எல்லாவற்றிற்கும் ஆசைப்படு.....; எதற்கும் ஆசைப்படாதே.....! எது சரி??

எல்லாவற்றிற்கும் ஆசைப்படு. அப்பொழுதுதான், வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் எல்லா சௌகரியங்களையும் பெற முடியும். அப்படி ஆசைப்படும் போதுதான், நாம் அதற்காக தீவிரமாக உழைப்போம்; வேண்டிய பணம் சம்பாதிப்போம். அதைக் கொண்டு எல்லா வசதிகளுடனும் வாழ முடியும். பணம் இருப்பவனைத்தான் உலகம் அறிவாளியாகக் கூட நினைக்கும்; அவனை மதித்து நடக்கும். அவன் செய்வதே சரியென்று கூட சொல்லும்! பணத்தினால் வாங்க முடியாதது என்ன....; சரி, சில விஷயங்களைத் தவிர (தூக்கம், அன்பு, பாசம்....)! அதனால் பரவாயில்லை. பணம் இல்லாமல் இருந்தால், நமது குடும்பத்தாரே நம்மை மதிக்க மாட்டார்கள். “நாம் ஏழையாகப் பிறக்கலாம், தப்பில்லை; ஆனால் ஏழையாக இறந்தால், அது நமது தவறே’ - இப்படிக் கூறுபவர், உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான ‘பில் கேட்ஸ்’.

இது ஒரு சித்தாந்தம். மற்றொரு சித்தாந்தம் இருக்கிறது. வாழ்க்கையில் தேவையானவற்றிற்கு மட்டுமே பணம் சம்பாதித்து, நிம்மதியாக வாழ்க்கையை நடத்து. தேவைக்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டு, அதற்காக உழைத்து (சில நேரங்களில் தவறான வழிகளில் கூட), தேவைக்கு மேல் பணம் சம்பாதித்து, மன நிம்மதியை இழந்து தவிக்க நேரிடலாம். ’போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பது பழமொழி. ’நமக்குத் தேவையான அளவு பணம் இருந்தால், அது நம்மைக் காப்பாற்றும்; தேவைக்கு அதிகமாக இருந்தால், நாம் அதைக் காப்பாற்றக் கஷ்டப்பட வேண்டும்’ - இது ஒரு சினிமாப் பாட்டின் கருத்து.

இரண்டுமே நேரெதிரான சித்தாந்தங்கள். இதில் எது சரி? நாம் நன்றாக ஊன்றிக் கவனித்தால், ஒரு உண்மை புலப்படும். தேவைகளுக்கு வேண்டியதை விட அதிகமாக பணம் இருந்தால், அதனால், மேலும் பல வசதிகளையும் சௌகரியங்களையும் பெறலாம். இந்த வசதிகளும், சௌகரியங்களும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமா என்றால்...., அது கேள்விக்குறிதான். பணத்திற்கும், வசதியான வாழ்க்கைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய திறமை கிடையாது. அது நமது மனத் திருப்தியால் மட்டுமே வரக்கூடியது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதி தெருவில் நடந்து வருகிறார்கள். அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்தால், உலகில் அவர்களைப் போல சந்தோஷ வாழ்க்கை வாழுபவர்கள் யாருமே இல்லை என்று நினைக்கத் தோன்றும். பணமும் கிடையாது, உடல் ஆரோக்கியமும் கிடையாது; இருந்தும் அவர்கள் இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். 

வாழ்க்கையின் குறிக்கோளே சந்தோஷமாக வாழ்வதுதான். அதற்காக வேண்டிய அளவு, நேர்மையான முறையில் உழைத்து, சந்தோஷமாக வாழ்வோம். தேவைக்கு மேல் அதிக பணம் சம்பாதிக்க முடிந்தால் (நேர்மையான முறையில் மட்டுமே), அதை, தேவைப்படுபவர்களுக்கு உதவுவது மூலம், மனத்திருப்தி அடைந்து சந்தோஷமாக வாழ்வோம். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடைக்காது.....

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?