தவறு செய்பவன் தான் ‘மனிதன்’
நம்மில் எல்லோருமே, நமது வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் (அல்லது பல சமயங்களில்) தவறு செய்கிறோம். இதில் எந்த மனிதனுக்கும் விதிவிலக்கு என்பதே கிடையாது. தவறே செய்யவில்லை என்றால் (ஒரு வேளை), அது ‘இயந்திரமாகத்தான்’ இருக்க வேண்டும். நிச்சயம் ‘மனிதன்’ அல்ல. யார் அதிகமாக தவறு செய்கிறார்கள், யார் குறைவாக என்பதில் தான் வித்தியாசம் இருக்க முடியும். தவறு என்று தெரியாமலே நாம் செய்வதுதான் ‘உண்மையான தவறு’. தெரிந்தே செய்வது, ‘தப்பு’. "தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்” - இது ஒரு பழைய சினிமா பாட்டு. தவறு எப்படி வேண்டுமானாலும் நேரலாம் - நமது அறியாமையினால், மறதியினால், வேலையில் கவனம் செலுத்தாதனால், மனப்பிறழ்ச்சியினால் - இப்படி ஏதாவது ஒன்றால். சில சமயங்களில், நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், பயிற்சியின்மையினால் கூட தவறு நிகழலாம். எப்படி, செய்யும் வேலையில் தவறு நேராமல் தப்பிப்பது? அந்த வேலைக்கான முழுப் பயிற்சி எடுத்துக் கொள்வது, அந்த வேலை பற்றிய முழு விவரமும் தெரிந்து வைத்துக் கொள்வது, மிகக் கவனமாக இருப்பது, நமக்கு ஏதோ ஒரு காரணத்தால் (வயது முதிர்வு அல்லது பிறவிக் க...