வாழ்க்கை குறித்த நமது மனப்பான்மை (attitude) எப்படி இருக்கிறது.....?

வாழ்க்கை குறித்த மனப்பான்மை (attitude towards life) ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மாறுபடக் கூடியது. எல்லோரும், ஒரே மனப்பான்மையில் வாழ்க்கையை அணுகுவதில்லை. ஏனெனில், வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள், கருத்துகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. 'எப்படியும் வாழலாம்' (நமக்கு ஆதாயம் இருக்கும் வரை)...., என்ற மனப்பான்மையுடன் சிலர்; 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று தங்களுக்குத் தாங்களே சில கோட்பாடுகளை வைத்து வாழ்பவர்களும் உண்டு.

மற்றவர்களுக்கு, நம்மால் எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்று நினைத்து வாழ்பவர்கள் உண்டு; அதே சமயம், எனக்கு நல்லது நடக்கும் வரை, யாருக்கு எந்தப் பிரச்னை (என்னால் ஏற்பட்டாலும்) பரவாயில்லை என்று நினைப்பவர்களும் உண்டு. பொதுச் சொத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்று உறுதியோடு இருப்பவர்களும் உண்டு; என் சொத்து பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதும்; எனக்கு மற்றதைப் பற்றிக் கவலையில்லை என்று எண்ணுபவர்களும் உண்டு. மற்றவர்களை ஏமாற்றினாலும் பரவயில்லை, நான் சுகமாக, வசதியாக வாழ வேண்டும் என்ற கொள்கை(!) உடையவர்களும் இருக்கிறார்கள்.

எல்லா ஜீவராசிகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பது மிக மிக நல்ல மனப்பான்மை. எத்தனை பேர் நம்மில் அப்படி இருக்கிறோம்...? வசதியில்லாதவர்களைப் பார்த்தால் ஒரு பார்வை; முகத் தோற்றமோ, உருவமோ சரியில்லாதவர்களைக் கண்டால், ஒரு ஏளனப் பார்வை.... எல்லோருமே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தானே; இதில் ஏற்றத் தாழ்வு எங்கிருந்து வந்தது? யாருடைய மனதையும், அவர்களது நல்ல செயல்களையும் பார்ப்பதே இல்லை; நம்மைப் பொருத்த மட்டில், வெளியே மேலோட்டமாகத் தெரியும் குணாதிசயங்கள் மட்டுமே முக்கியம். தராசின் தட்டு ஒரு பக்கம் இறங்கி, மறுபக்கம் ஏற, ஒரு விநாடி போதும். நிறைய பேர் வாழ்வில் இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். காலத்தின் போக்கை யாராலும் கணிக்க முடியாது. அதற்குள் எத்தனை ஆணவம், கர்வம், இறுமாப்பு...

இந்த மனப்பான்மை குறித்த ஒரு நிகழ்வு ‘மகாபாரதத்தில்’ வருகிறது. குருக்ஷேத்திரப் போர் முடிந்து, யுதிஷ்டிரர் (தருமன்) பதவியேற்ற பிறகு, பகவான் கிருஷ்ணர், தனது நாடான துவாரகைக்குச் செல்லும் வழியில், பாலைவனப் பிரதேசத்தில், ‘உத்தங்கர்’ என்ற ரிஷியைச் சந்திக்கிறார். அவர் நீண்ட நெடுங்காலம் தவத்தில் இருந்ததால், நாட்டு நடப்பு தெரியாமல், ’பாண்டவர்களும், கௌரவர்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்களா’ என்று கிருஷ்ணரைக் கேட்கிறார். பகவான் நடந்ததைக் கூறுகிறார். போருக்குக் காரணம் கிருஷ்ணர் தான் என்ற முடிவுக்கு வந்த ரிஷிக்கு கோபம் வந்து கிருஷ்ணரைச் சபிக்கப் போவதாகக் கூறுகிறார். அதற்கு பகவான், தன்னைச் சபித்தால், ரிஷியின் தவப் பலன் தான் வீணாகும் என்பதை விளக்கி விட்டு, தன்னிடமிருந்து ஒரு வரத்தைப் பெற்றுக் கொள்ளச் சொல்கிறார். அதற்கு உத்தங்கர், தான் எப்போதும் பாலைவனத்திலேயே நாட்களைக் கழிப்பதால், தாகம் எடுக்கும் போது தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்கிறார். கிருஷ்ணரும், தாகம் எடுக்கும் போது தன்னை நினைத்தால், ரிஷிக்கு தண்ணீர் கிடைக்கும் என்று வரம் அருளி விட்டு அங்கிருந்து செல்கிறார்.

ஒரு நாள் ரிஷிக்கு தாகம் எடுத்தவுடன், பகவான் கிருஷ்ணரை நினைக்கிறார். தண்ணீர் தென்படவில்லை; மாறாக, ஒரு மனிதன், மிகவும் கோரமான உருவத்துடன், பல நாள் குளிக்காத உருவத்துடன் தென்படுகிறான். அவன் தோளிலிருந்து, ஒரு தோல் பை தொங்குகிறது; அதிலிருந்து நீர் சொட்டுகிறது. அந்த மனிதன், ரிஷியிடம் கேட்கிறான், ‘தாகமாக இருக்கிறீர் போல...., தண்ணீர் தரவா’? அவனது வெளித் தோற்றத்தில் அருவருப்பு அடைந்து, ‘வேண்டாம்’ என்று கூறி விட்டு, பின்னர் கிருஷ்ணரை நினைத்து முறையிடுகிறார். அங்கே பரமாத்மா தோன்றி, ஏன் அந்த மனிதனிடமிருந்து தண்ணீர் பெற்றுக் கொள்ளவில்லை என்று கேட்கிறார். அதற்கு ரிஷி கோபப்பட்டு, ‘நான் தண்ணீர் கேட்டால், இப்படி ஒரு மனிதனிடமிருந்தா தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வீர்?’ என்று கேட்கிறார். அதற்கு கிருஷ்ணர் பதிலளிக்கிறார். ‘வந்தது வேறு யாருமல்ல; இந்திரன் தான் அது. அவன் கொண்டு வந்தது ‘அமிர்தம்’. உமது பார்வை (attitude) எப்படி இருக்கிறது என்று சோதிக்கவே இந்திரன் அம்மாதிரி உருவத்தில் வந்தான். மகா ரிஷியான நீர், எல்லா உயிர்களையும் சம நோக்கோடு பார்க்கிறீரா என்று சோதிக்கவே அம்மாதிரி தோற்றத்தில் இந்திரன் உமக்கு முன்னால் நின்றான். நீர் சோதனையில் தோற்று விட்டீரே’. தன் தவறை உணர்ந்த உத்தங்கர் அதற்காக வருந்தினார். அதன் பின்னர், உத்தங்கர், தாகம் எடுக்கும் போது கிருஷ்ணரை நினைத்தால், ஒரு மழை மேகம் தோன்றி அந்த இடத்தில் மழை பொழியும் என்று வாக்களித்து விட்டு, பகவான் அங்கிருந்து மறைந்தார். 

நமது இதிகாசங்களில், நமது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை படிப்பினைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?