எதிர்பார்ப்பு இல்லையென்றால்......, ஏமாற்றமும் இல்லை......

நாம் எப்போது ஏமாற்றமடைகிறோம்? எதையோ எதிர்பார்த்து, அது கிடைக்காமல் போகும் போது. அதை எதிர்பார்க்காமல் இருந்திருந்தால், ஏமாற்றமாவது மிஞ்சும்! எதையுமே எதிர்பாராமல் இருக்கும் போது, ஏதோ ஒன்று (நல்லது) நடந்தால், அதுவே நமக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது; நம்மை சந்தோஷப்படுத்துகிறது. வாழ்வின் முக்கிய நோக்கமே சந்தோஷமாக வாழ்வதுதானே....

ஆனால், எல்லோராலும், எப்போதும், எதையுமே எதிர்பாராமல் இருக்க முடியுமா? இது நடைமுறை சாத்தியமா....? நாம் ஒரு பிரசித்தமான கல்லூரியில் சேர்ந்து படிக்கிறோம். எதற்காக? நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல தேர்ச்சி பெற்று, வாழ்வில் நல்ல முறையில் காலூன்ற வேண்டும் என்றுதானே... அதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு விளையாட்டு வீரர், தன் திறமையை அறிந்து, ஒரு விளையாட்டுப் பயிற்சி மையத்தில் (Sports academy), சேர்கிறார்; எதற்காக? ஒரு பெரிய விளையாட்டு வீரராக ஆக வேண்டும் என்றுதானே.... அவரது எண்ணத்தில் என்ன தவறு இருக்க முடியும்....? அவரது முழுத்திறமையையும், மனப்பூர்வமான கடினமான உழைப்பையும் அதில் செலுத்துகிறார். எப்படி எதிர்பார்க்காமல் இருப்பார்....?

நமது நோக்கம் (aim), நாம் பெரிய அளவில் வர வேண்டும் என்பது. அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எதிர்பார்ப்பது (expectation) தான் தவறு. இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. எந்தச் செயலுக்குமான விளைவு (result) நம் கையில் இல்லை. விளைவை ஏற்படுத்தவோ, மாற்றம் செய்யவோ நம்மால் முடியாது. அதன் கட்டுப்பாடு (control) கடவுளின் (சிலர் ‘இயற்கை’ என்றும் கூறுவார்கள்) கையில் இருக்கிறது. நாம் தேர்வுக்கு மிக நல்ல முறையில் தயார் செய்திருந்தாலும், கடைசி நேரத்தில், நமக்கு ஏதாவது உடல் அசௌகரியம் ஏற்பட்டு தேர்வு சரியாக எழுத முடியாமல் போகலாம். நாம் நெல் விளைய வைத்து, நல்ல முறையில் பாதுகாத்து, சரியான பராமரிப்பில் வைத்திருந்தாலும், அறுவடை சமயத்தில், புயலோ, பெரிய மழையோ, வெள்ளமோ ஏற்பட்டு பயிர் சேதமடையலாம். நமது முயற்சியில் எந்தத் தவறும் இல்லை; ஆனாலும், விளைவு நம் கையில் இல்லை.

எப்படி இந்த ஏமாற்றத்திலிருந்து தப்பிப்பது? நோக்கம் மட்டுமே நமதாக இருக்க வேண்டும். நல்லதே நடந்தால், நமக்கு சந்தோஷம். எதிர்பார்ப்பு இல்லாமலிருந்து, கெட்டது நடந்து விட்டால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். ‘எல்லாம் அவன் செயல்’ என்று நம்ப வேண்டும்; ஏனென்றால் கட்டுப்பாடு நம் கையில் இல்லை.

நாம் சிலரை அதிகமாக நேசிக்கும் போது, அவர்களும் நம்மை அதே போல நேசிக்க வேண்டும் என்று ‘எதிர்பார்க்கிறோம்’. விரும்புவதில் தவறில்லை ஆனால் எதிர்பார்ப்பதற்கு தவறு. எதிர்பார்த்து ஏமாறாமல் இருப்பதே சிறப்பு. அதே மாதிரி வயதான காலத்தில் நமது பிள்ளைகள் நம்மை நல்ல முறையில் கவனித்துக் கொண்டால் நல்லது. அப்படி நடக்கவில்லையென்றாலும், அதை எதிர்கொள்ளத் தயங்கக் கூடாது. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘நம் கடன் பணி செய்து கிடப்பதே’. கடவுளுக்குத் தெரியும் யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டும் என்று. அப்படி நினைத்து வாழ்ந்து வந்தால், ஏமாற்றத்திற்கு இடமேயில்லை. கிடைப்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, நிம்மதியாக வாழலாம்.


Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?