப்பிராட்டி, ராவணனால் சிறைப் பிடிக்கப்பட்டு, இலங்கையில் அசோக வனத்தில் அடைத்து வைக்கப்படுகிறார். சீதாதேவியை சிறைமீட்டு வர, ராமபிரான், சுக்ரீவன் ஆளும் நாட்டின் வானரங்களின் உதவியைப் பெறுகிறார். சில நாட்களுக்கு முன், சுக்ரீவனின் அண்ணன் வாலியைக் கொன்று, நாடாளும் உரிமையை சுக்ரீவனுக்குப் பெற்றுத் தருகிறார் ராமபிரான்.

எந்த நாட்டில், அன்னை ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உத்தேசமாக அறிந்திருந்தாலும், சரியான இடத்தைக் கண்டுபிடித்து, சிறை மீட்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு மிகச் சரியான நபர் ’வாயுபுத்திரன்’ ஹனுமான் என்பதை நன்கு அறிந்த ராமபிரான், ஹனுமான் கையில், தனது கணையாழியைக் கொடுத்து (சீதாபிராட்டி அடையாளம் காண்பதற்காக), இலங்கைக்கு அனுப்பி, நினைத்த காரியத்தை செவ்வனே செய்து முடிக்கிறார்.

ஒரு காரியத்தை முடிக்க பல பேரால் முடியும் என்றாலும், அதை மிகச் சரியான முறையில் செய்து முடிக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும். அதைத் தெரிந்து சரியான நபரை, அந்தக் காரியத்தில் ஈடுபடுத்துவதே சிறப்பு.

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து,

அதனை அவன் கண் விடல்” - 

திருக்குறள் 517 - ’தெரிந்து வினையாடல்’ அதிகாரம். (இந்தத் தொழிலை, இக்கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு, அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் - மு. வரதராசனார் உரை)

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?