உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமை (latent talent) என்ன....?
வெகுவாகப் போற்றப்படும் இதிகாசமான இராமாயணத்தில் இருந்து ஒரு தகவல். தசரதச் சக்கரவர்த்திக்கு ஒரு வித்தியாசமான திறமை இருந்தது. தொலைவில் இருக்கும் இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இருந்து வரும் சப்தத்தைக் கேட்டு, அதைத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய திறமைதான் அது. உதாராணமாக, ஒரு யானை, ஒரு நீர்நிலையில் தண்னீர் அருந்திக் கொண்டிருக்கும் போது எழும் ஓசையிலிருந்து, அவர் இருந்த இடத்திலிருந்தே அந்த யானையைக் குறி வைத்து அம்பு எய்தக் கூடிய திறமை படைத்தவர். (இதே திறமையில் ஒரு தவறு ஏற்பட்டு அதனால் ஒரு சாபமும் பெற்றார் என்பது வேறு கதை!)
மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான அர்ஜுனன், வில்வித்தையில் பெரிய சூரன் என்பது எல்லோருக்கும் தெரியும். மேலே சுழன்று கொண்டிருக்கும் மீன் வடிவ பொம்மையை, அதன் கீழே உள்ள நீரில் தெரியும் பிம்பத்தை வைத்து, அம்பு கொண்டு வீழ்த்த வேண்டும் என்பது போன்ற மிகவும் கடினமான இலக்குகளை அவனால் எளிதில் அடைய முடியும். அர்ஜுனனால் மட்டுமே செய்ய முடியும் என்று போட்டிகளை அமைத்து, (அவன் மட்டும் தான் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்), திரௌபதிக்கு ‘சுயம்வரம்’ நடத்துகிறார், அவளது தந்தையான துருபதன்.
துரியோதனனுக்கு, அவனது கெட்ட எண்ணங்களில் எல்லாம் துணை நிற்கும் ‘சகுனி’ மாமா, ‘தாயம் உருட்டுவதில்’, கைதேர்ந்தவன். அவன் சொன்னபடியெல்லாம் கேட்குமாம் தாயக்கட்டைகள்! அப்படி ஒரு திறமை அவனிடம்...
நாம் எல்லோருமே ஏதோ ஒரு விஷயத்தில் ‘தனித் திறமை’ பெற்றவர்களாகத்தான் இருப்போம். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. நமது வெற்றி, எதில் அடங்கியிருக்கிறது என்றால், அந்தத் திறமையை (talent) அடையாளம் கண்டு, அதை இடைவிடாத பயிற்சி மூலம், ‘திறன்’ (skill) ஆக மாற்ற வேண்டும். ஒருவருக்கு இசைப்புலமை இருக்கலாம்; மற்றொருவருக்கு கணிதத்தில் நல்ல திறமை இருக்கலாம்; வேறு ஒருவருக்கு அதீத கற்பனைத் திறமை இருக்கலாம். அந்த அந்த திறமையை வெளிக் கொணர்ந்து, திறன் ஆக மாற்றி, வாழ்க்கையில் முன்னேற முடியும்.
நமது பிள்ளைகளிடம் ஏதாவது வித்தியாசமான திறமை இருந்தால், அதை ஊக்குவிக்க வேண்டியது, பெற்றோர்களாகிய நமது பொறுப்பு. இப்போது, எந்தத் திறனுக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆகவே, எந்தத் திறமையையும் ஏளனமாக நினைக்காமல், அதை மேலும் மெருகேற்றி, வாழ்வில் முன்னேறச் செய்வோம்.
அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ‘தாமஸ் ஆல்வா எடிசன்’ கூறியதாக நாம் அறிவது: திறமை (talent) 1%, கடின உழைப்பால் மாறும் திறன் (skill) 99%. (Genius is 1% inspiration and 99% perspiration).
Comments
Post a Comment