உங்களுக்கு ‘பதிவர்’ (blogger) ஆக விருப்பமா....?
வாரம் ஒரு முறை எனது பதிவுகள் (blogs) வெளி வந்த போதிலும், முதலில், நான் ஒரு பெரிய blogger இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேனன். இருப்பினும், எனது நான்கு வருட அனுபவத்திலிருந்து, எனது சிற்றறிவுக்கு எட்டியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம் எல்லோருக்குமே அவ்வப்போது சில யோசனைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அவற்றை நம்முடன் மட்டுமே வைத்துக் கொள்ளாமல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, நமக்கு ஒரு திருப்தி ஏற்படும். நமது யோசனை சிலருக்கு பயன்படலாம்; இல்லை சந்தோஷத்தைக் கொடுக்கலாம். உங்களுக்குள் இருக்கும் தயக்கத்தை முதலில் வெல்ல வேண்டும். அலை ஓய்ந்த பின் கடலில் குளிக்கலாம் என்றால், என்றுமே கடலில் குளிக்க முடியாது.
பதிவிற்கான (blog) யோசனை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். செய்தித்தாள் படிக்கிறீர்கள். யாரோ சிலர் பண விஷயத்திலோ (சீட்டுக் கம்பெனி ஏமாற்றுதல்), மண விஷயத்திலோ (வேறு ஒருவருடன் தொடர்பு) ஏமாற்றப்பட்டிருக்கலாம். இது சம்பந்தமாக உங்கள் எண்ணம் என்ன என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றங்கள் அவ்வப்போது சில பொதுவான தீர்ப்புகளை வழங்குகிறார்கள். உங்களுக்கு அவை வித்தியாசமாகத் தெரிகிறது. அவற்றைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன? நாம் வெளியில் செல்லும் போது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்கு சில யோசனைகள் தோன்றலாம்.
இம்மாதிரி விஷயங்களை குறிப்பு எடுத்துக் கொண்டால், பிறகு நீங்கள் free-யாக இருக்கும் போது, அந்த விஷயங்களைப் பற்றி மேலும் சிந்தித்து, உங்களுக்குள் தோன்றும் என்ண ஓட்டத்தைப் பதிவு செய்யுங்கள். சில நாட்கள் அதை அப்படியே ஆறப் போடுங்கள். மறுபடியும் நேரம் கிடைக்கும் போது எடுத்து வாசித்துப் பாருங்கள். மேலும் சில எண்ணங்கள் தோன்றலாம். சிலவற்றை நீக்கத் தோன்றலாம். இப்படியே அதை ஒரு உருவத்திற்கு (shape) கொண்டு வாருங்கள்.
பதிவு பண்ணலாம் என்று தோன்றும் போது, மீண்டும் ஒரு முறை உன்னிப்பாக வாசியுங்கள். சின்னச் சின்ன தவறுகள் இருக்கலாம்; அதைச் சரி செய்யுங்கள். எழுத்துப் பிழை, வார்த்தைப் பிழை, இலக்கணப் பிழை இருந்தால், சரி செய்யுங்கள். உங்களுக்கு முழுத்திருப்தி வந்தவுடன், பதிவேற்றம் செய்யுங்கள். Blogspot, Wordpress போன்ற தளங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்குப் பரிச்சயமான subjects பற்றியும் எழுதலாம். அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமானால் மிகவும் நல்லது. நீங்கள் வியாபார ரீதியில் செய்ய நினைத்தால், அதற்கென்று உள்ள web sites-களைப் பாருங்கள். நான் செய்வது வெறும் பொழுது போக்குக்கு மட்டுமே. எனவே நான் எத்தனை பேர் வாசித்தார்கள் என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. நமது என்ணத்திற்கு மாறுபட்ட எண்ணம் வாசித்தவர்களிடமிருந்து வந்தால், அதை வரவேற்க வேண்டும். ஏனெனில் ஒர் நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு.
Happy blogging.....
Comments
Post a Comment