’தர்மம்’, மிகவும் சூட்சுமமானது
’தர்மம்’ என்றால் என்ன? நான் படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது இதுதான். மனித தர்மம் என்பது, சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது; இவற்றை எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்வது. எது சரியான செயல்? எது சரியான பாதை? எல்லா நேரங்களிலும் ’ஒரு செயல்’ சரியானதாக இருக்குமா? நாம் செல்லும் ’சரியான பாதை’, எப்போதுமே சரியாகத்தான் இருக்குமா? இல்லை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறுமா? இதை யார் நிர்ணயம் செய்வது? இதைச் சரியாகப் புரிந்து கொள்வதில் தான் தர்மத்தின் சூட்சுமமே அடங்கியுள்ளது. இதற்கென்று ‘அகராதி’ எதுவும் இருக்கிறதா? ‘இல்லை’ என்பதே பதில். நமது புராணங்களையும், இதிகாசங்களையும் ‘வழிகாட்டி’யாக எடுத்துக் கொள்ளலாம். மகாபாரதத்தில் இருந்து சில காட்சிகளால், இதை விளக்க முயற்சிக்கலாம். எப்போதுமே உண்மை தான் பேச வேண்டும்; பொய் பேசக் கூடாது என்பது மனித தர்மமாக கருதப்படுகிறது. சில கொள்ளைக்காரர்கள், ஒரு வழிப்போக்கரைப் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர் ஒரு ஆசிரமத்தின் உள்ளே நுழைந்து கொள்ளைக்காரர்களின் பார்வையிலிருந்து மறைந்திருக்கிறார். அந்த ஆசிரமத்தில் இருந்த முனிவர் இதைப் பார்த்து விடுகிறார். கொள்ளை...