தலைக்கு வந்தது......., தலைப்பாகையோடு போனது

இந்தப் பழமொழி நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். நம்மை நோக்கி வந்த பாதிப்பு, ஒரு சிறிய பாதிப்போடு (பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல்) போனது என்று நாம் திருப்திப்பட்டுக் கொள்வதற்காக வந்த பழமொழி இது. பாதிப்பு நடக்கும் போது உள்ள சூழ்நிலை, நமக்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்தால் தான் இது சாத்தியம். அல்லது நமது சமயோசித புத்தியினால், இது நடக்க வேண்டும். நாம் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதை அனுபவித்திருப்போம்.

இப்படி ஒரு நிகழ்வு, மகாபாரதத்தில் நடக்கிறது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனுக்கு சாரதியாக (தேரோட்டியாக), பகவான் கிருஷ்ணர் செயல்படுகிறார். தேரோட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. மேலும் பல உபாயங்களையும் லாவகமாக கையாளக் கூடியவர். யுத்தத்தில், மிகப் பெரிய வீரர்களான பீஷ்மர், துரோணாச்சாரியார் இறந்த பிறகு, துரியோதனனின் நண்பனும், அவனால் மிகவும் நம்பப்படுபவனுமான கர்ணன், படைத் தளபதியாக நியமிக்கப்படுகிறான்.

குருக்ஷேத்திரப் போரில், கர்ணனை வென்று அவனது உயிரை மாய்ப்பேன் என்று அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். அதே போல, கர்ணனும், பாண்டவர்களில் அர்ஜுனனை மட்டும் தான் (மற்ற 4 பேரை விடுத்து), போரில் கொல்வேன் என்று தனது தாயான குந்திக்கு சபதம் செய்து கொடுத்திருக்கிறான். (குந்தி தான் தனது தாய் என்ற உண்மை, கர்ணனுக்கு, குருக்ஷேத்திரப் போருக்கு முன்னாலேயே தெரிய வருகிறது). எனவே இருவரும் ஒருவரை ஒருவர் மாய்ப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அந்த சந்தர்ப்பமும் வருகிறது. அர்ஜுனனும், கர்ணனும் நேருக்கு நேர் போர் புரிய ஆரம்பிக்கிறார்கள். அர்ஜுனனைக் கொல்வதற்காகவே கர்ணன் தன்னிடமிருந்த மிகவும் சக்தி வாய்ந்த ‘நாகாஸ்திரத்தை’ பாதுகாத்து வந்திருந்தான். அர்ஜுனன், ஒருமுறை காண்டவ வனத்தை எரித்து அழித்த போது, அதில் இருந்த பாம்புகள் பலவும் இறந்து போயின. ஆனால், ‘அஸ்வசேனன்’ என்ற நாகம் மட்டும் உயிர் பிழைத்து இருந்தது. அர்ஜுனனைப் பழி வாங்கும் எண்ணத்துடன், அந்த அஸ்வசேனன் என்ற பாம்பு கர்ணனின் நாகாஸ்திரத்துக்குள் நுழைந்தது. இது கர்ணனுக்குத் தெரியாது. தகுந்த சமயம் பார்த்து, கர்ணன், அர்ஜுனனின் தலையைக் கொய்வதற்காக, நாகாஸ்திரத்தை, அர்ஜுனனின் தலைக்குக் குறி வைத்தான். அவனுக்குத் தேரோட்டியாக இருந்த ‘சல்லியன்’, அர்ஜுனனின் கழுத்துக்குக் குறி வைக்குமாறு கூறினான். ஆனால் கர்ணனோ, தான் ஒரு முறை வைத்த குறியை மாற்ற மாட்டேன் என்றும், தனது குறி தவறாது என்றும் இறுமாப்புடன், நாகாஸ்திரத்தை, அர்ஜுனனின் தலையை நோக்கி எய்தான். 

