இக்கரைக்கு அக்கரை பச்சை....!

இது ஒரு லத்தீன் பழமொழியிலிருந்து வந்தது என்று Google கூறுகிறது. அந்த லத்தீன் பழமொழியின் ஆங்கில வடிவம் - The corn in another man's ground seems ever more fertile and plentiful than our own does. இதை நாம் நேரிலேயே உணரலாம். ஒரு பசுமையான வயலில் நின்று கொண்டு, தூரத்திலிருக்கும் மற்றொரு பசுமையான வயலைப் பார்த்தால் இது நன்றாகவே புரியும். நம்மில் நிறையப் பேர் இதை நேரில் உணர்ந்திருக்கலாம். நாம் அக்கரைக்குச் சென்று இந்த கரையை (நாம் முதலில் நின்று கொண்டிருந்த இடம்) பார்த்தால், அது அதீத பச்சையாகத் தெரியும்.

இந்தப் பழமொழியின் உண்மையான அர்த்தம் - நம்மை விட, நமக்குத் தெரிந்த மற்றவர்கள், வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக நமக்குத் தோன்றும். அருகில் சென்று அவர்கள் வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால் தான் தெரியும், அவர்களுக்கு உள்ள வேதனை, கஷ்ட நஷ்டங்கள். நாம் எப்போதும் கூறும் ஒரு வசனம், ‘அவனுக்கென்னப்பா, கொடுத்து வைத்தவன், அதிர்ஷ்டக்காரன்’. இது எவ்வளவு தவறு என்று நாம் உணர்வதேயில்லை.

நம்மிடம் உள்ள வசதி வாய்ப்புக்களைப் பற்றி நாம் நினைப்பதில்லை. நமக்கு என்ன இல்லையோ (அது மற்றவரிடம் இருக்கும் பட்சத்தில்), அதை நினைத்து வருந்துவதும், ஏங்குவதும் நமக்கு வாடிக்கை. நன்றாக ஆராய்ந்து பார்த்தால், நமக்கு இருக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நாம் compare செய்யும் அந்த நபரிடத்தில் இல்லாமல் இருக்கும். Comparison is the thief of joy - Theodore Roosevelt. 

ஒரு வயலில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பான்! அவனுக்கு மேலே ஆகாயத்தில் ஒரு விமானம் பறந்து செல்வதைப் பார்த்தால், அவனுக்கு உடனே என்ன தோன்றும், ‘அடடா, நாம் இப்படி பறக்க முடியவில்லையே’ என்று. விமானத்தை ஓட்டிச் செல்பவர் நினைப்பார், ‘நாம் எப்போது கீழே இறங்கி, ஓய்வு எடுக்க முடியும்’ என்று. இதுதான் யதார்த்தம்! சிறுவனின் சூழ்நிலை வேறு; அந்த விமானியின் சூழ்நிலை வேறு. இரண்டையும் ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஒரு யோகியிடம் ஒரு மனிதன் சென்று, தனக்கு எதுவுமே நன்றாக நடக்கவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைப்பதாகவும் கூறுகிறான்.

யோகி : ‘உனக்கு பத்து லட்சம் ரூபாய் தருகிறேன்’

அந்த மனிதன் : ’உண்மையாகவா...?’

யோகி : ‘ஆனால், ஒரு நிபந்தனை. உன் கண்கள் இரண்டையும் எனக்குத் தந்து விட வேண்டும்’

அந்த மனிதன் : அது எப்படி முடியும்...?

யோகி : ‘சரி, ஏழு லட்சம் தருகிறேன். நிபந்தனை..., உனது இரண்டு கால்களையும் வெட்டி எனக்குக் கொடுத்து விட வேண்டும்’

அந்த மனிதன் : ‘இதுவும் முடியாதே....’

யோகி : ஏன்! உன்னிடம் உள்ள உறுப்புகள் நான் தர இருந்த பல லட்சங்களையும் விட அதிக மதுப்புள்ளவை என்றுதானே.... உன்னிடம் உள்ள மதிப்பு வாய்ந்த உறுப்புகளைக் கொண்டு மேலும் எவ்வளவோ உன்னால் சம்பாதிக்க முடியும், இல்லையா...? மற்றவர்களைக் கண்டு ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படாமல், உன்னிடம் உள்ளதை வைத்து, மேலும் விருத்தியடைந்து சந்தோஷமாக இருக்கக் கற்றுக் கொள்.

அந்த பழைய பழமொழியை மாற்றி இப்போது 'The grass is greener when you water it'  என்று மாற்றிக் கூறுகிறார்கள். அதாவது, உனது இடத்தில் உள்ள தாவரத்தை மேலும் பசுமையாக்க வேண்டுமானால், அதற்கு தண்ணீர் விட வேண்டும். எனவே மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு வருத்தப்படாமல், நம்மிடம் உள்ளவற்றை மேலும் வளமாக்கி சந்தோஷமாக இருக்கக் கற்றுக் கொள்வோம்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?