விஞ்ஞான முன்னேற்றம், சாதகமா...., பாதகமா....?

சமீபத்தில் எனது whatsapp தளத்தில் ஒரு பதிவு வந்தது. அந்தப் பதிவின் வரிகளை ’சாய்ந்த எழுத்துக்களில்’ கொடுத்திருக்கிறேன்; அதற்கான எனது கருத்துக்களை சாதாரண எழுத்துக்களில் கொடுத்திருக்கிறேன்.

’எனது வீட்டிற்குள் ’தொலைக்காட்சிப் பெட்டி’ வந்த பின், வாசிப்பதை மறந்து போனேன்’ - நமக்கு TV தேவையில்லையா? தொலைக்காட்சி பொதுவாக நமது பொழுது போக்கிற்காக உபயோகப்படுகிறது. ஆனால், வாசிப்பது (புத்தகம், வாரப்பத்திரிகை) என்பது பொதுவாக தகவல் அறிந்து கொள்வதற்கு பயன்படுகிறது. எனவே, TV வந்த பின் வாசிப்பதை நிறுத்தினேன் என்று சொல்வது சரியல்ல....

’வாகனம் (இரு சக்கரம், மற்றும் நான்கு சக்கரம்) வாங்கிய பின், நடப்பதை மறந்தேன்’ - நடப்பதில் உள்ள நன்மைகளை நாம் எல்லோரும் அறிவோம். Motorcycle அல்லது car நாம் நடந்து செல்ல முடியாத தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கான, உபயோகமான வாகனம். அருகில் உள்ள இடங்களுக்கு (காய்கறி கடை, கோவில்) நடந்து செல்லும் பழக்கத்தை விட்டு விடக் கூடாது. ஆகவே இந்தக் கூற்றும் தவறுதான்.

’நான் கைபேசி (Mobile phone) வாங்கிய பின், கடிதம் எழுதுவதை மறந்தேன்’ - இதில் தவறொன்றும் இல்லை. சொல்ல வேண்டிய விஷயத்தை உடனுக்குடன் சொல்ல முடிகிறதே; அது நன்மைதானே! ஆனால், இன்னும், கடிதம் எழுத வேண்டிய நபருக்கு (அலுவலக சம்பந்தமாக), கடிதம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம். தனிப்பட்ட சொந்தங்களுக்கு கடிதம் எழுதுவது நின்றிருக்கலாம். இன்னும் சில மகள்கள் தங்கள் அப்பா எழுதிய கடிதத்தை பொக்கிஷமாகப் போற்றிக் காத்து வருகிறார்கள்.

’கணினி வாங்கிய பின், வார்த்தைகளுக்கான எழுத்தாக்கம் (spelling) மறந்து போனேன்’ - மிகவும் உண்மை. வார்த்தைகளுக்கான spelling ஞாபகம் வைத்திருப்பது, மூளையின் திறனை மேம்படுத்தும். ஆனால், எல்லா வார்த்தைகளுக்குமான spelling விரல் நுனியில் இருக்கும் போது, அதை ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது மூளையை வேறு பயனுள்ள வழிகளில் உபயோகித்துக் கொள்ளலாமே....!

’வீட்டில் குளிரூட்டி (air conditioner) வாங்கிய பின், வெளியே சென்று மரத்து நிழலில் காற்று வாங்குவதை நிறுத்தினேன்’ - இந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் மரத்து நிழலில் காற்று வாங்கி பல வருடங்கள் ஆகி விட்டன. எப்போது நாம் எல்லோரும் கிராமத்தை விட்டு நகரம் நோக்கி வந்தோமோ, அப்போதே அதையெல்லாம் மறந்து விட்டோம். இன்னும் கிராமங்களில் உள்ள மக்கள் மரத்து நிழலில் இளைப்பறுகிறார்கள். அவர்களுக்கு air conditioner தேவையில்லை.

’நான் நகரத்தில் வசிக்க ஆரம்பித்த போது, மண்ணின் மணத்தை மறந்தேன்’ - இதெல்லாம் என்றோ நடந்த விஷயம். நாம் மண்ணின் மணத்தை மட்டுமல்ல, இயற்கையை ரசிக்க மறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. பறவைகளின் ராகத்தையும், மழைச்சாரலின் ஓசையையும், மாலை நேர மந்தகாச ஒளியையும் ரசித்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டன...!

’வங்கிச் சேவையையும், கடன் அட்டை, மற்றும் பற்று அட்டையையும் (credit card & debit card) பயன்படுத்த ஆரம்பித்த பின், பணத்தின் மதிப்பை மறந்தோம்’ - நேர்மையாக பணம் சம்பாதித்தவர்கள் யாரும் இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். பணத்தின் மதிப்பு தெரிந்து அதை வீட்டிலேயே வைத்துக் கொண்டால், அது சரியா? வங்கியும் மேற்கூறிய அட்டைகளும் நமது சௌகரியத்திற்கானவை. தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் போது, பணத்தை மடியில் கட்டிக் கொண்டு செல்ல வேண்டிய பயம் இல்லை, இப்போது.

’வாசனைத் திரவியங்கள் (perfume) வந்த பின், பூக்களின் மணத்தை மறந்தோம்’ - வாசனைத் திரவியங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லையே. அன்று மலரும் பூக்கள் தினமும் சந்தைக்கு வந்து கொண்டுதானே இருக்கின்றன. இது நமது தேர்வுதான் (choice).

’அவசர உணவு’ (fast food) வந்த பின், பாரம்பரிய சமையலை மறந்தோம்’ - கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பழக்கம் (fast food) நம்மிடையே பரவி வருகிறது என்பது உண்மை. தங்களது ஆரோக்யத்தின் மீது கவனம் உள்ள யாருமே பாரம்பரிய உணவை மறந்து விட்டார்கள் என்பது சரியல்ல. ஏதோ ஒரு நேரம் சுவைக்காக, fast food சாப்பிடுவதில் தவறு இல்லை. அதையே பழக்கமாக்கிக் கொண்டால் தான் தவறு.

’எப்போதுமே ஓடிக் கொண்டே இருப்பதால், எப்படி நிற்பது என்று தெரியாமல் போனது’ - வாழ்க்கையின் சரியான பொருளை அறிந்தவர்கள் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள். வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் தான், பொருட்கள் மீதுள்ள பற்றின் காரணமாக, அவற்றைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

’Whatsapp' வந்த பின், பேசுவதை மறந்தோம்’ - உண்மை. வீட்டிற்குள் இருக்கும் கணவன், மனைவி, குழந்தைகள் கூட, whatsapp-ல் செய்தி பரிமாறிக் கொள்கிறோம். வெளியே உள்ள நண்பருக்கு சிறிய செய்தி சொல்ல, அவரைக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யாமல், whatsapp-ல் செய்தி சொல்லுவதில் தவறில்லை. ஆனால், அதையே பழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது. அவ்வப்போது, பேசவும் வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், விஞ்ஞான முன்னேற்றங்களை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து அவற்றிற்கு நாம் அடிமையாகி விடக் கூடாது. விஞ்ஞான முன்னேற்றங்களில் தவறில்லை; நாம் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தில் தான் தவறு செய்கிறோம். இதைப் புரிந்து, நம்மை நாமே மாற்றிக் கொள்வோமாக...

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?