வாழ்க்கை முழுவதுமே.... முரண்பாடுகள்....!
சமீபத்தில் whatsapp-ல் வந்த ஒரு ‘ஜோக்’குடன் ஆரம்பிக்கிறேன். ஒருவர், ‘மனைவியைக் கையாளுவது எப்படி?’ என்று google-ல் தேடினாராம். Google-ன் பதில், ‘நாங்களும் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்’. இது எப்படி இருக்கு? எல்லாமே தெரிந்து வைத்திருக்கும் என்று நாம் நம்பக் கூடிய google-ஏ இப்படி பதில் சொன்னால்....!
'எல்லா விதிக்கும், விதிவிலக்கு உண்டு’ - இந்த விதிக்கும் சேர்த்துத்தான்...
‘யாருக்கும் அறிவுரை கூறாதே’ - என்பதுவே ஒரு அறிவுரைதான்....
ஒருவன், தனது குடும்பத்திலிருந்த ஒரே உறவான அவனது அம்மாவை ஏதோவொரு காரணத்திற்காக கொலை செய்து விடுகிறான். நீதிபதியிடம் மன்றாடுகிறான், ‘நான் ஒரு அனாதை; என்னை விடுதலை செய்யுங்கள்’.....
’நான் சொன்னவை அனைத்தும் பொய்’ என்று ஒருவர் சொன்னால், என்ன அர்த்தம்? இப்போது சொல்லிய வாக்கியம் (நான் சொன்னவை அனைத்தும் பொய்) என்பதும் பொய்யா? அப்படியானால், அவர் முன்பு கூறியதில் உண்மை இருக்குமோ....?
பாம்பின் விஷத்திலிருந்து தான் ’பாம்பு விஷத்திற்கான முறிவு மருந்து’ தயாரிக்கப்படுகிறது. பிரச்னையும், தீர்வும் ஒரே இடத்திலிருந்து வருகிறது...!
மருத்துவரும், மருந்துக்கடைக்காரரும் எப்போது மகிழ்வார்கள்? நாம் நோய்வாய்ப்படும் போது...!
ஒருவர் முன்னேறிச் சென்றால், நாம் மகிழ்வது........., நாம் வரிசையில் நிற்கும் போது மட்டும் தான்....!
திராட்சைப் பழத்தை எத்தனை நாள் கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும்? ஆனால், அதையே பழரசமாக மாற்றினால் (wine), எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். நாட்கள் செல்லச் செல்ல அதற்கான மதிப்பும் அதிகம்...!
’எனக்கு எதுவும் தெரியாது’ என்று ’எனக்கு நன்றாகவே தெரியும்’..... நாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் படிக்கிறோமோ, அப்பொது நாம் உணர்வோம், ’நமக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று....
ஒருவர் ஒரு புத்தகம் எழுதினார் - ’100 வருஷம் வாழ்வது எப்படி’ என்ற தலைப்பில். அவர் தனது 50-வது வயதில் இறந்து போனார். ஒருவேளை, தனது புத்தகத்தை பாதிதான் படித்தாரோ என்னவோ....!
’எப்படி பணம் பண்ணுவது’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய நபர், தனது புத்தகத்தைப் பிரசுரிக்கப் பணம் இல்லாமல் திணறினாராம்! பதிப்பகத்தார் கூறினாராம், ‘உங்கள் புத்தகத்தை மறுபடியும் நன்றாகப் படியுங்கள்’ என்று...
திருமண பந்தத்தை உறிதிப்படுத்தும் தொழிலில் இருந்த நபர் (marriage counsellor), 2 முறை விவாகரத்து பெற்றவராம்....
‘தற்கொலை தடுப்பு மையத்தில்’ வேலை பார்த்த நபர் (அதாவது தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபரை, அந்த எண்ணத்திலிருந்து விடுபடச் செய்வபவர்), எப்படி இறந்தார் தெரியுமா....? தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்....
பணம் இருந்தால் தான் பணம் பண்ண முடியும். முதலில் எங்கிருந்து அந்த பணம் வரும்....?
எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது தான் நிரந்தரம்.
சோப் செய்வதற்கு, எண்ணெய் தேவை; சிந்திய எண்ணெயை சுத்தம் செய்ய சோப் தேவை.....
நம் மனித வாழ்க்கை இப்படி முரண்பாடுகள் நிறைந்தவை.
(உங்களுக்குத் தெரிந்த முரண்பாடுகளைக் கூறலாமே)
Comments
Post a Comment