தவிர்க்க முடியாத..., தவிர்க்கக் கூடாத பொறுப்பு...!
முதலில் ஒரு ’ஜோக்’ - பெற்றோரின் ‘பதில் சொல்லும் தொலைபேசி’ யில் (answering machine) நீங்கள் கூப்பிடுகிறீர்கள். ”வணக்கம். நாங்கள் இப்போது வீட்டில் இல்லை. ‘பீப்’ சப்தம் கேட்டதும், இதைச் செய்யுங்கள்.
- கூப்பிடுவது எங்கள் பிள்ளைகளில் ஒருவராக இருந்தால், எண் 1 ஐ அழுத்தவும். வேறு யாராவது கூப்பிட்டால், பிறகு முயற்சிக்கவும்.
- நாங்கள் உங்கள் குழந்தைக்கு காவல் இருக்கக் கூப்பிட்டால், எண் 2 ஐ அழுத்தவும்.
- எங்களது கார் உங்களுக்கு சிறிது நேரம் தேவையென்றால், எண் 3 ஐ அழுத்தவும்.
- உங்களது துணிகளை துவைத்து, இஸ்திரி போட்டு வைக்கவென்றால், எண் 4 ஐ அழுத்தவும்.
- எங்கள் பேரக் குழந்தைகள் இன்று இரவு எங்களுடன் தங்க வேண்டுமென்றால், எண் 5 ஐ அழுத்தவும்.
- எங்கள் பேரக்குழந்தைகளை பள்ளியிலிருந்து கூப்பிட்டு வர வேண்டுமெனில், எண் 6 ஐ அழுத்தவும்.
- இந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுடன் உணவு கொள்ள விரும்பினால், எண் 7 ஐ அழுத்தவும்.
- உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், எண் 8 ஐ அழுத்தவும்.
- எங்களை இன்று இரவு விருந்திற்கு அழைக்க நினைத்தால், பேச ஆரம்பியுங்கள்; நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்”.
இது ஒரு ‘தமாஷ்’ தான். (சில நாட்களுக்கு முன் whatsapp-ல் பார்த்தது). இருப்பினும், இன்றைய சூழ்நிலையில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன. இது முழுக்க முழுக்க பிள்ளைகளின் தவறு தானா?
ஒரு மகனின் பார்வையிலிருந்து சிந்தித்துப் பார்ப்போம். அலுவலக வேலையையும், வீட்டுப் பொறுப்பையும் சமாளிக்கும் நிலையில் தான் இன்று ஒவ்வொரு இளைஞனும் இருக்கிறான். அலுவலகத்தை எடுத்துக் கொண்டால், வேலையை முடிப்பதற்கான ’காலக்கெடு’ (deadline), மன அழுத்தத்தைத் தரக் கூடிய வேலைப்பளு, சக ஊழியர்களுடனான தொழில்முறைப் போட்டி, நேரங்கெட்ட நேரத்தில் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம், அலுவலகத்திற்கு அருகில் கிடைக்கும் குப்பை உணவை (junk food) சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம், நகரத்தின் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு தவிப்பது.... இத்யாதி. இதை ஒருவழியாக முடித்து வீடு வந்து சேர்ந்தால், மனைவி சொல்லி அனுப்பியதை வாங்கி வர மறந்தது, வீட்டுப் பிரச்னைகளை ஒவ்வொன்றாக மனைவி சொல்ல ஆரம்பிப்பது, குழந்தையின் ‘லூட்டி’, குழந்தையைப் பற்றியும், மனைவியைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்வது, வீட்டு வேலையில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல், வீட்டிலும் அலுவலக வேலை செய்வது...., இந்தக் களைப்பில் மனைவியிடம் அன்பாக ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலை.... இந்த சூழ்நிலையில் இருக்கும் கணவன் (அதாவது உங்கள் பிள்ளை), என்ன மனநிலையில் இருப்பான்? அப்பப்பா...... இதற்கு என்ன தான் தீர்வு...? கூடுதலாக, வீடு, கார் வாங்கியதற்கான EMI பிரச்னை வேறு...!
சரி, இப்போது பெற்றோரின் தரப்பிலிருந்து சிந்திப்போம். நமது பெற்றோரின் அயராத உழைப்பும், கவனிப்பும் தான் நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இதற்கு உரிய மரியாதையையும், செய்ய வேண்டிய கடமையையும், ஒரு மகனாக செய்ய வேண்டாமா? அவர்களுக்கென்று வயதான காலத்தில் யார் இருக்கிறார்கள்? அவர்களது கண்ணுக்குத் தெரியாத பல தியாகங்களினால் தான் நாம் இன்று வசதியான வாழ்க்கை வாழ்கிறோம். நமது சௌகரியமான வாழ்க்கைக்குப் பின்னால், அவர்களது வியர்வை இருக்கிறது. எனவே, அவர்களை ‘ஆதரவற்றோர் இல்லத்தில்’ சேர்த்து விட வேண்டாம். உங்களது எல்லா சிரமங்களுக்கும் நடுவில், அவர்களைக் கவனித்துக் கொள்வதும், உங்களது தலையாய கடமை என்பதை மறக்க வேண்டாம். நாளை உங்கள் பிள்ளைகள், உங்களது செயலிலிருந்தே பாடம் கற்பார்கள்.
என்னைப் பொறுத்த வரையில், முதியோரான பெற்றோர், அவர்களால் முடிந்த வரை பிள்ளைகளைச் சார்ந்திராமல் (பண ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்) இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். எல்லா செலவுகளுக்கும் நடுவில், நமது வயதான காலத்திற்குத் தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கூடியவரையில் உடல் நலத்தில் கவனம் செலுத்தி, நம்மை நாமே கவனித்துக் கொள்ளும் வகையில் fit (உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்) ஆக இருக்க ஆவன செய்ய வேண்டும். மனத்தளவில், நம்மை நாமே பார்த்துக் கொள்ளக் கூடிய பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கூடிய வரையில் நம் பிள்ளைகளுக்கு தொந்தரவு தரக் கூடாது என்ற மனம் இருந்தால் போதும்.
முடியாத பட்சத்தில், (மேலே கூறிய காரணங்களில் ஏதோ ஒரு காரணத்தினால்), பிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உண்டு. வயதான காலத்தில், அவர்கள் உங்களுக்கு மற்றுமொரு குழந்தை போலத்தான் என்பதை மறக்க வேண்டாம். ‘சரித்திரம் திரும்பும்’ என்பதை மறக்காமல், செயல் பட வேண்டும். தயவுசெய்து வயதான பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட நினக்க வேண்டாம்.
Comments
Post a Comment