வாழ்க்கை கடினமாக ஆகும் போது.....
வாழ்க்கை கடினமாக மாறும் போது, மன உறுதி உள்ளவர்கள், தடங்கல்களைத் தாண்டி வெற்றி பெறுகிறார்கள். இந்த ‘தீநுண்மி’ காலக்கட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். எத்தனையோ பேர் மிகவும் கஷ்டமான நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். வாழ்வாதாரங்களை இழக்க நேரிட்டது. மன உறுதி இல்லாதவர்கள் ரொம்பவே சிரமப்பட்டார்கள். மற்றவர்களிடம் உதவி நாடி நின்றார்கள். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். ஆனால், அதே சமயம், மன உறுதி கொண்டவர்கள், அந்தத் தடங்கல்களைத் தாண்டி, தைரியமாக வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள். இந்தக் காலக்கட்டம் முடிந்த பின் அவர்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவார்கள்.
பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்த ஒரு பேராசியருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டது; அதாவது அவர் 4 மாணவர்களை கல்லூரியில் சேர அழைத்து வர வேண்டும். பல பொறியியல் கல்லூரிகள் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் போது, அவர் எங்கிருந்து 4 மாணவர்களைக் கொண்டு வர முடியும். பார்த்தார்; வேலையை ராஜினாமா செய்து விட்டு, தனக்கு செய்யத் தெரிந்த ‘நொறுக்குத் தீனி’ ஒன்றை சிறிய அளவில் செய்து, அருகில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்து, பின் அதற்கு வரவேற்பு அதிகமானவுடன், கொஞ்சம் பெரிய அளவில் செய்து தினமும் ரூபாய் 1000 லாபம் பார்த்தார். நிச்சயமாக பேராசிரியரின் சம்பள அளவுக்கு இல்லையென்றாலும், வாழ்க்கையை நடத்திச் செல்ல போதுமானதாக இருந்தது. ”பேராசிரியரான நான் இதை செய்ய வேண்டியதிருக்கிறதே” என்று மனம் கலங்கவில்லை. யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாகச் செய்யும் எந்தத் தொழிலுமே நல்ல தொழில் தான் என்பதைப் புரிந்து கொண்டவர். மீண்டும் நிலைமை மாறும் போது, பேராசிரியர் வேலைக்குத் திரும்புவார்.
ஒரு ஆராய்ச்சி செய்யும் மாணவி, இந்த தீநுண்மி காலத்தில் வேலை இழந்து, காய்கறி விற்கும் வேலை செய்திருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமே....? இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வந்த பின் ஒருவரின் உதவியோடு மீண்டும் தான் பார்த்த ஆராய்ச்சி வேலை கிடைத்து விட்டது. சொந்தத்தில் வாடகைக் கார் ஓட்டி வந்த ஒருவர், பயணிகள் கிடைக்காத காரணத்தினால், அந்த காரையே ‘பிரியாணி’ விற்கும் கடையாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார். இப்படி எத்தனையோ உதாரணங்கள் வலைத்தளங்களில் வலம் வந்தவாறு இருந்தன. இப்படிப்பட்ட மன உறுதி படைத்தவர்களை நாம் மனதாரப் பாராட்ட வேண்டும்.
எதையுமே நேர்மறையாக எடுத்துக் கொண்டு, நிலைமைக்குத் தகுந்த மாதிரி நம்மை மாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இது முழுக்க முழுக்க மனதைப் பொறுத்தது. கஷ்ட காலம் மாறிவிடும் (கழிந்து விடும்); மன உறுதி உள்ளவர்கள் அந்தக் காலத்தை மீறி வெற்றி நடை போடுவார்கள்.
இதற்கு முன்னரும் (பல ஆண்டுகளுக்கு முன்னர்) உலகம் இது மாதிரி கஷ்ட காலத்தை (pandemic situation) சந்தித்திருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியும், மருத்துவமும் முன்னேறாத காலத்திலேயே, மனிதன், அந்த கஷ்டத்தை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறான். இன்று விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது; மருத்துவ வசதிகளும் பெருகி விட்டன. ஏன் இந்த தீநுண்மியிலிருந்து வெற்றிகரமாக மீண்டு பழைய நிலைமைக்கு வர முடியாது. எல்லாவற்றிற்கும் நமது நேர்மறையான மனமே காரணம்.
ஆங்கிலத்தில் ஒரு வாசகம் கூறுவார்கள் - “When the going gets tough, the tough gets going".
Comments
Post a Comment