தமிழைக் கொன்றோம் - யார் தவறு....?

’தமிழைக் கொன்றோம்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் ஒரு ‘whatsapp' பதிவைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து சில பகுதியைக் கீழே தந்திருக்கிறேன். எனது பார்வையில், ‘தமிழை மறந்தோம்’ என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மனைவியை ஒய்ஃப் என்றோம் 

வாழ்க்கையை லைஃப் என்றோம் 

கத்தியை நைஃப் என்றோம் 

புத்தியை புதைத்தே நின்றோம் !


அத்தையை ஆன்ட்டி என்றோம்

அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்

கடமையை டுயூட்டி எனறோம்

காதலியை பியூட்டி என்றோம்!

’தமிழைக் கொன்றோம்’ என்பதிலிருந்தே, அந்தப் பதிவை எழுதியவர், பழியை வேறு யார் மீதும் போடாமல், எல்லோரது தவறாக ஏற்றுக் கொண்ட பண்புக்கு நன்றி. நம் எல்லோருக்குமே இந்தத் தவறில் பெரிய பங்கு இருக்கிறது. இந்தத் தவறு ஏன் ஏற்பட்டது? இதைச் சற்று யோசித்துப் பார்த்தால், சில உண்மைகள் புரியும்.

முக்கியமான தவறு - சமுதாய மாற்றம். (இவ்வாறு ஏற்படும் சமுதாய மாற்றத்தைத் தவிர்க்க முடியாது. இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்). ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் வளர்க்க முடியாத சூழ்நிலை. ஒரு பிள்ளையுடன் நிறுத்திக் கொள்ளும் போது, ‘நாம் பட்ட கஷ்டங்களை நம் பிள்ளை அனுபவிக்கக் கூடாது’ என்று நினைக்கிறோம். எப்பாடு பட்டாலும், எல்லா வசதிகளையும் செய்து தர எண்ணுகிறோம். அடுத்த வீட்டுப் பிள்ளையுடன் நம் பிள்ளையை ஒப்பீடு செய்கிறோம். இந்தச் சூழ்நிலையில், வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஆங்கில வழிக் கல்வி’ நிலையங்களில் பிள்ளையைச் சேர்த்து படிக்க வைக்கிறோம். அதையும் மிகவும் பெருமையுடன் எல்லோரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறோம். அந்தப் பிள்ளை வீட்டிற்கு வந்து, அம்மாவை mummy என்றும், அப்பாவை daddy என்றும் அழைப்பதைப் பெருமையுடன் பார்க்கிறோம். வசதியில் கீழ் நிலையில் உள்ளவர்கள் கூட, கடன் பட்டாவது, பிள்ளையை ஆங்கில வழிக் கல்விக்கூடங்களில் சேர்க்கிறார்கள். ஒரு சிலர் தவிர, அநேகமாக, நாம் எல்லோருமே இந்தத் தவறைச் செய்திருப்போம் என்றே நினைக்கிறேன்.

ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற அளவில் கற்றுக் கொள்வது மிகவும் நல்லது. பிற்காலத்தில், வேலைவாய்ப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், அதன் மூலம் தான் எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டும் என்று அவசியமில்லை. இன்றைக்கு வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்த தமிழர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் எல்லோரும் தமிழ்வழிக் கல்வி கற்றவர்களாகவே இருப்பார்கள்.

இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால் நமக்கு மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கும். முழுக்க முழுக்க ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதித்தான் விளம்பரம் செய்கிறார்கள். நமது பிள்ளைகளுக்கும் அந்த ஆங்கிலச் சொற்கள்தான் தெரியும்; அதையே தமிழில் சொன்னால் புரியாது. நாம் அந்த அளவுக்குப் பழக்கப்பட்டு விட்டோம். விளம்பரத்தில், மிகச் சிறந்த ’ப்ரேக்ஃபாஸ்ட்’ என்கிறார்கள். ஒரே ’வாஷில்’ என்று வேறொரு விளம்பரம் சொல்கிறது. ’டாலர்’, ’ஷார்ப்பர்’, ’ஸ்ட்ராங்கர்’ என்று ஒரு ஊட்டச்சத்து உணவின் விளம்பரம். ஒரு பால் விளம்பரம் - ..... மில்க் - ஆல்வேஸ் ஃப்ரெஷ். இந்த வார்த்தைகளைத் தமிழில் சொன்னால், நமது குழந்தைகளுக்குப் புரியுமா....?

நமது குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களில் படிக்க வைத்தாலும், வீட்டில் தமிழிலேயே பேச வேண்டும் என்று நமக்குள்ளேயே ஒரு சுய கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு இன்று சாதாரணமாக ஆங்கிலத்தில் புழக்கத்தில் இருக்கும் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது பெற்றோர்களின் கடமை. வேறு யாராவது இதைச் செய்வார்கள் என்று நினைத்தால், ஏமாந்துதான் போவோம். ஔவைக்கும், திருக்குறளுக்கும், பாரதிக்கும் கொடுத்த முக்கியத்துவத்தைப் படிப்படியாக மறந்து வருகிறோம். இந்தப் பொக்கிஷங்களில் இல்லாத வாழ்க்கைத் தத்துவங்கள் வேறு எங்கே கிடைக்கும்....? பள்ளிகள் வியாபாரத் தலங்களாக மாறி, பல வருடங்கள் ஆகி விட்டன. நாம் தான் நமது பிள்ளைகளுக்கு, வீட்டிலேயாவது இவைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இன்றைய தலைமுறைக்கே தமிழ் தடுமாறுகிறது என்றால், அடுத்த தலைமுறையைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. இவர்களுக்குத் தமிழ் தெரிந்தால்தானே அவர்களது பிள்ளைகளுக்கு நாளை தமிழ் கற்றுக் கொடுக்க முடியும்! நம்மால் முடிந்த அளவு இதை இப்போதே சரி செய்யப் பார்க்க வேண்டும். இல்லையேல், வரும் காலம் கேள்விக்குறிதான்....

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

No expectation..., no disappointment....

Are we in for a shock...?