அர்ஜுனனுக்குத் தேரோட்டுபவர், பகவான் கிருஷ்ணர் அல்லவா. அவருக்குத் தெரியும் அர்ஜுனனை எப்படிக் காப்பாற்றுவது என்று. தேர்த்தட்டை தனது விரலால் அழுத்தினார். தேர் சிறிது கீழே இறங்கியது. நாகாஸ்திரம், அர்ஜுனனின் தலையில் இருந்த கிரீடத்தைத் தாக்கி வீழ்த்தியது. அர்ஜுனன் உயிர் தப்பினான். அவன் தலைக்கு வந்த அஸ்திரம், தலையில் இருந்த கிரீடத்தை மட்டுமே வீழ்த்தியது. இதனால் தான் ‘தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போனது’ என்ற பழமொழி வந்திருக்கலாமோ....? (இது எனது சந்தேகமே). அஸ்வசேனன் என்ற பாம்பு, அஸ்திரத்திலிருந்து விடுபட்டு, மேலே பயணிக்க ஆரம்பித்தது. கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு அதைக் காண்பித்து, அதை அழிக்கச் சொன்னார். அர்ஜுனன் அதன் மீது ஒரு அம்பை எய்து, அதை இரு துண்டாக்கினான்.

(அந்த சமயத்தில், கர்ணனுக்கு, தான் அடைந்த இரண்டு சாபங்கள் பலிக்கின்றன. ஒரு சாபம் என்னவெனில், அவன் ஒரு முறை வனத்தில் செல்லும் போது, ஒரு சிங்கத்தையும், அதன் அருகில் ஒரு கன்றுக்குட்டியையும் காண்கிறான். சிங்கம் அந்தக் கன்றைக் கொன்று விடக் கூடும் என்று எண்ணி, சிங்கத்தைக் கொன்று விடுகிறான். உண்மையில் அந்தச் சிங்கமானது அந்தக் கன்றின் தாய்ப்பசுதான். இந்திரன் தான் அதை சிங்கமாக உருமாற்றித் தோன்றச் செய்திருந்தான். அந்தப் பசுவின் உரிமையாளரான ஒரு ரிஷி, ‘கர்ணா, நீ எனது பசுவைக் கொன்று, எனக்குப் பாதுகாப்பில்லாமல் செய்ததால், நீ பாதுகாப்பின்றி இருக்கும் போது யுத்தத்தில் கொல்லப்படுவாய்’ என்று சாபமிட்டார்.

மற்றொரு சாபமானது - ஒரு முறை ஒரு சிறுமி, கர்ணனின் குதிரை போட்ட பெரிய சப்தத்தில் பயந்து, தான் கையில் வைத்திருந்த நெய்க் கிண்ணத்தை கீழே போட்டு விட்டாள். வேறு நெய் வாங்கித் தருகிறேன் என்று கர்ணன் கூறியும், அந்தச் சிறுமி, தான் சிந்திய அதே நெய்தான் வேண்டுமென்று அடம் பிடித்தாள். எனவே, நெய் சிந்திய இடத்தில் உள்ள மண்ணை எடுத்து, அதை பிழிந்து கொஞ்சம் நெய்யை அந்தச் சிறுமியிடம் கொடுத்தான். மண்ணைப் பிழிந்ததால், ஏற்பட்ட வலி தாங்காமல், பூமாதேவி, ‘உனது எதிரியைக் கொல்ல சரியான வாய்ப்பு கிட்டும் போது, உனது தேர்ச் சக்கரம் பூமியில் பதிந்து விடும்’ என்று சாபமிட்டாள்). இது போக, உபயோகிக்க வேண்டிய தருணத்தில், பிரம்மாஸ்திரம் மறந்து போகும் என்று பரசுராமர் கொடுத்த சாபமும் கர்ணனுக்கு இருந்தது).

இந்த சாபங்களினால், அர்ஜுனனால், கர்ணன், குருக்ஷேத்திரப் போரில்  வீழ்த்தப்பட்டான்.


Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?