'பொறுமை’ என்பது அவசியமா...? இல்லையா...?
”பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது பழமொழி. "உலகத்தின் இரண்டு மிகப் பெரிய போராளிகள் (warriors), பொறுமையும் (patience), காலமும் (time)” என்கிறார் ‘லியோ டால்ஸ்டாய்’. அதாவது எதையுமே சாதிப்பதற்கு, பொறுமையும் (patience), காலமும் (time), மிக அவசியமாக தேவை. பொறுமை என்பது உண்மையிலேயே அறம் சார்ந்த விஷயமா; இல்லை, நாம் சாதிக்க முடியாத நிலைமைக்கு நாம் சொல்லிக் கொள்ளும் சமாதானமா...?
நாம் விரும்பும் எதையும் சாதிப்பதற்கோ, அடைவதற்கோ, உரிய கால அவகாசம் தேவை. இதை ‘கர்ப்ப காலம்’, அதாவது ‘gestation period' என்று அழைக்கிறோம். மனிதர்களுக்கு, கரு தரித்தலிலிருந்து, குழந்தை, அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வருவதற்கு சுமார் 280 நாட்கள் தேவைப்படுகிறது. இதே, ஒரு யானைக்கு சுமார் 18-லிருந்து 22 மாதங்கள் வரை. இப்படி ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு கால அளவு உள்ளது. நாம் நினைத்தவுடனேயே இது நடக்க வேண்டும் என்று விரும்பலாமா? அது இயற்கைக்கு மாறானது.
அது போல, ஒரு மூங்கில் மரம் முளை விடுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் பிடிக்குமாம். பின்னர் 6 மாதத்தில் சுமார் 80 அடி உயரத்திற்கு வளருமாம். முதல் ஐந்து வருடங்களுக்குள் முளைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும், அது நடக்காது. ஆனால், ஒரு ‘காளான்’ மழை பெய்தவுடனேயே முளைத்து விடுகிறது. இப்படி ஒவ்வொரு தாவரத்திற்கும் இயற்கை ஒரு காலக்கெடுவை நிர்ணயித்திருக்கிறது.
சில நேரங்களில், விமானப் பயணம் செய்பவர்கள், விமான தாமதத்தை (flight delay) சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். அதற்காக, ஏமாற்றமடையவோ, வருத்தமடையவோ கூடாது. அதில் பிரயோஜனமில்லை. அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்ளும் பல பெரிய மனிதர்கள், இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதேயில்லை. மாறாக, வியாபார வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்; இல்லையேல் படிக்க நினைத்திருந்த புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பார்கள். அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக புலம்புவதில் அர்த்தமேயில்லை; அதனால் நடக்கப் போவதும் ஒன்றும் இல்லை.
‘பொறுமையின்மை’ பற்றி ஒரு ‘ஜோக்’ சொல்லப்படுவதுண்டு. ஒரு கணவன் மனைவிக்கிடையில் (வழக்கம் போல) சண்டை வந்து ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து, ’பொறுமை’ இழந்த மனைவி, கணவனை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, ‘நான் இப்போது 1, 2, என்று 10 வரை எண்ணுவேன். நான் 10 என்று சொல்வதற்குள் நீங்கள் பேசவில்லையென்றால், நான் என் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவேன்’ என்று மிரட்டினார். ‘ஆஹா, இது நமக்கு சாதகமாக இருக்கிறதே’ என்று நினைத்த கணவன், வாயே திறக்கக் கூடாது என்ற முடிவோடு காத்திருக்கிறான். மனைவி, ‘1..., 2...., 3......, இப்படியே 9 வரை எண்ணி விட்டார். மனைவி 10 சொல்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறான் கணவன். நேரம் போய்க் கொண்டே இருக்கிறது..... மனைவி 10 என்று சொல்லவேயில்லை. பொறுமை இழந்த கணவன், ‘உம், அடுத்த எண்ணைச் சொல்லு..., சீக்கிரம்...’ என்று கூறுகிறான். மனைவி, ‘அப்பாடா, நான் 10 எண்ணுவதற்குள் நீங்கள் பேசி விட்டீர்கள்’ என்று கூறி சமாதானம் ஆகி விட்டார். ஆவலுடன் காத்திருந்த கணவன் ஏமாற்றமடைந்தான் என்று சொல்லத் தேவையில்லை.
ஒரு படைப்பாளியை (சிற்பி, ஓவியர், எழுத்தாளர், கவிஞர்) எடுத்துக் கொள்வோம். அவர்களது படைப்பை சிறந்த முறையில் படைப்பதற்கு, பொறுமையாக சிந்தித்து, திட்டம் தீட்டி, அதை சிறந்த முறையில் செவ்வனே செய்தால் தான் சிறப்பாக இருக்கும். இதில் அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது. அது மாதிரி ஒரு பெரிய விளையாட்டு வீரராக உருவாவதற்கு பல ஆண்டுகள் பொறுமையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; அவரது திறமை மட்டும் போதாது.
மேலே கூறியவை ‘காலத்தால்’ பொறுமை காப்பது. மற்றொன்று, தம்மை இகழ்வாரைப் பொறுத்தல். திருவள்ளுவர் ‘பொறையுடைமை’ என்ற அதிகாரத்தில் பொறுமை காப்பதின் பெருமையைப் பற்றி மிக விரிவாகக் கூறுகிறார். ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை’ - தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும் - மு. வரதராசனார்.
Comments
Post a Comment