’தர்மம்’, மிகவும் சூட்சுமமானது

’தர்மம்’ என்றால் என்ன? நான் படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது இதுதான். மனித தர்மம் என்பது, சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது; இவற்றை எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்வது.

எது சரியான செயல்? எது சரியான பாதை? எல்லா நேரங்களிலும் ’ஒரு செயல்’ சரியானதாக இருக்குமா? நாம் செல்லும் ’சரியான பாதை’, எப்போதுமே சரியாகத்தான் இருக்குமா? இல்லை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறுமா? இதை யார் நிர்ணயம் செய்வது? இதைச் சரியாகப் புரிந்து கொள்வதில் தான் தர்மத்தின் சூட்சுமமே அடங்கியுள்ளது. இதற்கென்று ‘அகராதி’ எதுவும் இருக்கிறதா? ‘இல்லை’ என்பதே பதில். நமது புராணங்களையும், இதிகாசங்களையும் ‘வழிகாட்டி’யாக எடுத்துக் கொள்ளலாம்.

மகாபாரதத்தில் இருந்து சில காட்சிகளால், இதை விளக்க முயற்சிக்கலாம். எப்போதுமே உண்மை தான் பேச வேண்டும்; பொய் பேசக் கூடாது என்பது மனித தர்மமாக கருதப்படுகிறது. சில கொள்ளைக்காரர்கள், ஒரு வழிப்போக்கரைப் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர் ஒரு ஆசிரமத்தின் உள்ளே நுழைந்து கொள்ளைக்காரர்களின் பார்வையிலிருந்து மறைந்திருக்கிறார். அந்த ஆசிரமத்தில் இருந்த முனிவர் இதைப் பார்த்து விடுகிறார். கொள்ளைக்காரர்கள் அங்கு வந்து அந்த முனிவரிடம் விசாரிக்கும் போது, அவர் உண்மையைச் சொல்லி விடுகிறார். கொள்ளைக்காரர்களிடம் பிடிபட்டு அந்த வழிப்போக்கர், தன் பொருட்களையெல்லாம் அவர்களிடம் இழந்து விடுகிறார். இந்த நிகழ்ச்சியில், அந்த முனிவர், உண்மையே பேசினார். ஆனால், அதன் விளைவு என்ன? ஒரு அப்பாவி மனிதன் தன் பொருட்களையெல்லாம் கெட்டவர்களிடம் இழக்க நேரிடுகிறது. முனிவரின் செயல் தர்மமா, அதர்மமா? நடந்த விளைவை வைத்துப் பார்க்கும் போது, இது அதர்மமே.

உயிர்களைக் கொல்வது அல்லது கொல்விப்பது என்பது பாவம் (அதர்மம்). ஒரு புலி, ஊருக்குள் புகுந்து, கண்ணில் கண்ட மனிதர்களையெல்லாம் தாக்கி, காயப்படுத்தி, சிலரைக் கொல்லவும் செய்கிறது. ஒரு வேட்டைக்காரர், அந்தப் புலியை மறைந்திருந்து கொன்று விடுகிறார். இவர் செய்தது சரியா? தவறா? எந்த உயிரையும் கொல்வது மனிதனைப் பொறுத்த வரை அதர்மமே என்றாலும், போயிருக்கக் கூடிய மேலும் பல மனித உயிர்களைப் புலியிடமிருந்து காப்பாற்றியதால், அவர் செய்தது தர்மமே ஆகும்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர், ஒரு அரசாங்க ஊழியர்தான். அவர் ஒரு உயிரைக் கொல்வதற்குக் கருவியாகப் பயன்பட்டாலும், அவர் செய்தது அதர்மமாகாது.

ஒரு ரிஷி, தனது அன்றைய உணவிற்காக ஒரு வீட்டிற்கு வந்து, ‘பிட்சை’ கேட்கிறார். அந்தக் காலங்களில், ரிஷிகளுக்கு உணவிட வேண்டியது ‘கிரகஸ்தர்களின்’ கடமை. அவர்களைக் காக்க வைக்கக் கூடாது. ஆனால், அந்த வீட்டின் பெண்மணி, சிறிது நேரம் கழித்து வந்து அந்த ரிஷிக்கு உணவிடுகிறார். அதைப் பொறுக்காத ரிஷி, அந்தப் பெண்மணிக்கு சாபமிடப் போகிறார். ஆனால், அந்தப் பெண்மணி, தாமதத்திற்கான காரணத்தைக் கூறுகிறார். ”எனது தலையாய கடமை, வயதான எனது மாமனார், மாமியாரைக் கவனித்து, என் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்வதுவே” என்று கூறுகிறார். அந்தப் பெண்மணியின் செயல் மிகவும் தர்மமான ஒன்று; எனவே அந்த ரிஷியின் சாபம் அந்தப் பெண்மணிக்குப் பலிக்கவில்லை.

‘குருக்ஷேத்திரப் போரில்’, கௌரவர்களைக் கொன்றது, முக்கியமாக, கிருஷ்ண பரமாத்மாவின் யுக்திகளும், தந்திரச் செயல்களுமே. ஏன் யுத்த தர்மத்தைக் கடைப் பிடிக்கவில்லை பகவான்? கௌரவர்கள், பாண்டவர்களுக்கு இழைத்த அதர்மச் செயல்கள் கொஞ்சமில்லை. பாண்டவர்களைத் தீயினால் கொல்லப் பார்த்தது; சூதாட்டத்தின் மூலம் அவர்களது ராஜ்ஜியத்தைப் பறித்து அவர்களைக் காட்டுக்கு அனுப்பியது; திரௌபதியை சபாமண்டபத்தில் அவமானப்படுத்தியது; வனவாசம் முடிந்து பாண்டவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பின், அவர்களுக்குச் சேர வேண்டிய நாட்டின் பங்கை அவர்களுக்குக் கொடுக்க மறுத்தது..... இவைகளுக்குப்  பரிகாரமாகவே பரமாத்மா இப்படிச் செய்கிறார். அதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்கிறார். எனவே பெரிய அதர்மத்தை வென்று, தர்மத்தைக் காக்க, சில உபாயங்களையும், அதர்மமான வழிகளையும் பிரயோகிப்பதில் தவறில்லை என்று சாட்சாத் பகவானே கூறுகிறார்.

எனவே, ‘தர்மம்’, ‘அதர்மம்’ என்பதை பொதுவாக வரையறுத்துச் சொல்ல முடியாது. அந்தந்த சூழ்நிலைக்குத் தக்க இவை அறியப்பட வேண்டும்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?