பழக்க வழக்கங்கள் மாறுமா..., மாறாதா...?

Habits die hard - இது ஆங்கிலத்தில் உள்ள பழமொழி. ’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ - இது நம் தாய்மொழியில் உள்ள பழமொழி. அதாவது நமது பழக்க வழக்கங்கள் மாறாதவை (அநேகமாக). எல்லாப் பழமொழிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருப்பது போல, இந்தப் பழமொழிக்கும் விதிவிலக்கு நிச்சயம் உண்டு. பொதுவான பழக்க வழக்கங்கள் யாவை?

1) நகத்தைக் கடிப்பது / பேனாவைக் கடிப்பது (நாம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றும்)

2) புகை பிடித்தல் (பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரிப் பருவத்திலோ நம்மிடம் ஒட்டிக் கொள்வது)

3) அடிக்கடி கைபேசியைக் கையாளுவது (அநேகமாக நாம் எல்லோருமே இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம்)

4) நேரத்திற்கு சாப்பிடுவது (இது மிகவும் நல்ல பழக்கம்)

5) சினிமா பார்ப்பது (இளம் பருவத்தினரின் முக்கியமான ஒரு பழக்கம்)

6) தள்ளிப் போடுதல் (இந்தப் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது)

7) கிசுகிசுத்தல் (புறம் கூறுதல்) (யாருக்கும் பயனில்லாத மோசமான பழக்கம்)

8) வாக்குவாதம் செய்வது (இந்தியர்கள் வாக்குவாதம் செய்வதில் முன்னணி வகிக்கிறார்கள் என்று பொருளாதார நிபுணர் அமர்த்யா சென் கூறுகிறார்)

9) உடற்பயிற்சி செய்வது (மிக மிக நல்ல பழக்கம் - ஆனால், நிறையப் பேர் இதன் பலனை அறிவதில்லை)

10) தனி மனித சுகாதாரம் சம்பந்தப்பட்ட பழக்கங்கள் (personal hygiene) - Corona virus தீவிரமாக இருந்த சமயத்தில் எல்லோரும் சில நல்ல பழக்கங்களைக் கற்றோம் (வெளியே சென்று வந்தவுடன், கை கால் கழுவுவது போன்றவை). ஆனால், இப்போது நிறையப் பேர் அதை மறந்து விட்டோம். ‘வைரஸ்’ நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தப் பழக்கங்கள் மிகவும் நல்லவை.

இப்படி எத்தனையோ பழக்க வழக்கங்கள் - இதில் சில பழக்கங்களாவது எல்லோரிடமும் இருக்கும். இதற்கு யாருமே விதிவிலக்கல்ல.

’நேரத்திற்கு சாப்பிடுவது’, ‘தினசரி உடற்பயிற்சி செய்வது’, ‘படுக்கைக்கு சீக்கிரம் சென்று, சீக்கிரம் விழித்தெழுவது’ போன்ற பழக்க வழக்கங்கள் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. ஆனால், நம்மில் பலர், இவற்றை தொடர்ச்சியாக செய்வதில்லை. ஒரு காலகட்டத்தில், ‘சலிப்பு’ காரணமாக இவற்றை விட்டு விடுகிறோம். இதை விடுவதால் நமக்கு இழப்புதான் அதிகம். எனவே கூடிய வரையில், இவற்றைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது.

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பழக்கம் (நல்ல பழக்கமா, கெட்ட பழக்கமா தெரியவில்லை), அடிக்கடி சினிமா பார்ப்பது. ஆனால், இந்தப் பழக்கமும் ஒரு காலத்திற்குப் பின் மாறக் கூடியது தான். நான் கல்லூரி நாட்களில், எனது கல்லூரி நண்பர்கள் எல்லோரும் (தேர்வுக்கு) படித்துக் கொண்டிருந்தாலும், எனக்குப் பிடித்த இயக்குநர் படம் வந்தால் ஓடிப் போய் பார்த்து விடுவேன். அப்படி ஒரு பைத்தியம். ஆனால், இன்று (வயது காரணமா என்று தெரியவில்லை) சினிமா பார்ப்பதையே விரும்புவதில்லை.

அது போல, புத்தகம் வாசிப்பது மிகவும் நல்ல பழக்கம். இப்போது நம்மில் பலர் ’திறன்பேசி’ (smart phone) வந்த பிறகு, வாசிக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கிறோம். கூடிய வரையில் புத்தகம் வாசிப்பதை நிறுத்தாமல் இருக்க வேண்டும். மிகவும் அவசரமாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மறு நாளுக்கு தள்ளி வைக்கச் சொன்னாராம், நமது முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை. ஏனென்று மருத்துவர் கேட்டதற்கு, ”நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன், அதை மறு நாள் படித்து முடித்து விடுவேன்; அதன் பிறகு சிகிச்சை செய்யலாம்” என்றாராம்.

பல வருடப் பழக்கமான புகை பிடித்தலை எத்தனையோ நண்பர்கள் ஒரு சமயத்திற்குப் பிறகு விட்டு விடுகிறார்கள். சிலரால், எவ்வளவு முயன்றாலும் அந்தப் பழக்கத்தை விட முடிவதில்லை.

எனவே, பழக்க வழக்கங்கள் மாற முடியாதவை அல்ல. நல்ல பழக்கங்களை எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். கெட்ட பழக்கங்களை எப்பாடு பட்டாவது விட்டு விட முய்ற்சி செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?