கர்ம பலன் என்பது உண்மையா....?
கர்மா என்றால் என்ன? ‘கர்மா’ என்ற சொல்லுக்கு செயல் என்று பொதுவான பொருள். நாம் எல்லோரும் வாழ்நாள் முழுவதும் செயல்படுவதற்காகவே உலகில் பிறப்பிக்கப்பட்டவர்கள். எந்த ஒரு செயலுக்கும், அதற்கான பலன் நிச்சயமாக உண்டு. நாம் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம்; அதற்கான பலன், நமக்குக் கிடைக்கும் சம்பளம். நன்றாக வேலை செய்தால், பதவி உயர்வு. மாணவன் பரீட்சை எழுதுகிறான்; அதற்கான பலன் அவன் தேர்ச்சி பெறுகிறான் (இல்லை, தேர்வில் தோல்வி எய்துகிறான்). இப்படி எந்தச் செயலுக்கும் அதற்குண்டான பலன் கண்டிப்பாக உண்டு.
சில செயலுக்கு, அதற்கான பலன் உடனே (அதாவது குறுகிய காலத்தில்) கிடைத்து விடுகிறது. ஆனால், சில செயல்களுக்கு, அதற்கான பலன் சில காலம் கழித்தே கிடைக்கிறது. ஒரு விளையாட்டு வீரர், தான் கவனம் செலுத்தும் விளையாட்டில் முழுமையான திறமை பெற பல ஆண்டுகள் ஆகிறது. சில கல்வித்தகுதிகளும் அப்படித்தான். குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகளைப் பெறுவதற்கு, பல ஆண்டுகள் கடினமான உழைப்பைக் கொடுக்க வேண்டும்.
நாம் சிறு வயதில், நமது பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது, கண்டதைச் சாப்பிட்டு, பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டு விடுகிறோம். அதற்கான பலன் நமக்கு, சில வருடங்கள் கழித்தே தெரிய வருகிறது. அதே மாதிரி கண்களும்; இப்போது சிறு பிள்ளைகள் பல மணி நேரம் வலைத்தளத்திலேயே மூழ்கியிருக்கிறார்கள். இதன் பலன் கூடிய விரைவில் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. நம்மில் நிறைய பேர் நமது உடல் ஆரோக்கியத்திற்கான செயல்களைச் செய்வதில்லை. சரியான உடற்பயிற்சி மேற்கொள்வதில்லை. ‘குப்பை’ உணவுகளை விரும்பி உண்கிறோம். இதன் பலன் வயதான காலத்தில் நமக்குத் தெரிகிறது. அப்போது, கவலைப்பட்டு எந்தப் பயனும் இல்லை.
இதே போன்று நாம் இந்தப் பிறவியில் செய்யும் எல்லாக் கர்மங்களுக்கும், அதற்குண்டான பலன், அடுத்த அடுத்த பிறவிகளில் நமக்கு வந்தே தீரும். நாம் நல்லது செய்தால், அடுத்த பிறவியில் நல்ல பலனைப் பெறலாம்; அதே போன்று தீயதே செய்து வந்தால், நமக்குத் தீங்கு உண்டாவது நிச்சயம். இந்தப் பிறவியில் மிகவும் நல்லவனாக இருப்பவன், பல கஷ்டங்களை அனுபவிக்கிறான்; அதே சமயம் இந்தப் பிறவியில் மிகவும் கெட்டவனாக இருப்பவன், நல்லவற்றையே இப்பிறவியில் அனுபவிக்கிறான். அதற்குக் காரணம் முப்பிறவியின் பலனே அன்றி வேறில்லை. இவையெல்லாம் நமது வேதங்கள் கூறுபவை.
நாம் மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்து விட்டு, கடவுளிடம் எவ்வளவுதான் பக்தி செலுத்தினாலும் அதனால் எந்த பிரயோஜனமுமில்லை. கடவுள் நமது பக்தியை விட, நாம் மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காமல் இருப்பதையே விரும்புவார். யாருக்கும் நன்மை செய்ய முடியவில்லை என்றாலும், யாருக்கும் கெடுதல் நினைக்கக் கூடாது; கெடுதல் செய்யவும் கூடாது. நமது கர்ம பலன் நன்றாகவே இருக்கும்.
Comments
Post a Comment