மனித நுண்ணறிவா..., செயற்கை நுண்ணறிவா....?

இன்று உலகில் மிகவும் பிரபலமாகி வருவது ‘செயற்கை நுண்ணறிவு’ (artificial intelligence). எல்லாத் துறைகளிலும் இது பயன்பட ஆரம்பித்திருக்கிறது. விஞ்ஞான முன்னேற்றத்தை மனித குலத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுதான். செயற்கை நுண்ணறிவையும், இயந்திர மனிதனையும் (robot), தேவையான இடங்களில் பயன்படுத்துவதால், மனிதன் மிகவும் பயனடைகிறான்.

நாம் செய்ய வேண்டிய வேலைகளில் மிகவும் அதீத வேகம் வேண்டியதிருக்கும் இடங்களில், robots அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் துல்லியம் (perfection) தேவைப்படுகிறதோ, அங்கும் robots செயல்படுகிறது. மனிதனால் அணுக முடியாத இடங்களிலும் இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. சில வேலைகள் செய்யும் போது மனிதனுக்கு அலுப்பு (bore) ஏற்படும். அதாவது, ஒரே மாதிரியான (திரும்பத் திரும்ப) செயல்பாடுகள் செய்ய வேண்டிய இடங்களில், அலுப்பு என்றால் என்னவென்றே தெரியாத இயந்திரங்களை உபயோகிக்கிறோம். இப்படி, எங்கெங்கு மனிதனை விட இயந்திரங்கள் சிறப்பாக இயங்க முடியுமோ, அங்கெல்லாம் அவைகளை பயன்படுத்துகிறோம். இன்றைக்கு அவைகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால், அந்த இயந்திர மனிதர்களையும், செயற்கை நுண்ணறிவையும் உருவாக்குவது, மனித நுண்ணறிவுதான். “மனித நுண்ணறிவா, செயற்கை நுண்ணறிவா?” என்ற கேள்வி வந்தால் என்னுடைய choice நிச்சயம், மனித நுண்ணறிவுதான். ஏனென்றால், செயற்கை நுண்ணறிவையும், robot-களையும் உருவாக்குவது மனிதன் தான். எப்போதுமே செயற்கை நுண்ணறிவை விட ஒரு படி மேலாகத்தான் இருக்கும் மனித நுண்ணறிவு. இது எனது நம்பிக்கை.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறது. உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களான Roger Federer, Rafael Nadal, Novak Djokovic விளையாடிய சில போட்டிகளை துல்லியமாக ஆராய்ந்து, ஒரு “வழிமுறை” (algorithm) உருவாக்கியிருக்கிறார்கள். அதன்படி, மேற்கூறிய விளையாட்டு வீரர்களில் ஒருவர் போட்டியின் போது, அடுத்து எந்த இடத்தில் பந்தை அடிப்பார் என்று கூற முடியுமாம். ஏற்கனவே அவர்கள் விளையாடிய போட்டிகளிலிருந்து, (செயற்கை நுண்ணறிவு மூலம்) இந்த முடிவை எட்டி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோரும் மிகப் பெரிய விளையாட்டு வீரர்கள். தொடர்ந்து பயிற்சி பெற்று அவர்களது விளையாட்டு உத்திகளை மேலும் மெருகேற்றி வருபவர்கள். இன்று, இந்த வீரர்களுக்கிடையே போட்டி நடந்தால், நிச்சயம் இந்த ஆராய்ச்சியின்படி நடக்காது என்று நான் நினைக்கிறேன். அதனால், இந்த ஆராய்ச்சி பயனற்றது என்பது என் எண்ணம். நீங்கள் என் எண்ணத்திலிருந்து மாறுபடலாம்!

செயற்கை நுண்ணறிவு மேலும் மேலும் பண்படுத்தப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மனிதன் அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்று நிரூபிக்கும் விதமாக, தனது நுண்ணறிவுத் திறனை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு வெறுமனே பாடப் புத்தகங்களை மனனம் செய்யும் முறையை தவிர்த்து, எதையும் ஆராய்ந்து பார்க்கும் திறனை (analytical skill) வளர்க்க பாடுபட வேண்டும். இன்று எந்தத் தகவல் வேண்டுமானாலும் வலைத்தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. எனவே அவைகளை மனதில் நிறுத்த நேரத்தை செலவழிக்காமல், பகுத்தறிந்து செய்யும் செயல் திறனை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தக் காலத்திலும் மனிதன், இயந்திரத்தை விட ஒரு படி மேல்தான் என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?