மகாபாரதம் சொல்லிக் கொடுத்த பாடம்..., மறந்து விட்டோமே...!

இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் திறமைசாலிகளாக விளங்குகிறார்கள். பல துறைகளிலும் நிறையவே சாதிக்கிறார்கள். ஆனாலும், சில இளைஞர்கள், வலைத்தள விளையாட்டுக்களுக்கு (சூதாட்டம்) அடிமையாகும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் வரும் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்து, வாழ்க்கையையே இழந்து விடும் சூழ்நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலை உருவாகாமல் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை. பெற்றோருக்கு ஒரு பிள்ளை மட்டுமே இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், பிள்ளைக்கு அதீத செல்லம் கொடுத்து வருவதும் இந்த நிலைமை உருவாக ஒரு காரணம். அதைத் தவிர்த்து பிள்ளையைக் கண்டிக்க வேண்டிய சமயத்தில் கண்டித்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.

வலைத்தளத்தில் இன்று நிறைய சூதாட்டம் சம்பந்தப்பட்ட விளையாட்டு மென்பொருள் இருக்கிறது. இவைகளைத் தடை செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும். இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கான விளம்பரங்களையும் தடை செய்ய வேண்டும். மேலும், பெற்றோரும் தங்களது பிள்ளைகள் இந்த மாதிரி games-ஐ அணுக முடியாத அளவுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். இதனால், சீரழிந்து வாழ்க்கையை இழந்த எத்தனையோ இளைஞர்களைப் பற்றி செய்தி பார்க்கும் போது மனம் பதறுகிறது. இந்த சூதாட்ட விளையாட்டுக்களால் பாதிக்கப்பட்டு, மனம் பேதலித்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கோண்டே வருகிறது. தங்களது ஒரே பிள்ளையையும் தொலைத்து நிற்கும் பெற்றோரின் கதி என்ன?

நமது புராணங்களும், இதிகாசங்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சூதாட்டத்தினால் விளையும் விளைவுகளை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றன. பாண்டவர்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் (தருமன்) சூதாடியதால் தான் திரௌபதி மானபங்கப்பட்டுத்தப்பட்டாள்; பாண்டவர்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது; பாரதப் போர் நிகழ்ந்தது. எப்பேர்ப்பட்ட அழிவு - எதனால் நிகழ்ந்தது? தருமன், பெரியோர்கள் சொல் கேட்டு சூதாடாமல் இருந்திருந்தால், இவ்வளவு கெட்ட நிகழ்வுகளும் நிகழாமல் இருந்திருக்குமே. இவைகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டாமா...?

பெற்றோர்கள் அனைவரும் நமது இதிகாசங்களைக் கற்றறிந்து பிள்ளைகளுக்கும், அவை சொல்லித் தரும் பாடங்களைப் புகட்ட வேண்டும். பள்ளிகள் தான் சொல்லித் தரவில்லை; தரப் போவதுமில்லை. பெற்றோர்களாகிய நமக்கு அந்தப் பொறுப்பு நிச்சயமாக இருக்க வேண்டும். நமது அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்தும் தலையாய கடமை நமக்கு இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?