ரகசியம் யாரிடம் தங்குவதில்லை.... ஆண்களிடமா..., பெண்களிடமா.....?

பெண்களிடம் (பொதுவாக) ரகசியம் தங்குவதில்லை என்பது ஆண்டாண்டு காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு கூற்று. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ரகசியம் காக்கும் பெண்களையும் பார்க்கிறோம்; ரகசியம் காக்க முடியாமல் இருக்கும் ஆண்களையும் பார்க்கிறோம். என்னைப் பொருத்தவரை, இதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. ரகசியம் காப்பது என்பது, பாலினத்தைப் பொறுத்தது அல்ல என்பது எனது கருத்து. சரி...., இப்படி ஒரு பதிவு வரக் காரணமாக இருந்த ஒரு நிகழ்ச்சியை ‘மகாபாரதத்தில்’ பார்க்கிறோம்.

பாண்டவர்களின் தாயான குந்திதேவி, தங்கள் அரண்மனைக்கு வந்திருந்த துர்வாச முனிவருக்கு சிறப்பான பணிவிடை செய்கிறாள். அதனால் மகிழ்வுற்ற துர்வாச முனிவர் அவளுக்கு ஒரு வரம் அளிக்கிறார். அந்த வரம் என்னவெனில், ’தெய்வாம்சம் பொருந்திய எவரையும் மனதில் நினைத்து, முனிவர் சொல்லிக் கொடுத்த வரத்தை உச்சரித்தால், குந்திக்கு, அந்த தெய்வாம்சம் பொருந்திய மகன் பிறப்பான்’ என்பது. தனக்கு துர்வாச முனிவரால் அளிக்கப்பட்ட அந்த வரத்தை, பரிசோதித்துப் பார்க்கும் எண்ணத்துடன், சூரிய பகவானை மனதால் நினைத்து, தனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உபயோகித்து, கர்ணனைப் பெற்றெடுக்கிறாள். அப்போது அவள், திருமணமாகாத கன்னிப்பெண். உலகத்திற்குப் பயந்து, கர்ணனை (குழந்தையாகவே) ஆற்றில் விட்டு விடுகிறாள். அவன், ‘அதிரதன்’ என்ற தேரோட்டியால், ஆற்றில் மிதந்து வந்த போது கண்டெடுக்கப்பட்டு, அவனாலும், அவனது மனைவியான ராதையினாலும் வளர்க்கப்படுகிறான்.

குந்திக்கு திருமணமாகி, ஒரு சாபத்தால் அவளது கணவனான ‘பாண்டு’ சீக்கிரமாகவே இறந்து விடுகிறான். வம்சம் தழைப்பதற்காக, தனக்கு துர்வாச முனிவரால் அளிக்கப்பட்ட வரத்தை உபயோகித்து மூன்று மகன்களை குந்தி பெறுகிறாள். தர்மதேவதை மூலம், யுதிஷ்டிரனையும், வாயு பகவான் மூலம், பீமனையும், இந்திரன் மூலமாக, அர்ஜுனனையும் பெற்றெடுக்கிறாள். அதே மந்திரத்தை, பாண்டுவின் மற்றொரு மனைவியான மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்து, மாத்ரி, அந்த மந்திரத்தினால் (அஸ்வினி தேவர்கள் மூலம்), நகுலனையும், சகாதேவனையும் பெற்றெடுக்கிறாள்.

குருக்ஷேத்திரப் போரில், கர்ணன் துரியோதனாதிகள் பக்கம் நின்று, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிடுகிறான். போர் ஆரம்பிக்கும் முன்பே, பகவான் கிருஷ்ணர் மூலமும், தாய் குந்தியின் மூலமும் அவனுக்கு தனது உண்மையான தாய் குந்தி என்று தெரிந்து விடுகிறது. இருப்பினும், செஞ்சோற்றுக்கடன் கருதி, கர்ணன், துரியோதனன் பக்கமே நிற்கிறான். போரில் கர்ணன் இறந்த பின், அவனுக்கு ஈமக்கிரியைகள் செய்யும் பொருட்டு, அந்த நேரத்தில் குந்தி, யுதிஷ்டிரனிடம் உண்மையைக் கூறுகிறாள். அப்போதுதான் பாண்டவர்களுக்குத் தெரிகிறது, கர்ணன் தங்களது மூத்த சகோதரனென்று.

குந்தியால், ரகசியமாக காக்கப்பட்ட இந்த உண்மை முன்பே தெரிந்திருந்தால், தாங்கள் கர்ணனைக் கொன்றிருக்க மாட்டோம் என்று யுதிஷ்டிரன் புலம்புகிறான். ஒரு பெண்ணான தன் தாய் காத்த ரகசியத்தால் விளைந்த விளைவுகளை நினைத்து, அப்போது, தர்மபுத்திரனான யுதிஷ்டிரன், ஒரு சாபமிடுகிறான் - அதாவது, ’இனிமேல், பெண்களிடம் எந்த ரகசியமும் தங்கக் கூடாது’ என்று.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?