பழி வாங்கும் படலம்.... ஒரு தொடர்கதை....

யாரோ ஒருவர் இன்னொருவருக்குத் தீங்கு இழைத்து விட்டால், தீங்கு இழைக்கப்பட்டவரின் முதல் எதிர்வினை, தீங்கு இழைத்தவரைப் பழி வாங்குவதுதான். உடனே அதற்கான முயற்சியில் இறங்கி விடுவார். இது சரியா? சரியோ, தவறோ, இது நம்மில் பலருக்கும் இருக்கும் உணர்வு.

நமது இதிகாசங்களை எடுத்துக் கொண்டால், இது எளிதில் விளங்கும். கங்கையின் புத்திரரான ‘பீஷ்மர்’, தனது சகோதரனாகிய விசித்திரவீரியனுக்கு மணமுடிக்கும் பொருட்டு, காசி தேசத்து மன்னனின் புதல்விகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவரையும் சுயம்வரத்தில் ஏற்பட்ட போரில் வென்று, அழைத்து வருகிறார். அம்பை ஏற்கனவே வேறு ஒரு மன்னனை நேசித்து வந்ததால், அவளைத் திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால், அந்த மன்னன், பீஷ்மரால் வெல்லப்பட்ட அவளை ஏற்க மறுக்கிறான். பின் மீண்டும் பீஷ்மரிடம் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறாள். தனது பிரம்மச்சரிய விரதத்தை மீற மறுக்கிறார், பீஷ்மர். எல்லோராலும் கைவிடப்பட்ட அம்பை, பீஷ்மரைப் பழிவாங்கும் பொருட்டு தவமிருந்து, மறுபிறவியில், சிகண்டினி என்ற பெண்ணாகப் பிறக்கிறாள். பின் ஆணாக மாறி, ‘சிகண்டி’ என்ற பெயரோடு, பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாகிறாள்.

துரோணாச்சாரியார், தனது பால்ய நண்பனான துருபதன், அவரை இழிவுபடுத்தியதால், துருபதனை, அர்ஜுனன் மூலம் வென்று, துருபதனைப் பழி வாங்குகிறார். அதற்குப் பழி வாங்கும் பொருட்டு, துருபதன், துரோணரைக் கொல்வதற்கென்றே தவமிருந்து ‘திருஷ்டத்யும்னன்’ என்ற மகனைப் பெற்றான். போரில் துரோணரைக் கொன்ற திருஷ்டத்யும்னனைப் பழி வாங்க துரோணரின் மகனான அஸ்வத்தாமா, சூழுரைக்கிறான். இது இப்படியே தொடர்கிறது.

இது ஒரு இயற்கையான போக்கு (natural tendency) என்றாலும், இப்படி முடிவே இல்லாமல், சங்கிலித் தொடர் போன்று போய்க் கொண்டே இருந்தால், நாட்டில் பேரழிவுதான் நேரும். இந்த சங்கிலித் தொடரை உடைப்பதற்கு, இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட ஒரு விவேகமான மனிதனால்தான் முடியும். பழி வாங்குவது என்பது யாருக்குமே பயன்படாது. இதை நன்றாகப் புரிந்து கொண்ட விவேகியாலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

நம் எல்லோருடைய வாழ்விலும் சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதற்கு பழி வாங்கப் புறப்படாமல், தெய்வத்திடம் சரணடைந்து விட்டால், நாம் நிம்மதியாக நமது கடமையைச் செவ்வனே செய்து கொண்டு வாழலாம். அவரவர் கர்மாவின் படி அவரவர்க்கு நேர வேண்டியதை கடவுள் பார்த்துக் கொள்வார். எனவே பழி வாங்கும் எண்ணம் நமது மனதில் தோன்றாமல் இருக்க கடவுளை வேண்டிக் கொள்வோம்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?